Published:Updated:

`கிட்ஸ்களின் வீட்டுப்பாடத்துக்கு உதவி செய்ய விரும்புகிறேன்!’ - கனடா பிரதமரின் ஆசிரியர் என்ட்ரி

ஜஸ்டின் ட்ரூடோ
ஜஸ்டின் ட்ரூடோ

``நீங்கள் சவால்களையோ அல்லது சிக்கல்களையோ எதிர்கொண்டிருந்தால், உண்மையில் அது மிகவும் கடினமானதாக நீங்கள் உணர்ந்தால், உங்களுக்கு கொஞ்சம் கூடுதலாக உதவி தேவைப்பட்டால் எனக்கு தெரியப்படுத்துங்கள்” - ஜஸ்டின் ட்ரூடோ

கொரோனா வைரஸால் உலகமே திணறிவருகிறது. பாதிக்கப்பட்ட உலக நாடுகள், இந்த வைரஸ் பிடியிலிருந்து விடுபட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா உள்ளிட்ட சில நாடுகளில் நாளுக்குநாள் பாதிப்பு அதிகமாகிவருகிறது. கொரோனா பரவாமல் இருக்க, தனிமனித இடைவெளி முக்கியமானதாகக் கருதப்படுவதால், இந்தியா உட்பட பல நாடுகளிலும் ஊரடங்கு அமலில் இருந்துவருகிறது. இதனால் கல்வி, பொருளாதாரம் என அனைத்து துறைகளும் பாதிப்படைந்து, மக்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்துவருகின்றனர். எனினும், சில நாடுகளில் வீடியோ கான்ஃபரன்ஸிங் வழியாக மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறுகின்றன. இந்நிலையில் கனடா பிரதமர், மாணவர்களுக்கு கல்வி சார்ந்த உதவிகளைச் செய்ய விரும்புவதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அரசியலுக்கு வருவதற்கு முன்பு பல்வேறு பணிகளில் ஈடுபட்டிருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவ்வகையில், ட்ரூட்டோ ஆசிரியராகவும் இருந்துள்ளார். இவர் பட்டப்படிப்பு முடித்த பிறகு, பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள வான்கூவர் எனும் பகுதியில் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். அவர், கணிதம், பிரெஞ்ச், நாடகம் போன்ற பாடங்களை பள்ளிகளில் கற்பித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த, கனடாவிலும் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நெருக்கடியான சூழலில், மக்களுக்கும் சுகாதாரப் பணியாளர்களுக்கும் பயன்படும் வகையில் பல்வேறு திட்டங்களையும் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளையும் ஜஸ்டின் ட்ரூடோ எடுத்துவருகிறார். இதையடுத்து, தனது கற்பிக்கும் திறனைப் பயன்படுத்தி, வீட்டில் இருந்து படிக்கும் மாணவர்களுக்கு அவர்களது வீட்டுப்பாடங்களைச் செய்ய தான் உதவி செய்யப்போவதாக முடிவுசெய்துள்ளார்.

`சின்ன உதவியாவது பண்ணணும்’- 7 ஆண்டுகளுக்குப் பின் மருத்துவர் பணிக்குத் திரும்பும் அயர்லாந்து பிரதமர்

இதுதொடர்பாக ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ``ஹே கிட்ஸ், நாம் எல்லோரும் இப்போது கடினமான நேரத்தை அனுபவித்துக்கொண்டிருக்கிறோம் என்பது எனக்குத் தெரியும். சமையலறையின் மேசையில் அமர்ந்து, நீங்கள் உங்களது வீட்டுப்பாடங்களைச் செய்வது என்பது அவ்வளவு எளிதான விஷயமாக இருக்காது. நாடு முழுவதும் உள்ள பெற்றோர்கள் மிகச் சிறப்பான ஆசிரியர் பணிக்கு தங்களது பாராட்டுகளை வெளிப்படுத்தியுள்ளனர். எனவே, ஒரு ஆசிரியராக நான் அவர்களுக்கு உதவ விரும்புகிறேன். நீங்கள் சவால்களையோ அல்லது சிக்கல்களையோ எதிர்கொண்டிருந்தால், உண்மையில் அது மிகவும் கடினமானதாக நீங்கள் உணர்ந்தால், உங்களுக்கு கொஞ்சம் கூடுதலாக உதவி தேவைப்பட்டால் எனக்கு தெரியப்படுத்துங்கள்” என்று கூறியுள்ளார். மாணவர்கள், தங்களது சந்தேகங்களைப் பதிவிட #CanadaHomeworkHelp என்ற ஹேஷ்டேக்கையும் அறிமுகப்படுத்தியுள்ளார்.

ஜஸ்டின் ட்ரூடோ
ஜஸ்டின் ட்ரூடோ
vikatan

தொடர்ந்து அவர் பேசுகையில், ``நானும் எனது நண்பர்களும் உதவி செய்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். ஏனெனில், ஒன்றாக சேர்ந்து இதைச் செய்வதன்மூலம் இலக்கை அடையப் போகிறோம்” என்று தெரிவித்துள்ளார். மாணவர்களுக்காக வெளியிட்ட அந்த வீடியோவின் கேப்ஷனில், ``ஹே பேரன்ட்ஸ், வீட்டுப்பாடம் செய்வது தொடர்பாக உங்கள் குழந்தைகள் சிக்கலை எதிர்கொண்டால், இந்தச் செய்தியை அனுப்ப தயக்கம் தெரிவிக்க வேண்டாம். ஏனெனில், ஒரு ஆசிரியராக நான் உதவி செய்ய விரும்புகிறேன். இந்த ட்வீட்டுக்கு ரிப்ளை செய்வதன் வழியாகவோ #CanadaHomeworkHelp என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தியோ அந்தக் கடினமான கேள்விகளை எனக்கு தெரியப்படுத்துங்கள். என்னால் என்ன செய்ய முடியும் என்பதை நான் பார்க்கிறேன்” என்று கூறியுள்ளார். ட்ரூடோவின் இந்த முயற்சிக்கு நெட்டிசன்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர்.

`தனிமையில் இருப்பது எளிதல்ல… ஆனால்!’ - கொரோனாவில் இருந்து மீண்ட ட்ரூடோ மனைவி வேண்டுகோள்
அடுத்த கட்டுரைக்கு