கனடாவைச் சேர்ந்த 30 வயது இளைஞர் ஒருவர், `தொழில்முறை அரவணைப்பாளர் (Professional Cuddler)’ பணியை கையில் எடுத்துள்ளார். தன்னுடைய ஒரு மணி நேர பணிக்கு இந்திய மதிப்பில் 7,000 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயித்துள்ளார். இந்த தொழில்முறை அரவணைப்பாளர் பணியில் தான் வழங்கும் சேவைகள் மக்களுக்கு ஒரு `ஃபீல் குட்’ உணர்வை ஏற்படுத்துவதாக அவர் கூறுகிறார்.

தற்போதைய காலத்தில் சமூக ரீதியாக ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இல்லாமல் இருக்கின்றன சில பணிகள். உதாரணமாக, ஆபாச வலைதளங்களைப் பார்த்து தரவுகள் எடுத்து சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்குக் கொடுப்பது, குழந்தைகளுக்குப் பெயர் தேர்ந்தெடுத்துக் கொடுப்பது போன்ற பணிகள் மூலமெல்லாம் இப்போது வருமானம் ஈட்டுகின்றனர் பலர். அது போலவே, அரவணைப்பதில் நிபுணத்துவம் பெற்ற தான், அதையே தனக்கு வருமானம் தரும் பணியாக மாற்றியுள்ளதாகக் கூறிகிறார், கனடாவைச் சேர்ந்த ட்ரவர் ஹூட்டன் என்ற 30 வயது இளைஞர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ட்ரவர், ’Treasure' என்ற பெயரில் தன்னை குறிப்பிட்டு, இந்தத் தொழில்முறை அரவணைப்பாளர் பணியை மேற்கொள்கிறார். இந்த தெரபியானது மனிதர்களை அவர்களது கடினமான சூழல்களில் இருந்து வெளியேற்றி, உறவுகளை மேம்படுத்துகிறது என்கிறார் அவர். மேலும், `இந்த அரவணைப்பாளர் பணியில் ஆறுதல் வார்த்தைகள், அணைப்புகள் என மன அமைதிக்கான அனைத்தும் கிடைக்கும். என்றாலும், இதை சிலர் பாலியல் தொழில் போல தவறாகப் புரிந்துகொள்கின்றனர். நான் `மனித தொடர்புகள் (Human connections)’ பற்றிய நீண்ட ஆராய்ச்சிப் பின்னரே இந்தப் பணியை ஆரம்பித்துள்ளேன்' என்கிறார்.

மேலும் அவர் கூறுகையில், `மக்களுக்கு முன், பின் தெரியாத ஒருவர் தன்னை அரவணைப்பதில் ஏற்பு இருக்காது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். என்னிடம் வரும் முன் அவர்கள் தங்களிடம் தாங்களே, `எந்த வேலையும் செய்யாமல், ஒருவரால் அன்பு காட்டப்பட, அக்கறை காட்டப்பட, அரவணைக்கப்பட நமக்கு ஒரு மணி நேரம் இருக்கிறதா? அது நம்மை எவ்வாறு உணரவைக்கும்?’ என்று கேட்டுக்கொள்ள வேண்டும்’ என்கிறார்.
கோவிட் சூழலால் சமூக இடைவெளி, தனிமைப்படுத்துதல் போன்றவை ஏற்படுத்தப்பட்ட காலகட்டத்தில், மனிதருக்கு மனிதர் தொடுதல் இல்லாமல் மக்களின் மனநலம் பாதிக்கப்பட்டதாக மருத்துவ அறிக்கைகள் அப்போது தெரிவித்தன.

இது பற்றி ட்ரஷர் கூறும்போது, ``அன்பான தொடுதல் மனித தேவைகளில் ஒன்று. தெரபிக்கு முன்னதாக நானும் வாடிக்கையாளரும், இதன் வழிமுறைகளைப் பற்றி கலந்துரையாடுவோம். இந்தத் தொடர்பு `நான் செக்ஷுவல் (Non Sexual)'. தெரபியின்போது அவர்கள் எப்படி உணர்கிறார்கள், என்ன விரும்புகிறார்கள் என்பதைக் கேட்டறிந்தபடி இருப்பேன். அவர்கள் பாதுகாப்பாகவும் அமைதியாகவும் உணர என்ன தேவை என்று பார்த்து வழங்குவேன்’’ என்கிறார் ட்ரஷர்.
இதுபோல் இப்போது பல தொழில்முறை அரவணைப்பாளர்கள் உருவாகிவருகிறார்கள்.