Published:Updated:

கொரோனா:`சீனா முதலில் எச்சரிக்கவில்லை; நாங்கள்தான் அறிவித்தோம்!’ - WHO

உலக சுகாதார நிறுவனம்
உலக சுகாதார நிறுவனம்

``புதுப்பிக்கப்பட்ட தகவலில், சீனாவில் உள்ள உலக சுகாதார அமைப்பின் அலுவலகம்தான் டிசம்பர் 31-ம் தேதி, நிமோனியா பரவுவதாக அறிவித்தது” - WHO

கொரோனா வைரஸ், சீனாவில் உள்ள வுஹான் சந்தைப் பகுதியில் தோன்றியதாகக் கருதப்படுகிறது. சீனாவில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்திய இந்த வைரஸ், உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளிலும் பரவி கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

சீனாவைவிட அமெரிக்கா, பிரேஸில், ரஷ்யா, இந்தியா, இத்தாலி, ஸ்பெயின், இங்கிலாந்து எனப் பல நாடுகள் வைரஸால் அதிக அளவில் பாதிப்படைந்து, பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறிவருகின்றன. இந்த விவகாரத்தில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சீனாவை கடுமையாக விமர்சித்துவந்தார். சீனாவுக்கு ஆதரவு அளிப்பதாகக் கூறி உலக சுகாதார அமைப்புக்கு வழங்கிவந்த நிதியையும் அமெரிக்கா நிறுத்துவதாக அறிவித்தது. உலக சுகாதார அமைப்பு, அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையே, தொடர்ந்து வார்த்தைப் போர்களும் நடந்துவந்தன. இந்த நிலையில், உலக சுகாதார அமைப்பு கொரோனா நெருக்கடி தொடர்பான தனது ஆரம்பகட்ட அறிக்கையை புதுப்பித்துள்ளது.

சீனா - கொரோனா
சீனா - கொரோனா
AP

சீனாவுடன் ஆரம்ப காலத்தில் மேற்கொண்ட தகவல்தொடர்புகள் பற்றிய டைம்லைன் ஒன்றை உலக சுகாதார அமைப்பு, கடந்த ஏப்ரல் 9-ம் தேதி வெளியிட்டது. அதன்படி, ஹூபே மாகாணத்தில் உள்ள வுஹான் நகராட்சியின் சுகாதார ஆணையம், கடந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி, நிமோனியா நோய் பாதிப்பு குறித்து பதிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியானது. ஐ.நா சுகாதார நிறுவனம், இதை யார் அறிவித்தது என்று குறிப்பிடவில்லை. உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ், கடந்த ஏப்ரல் 20-ம் தேதி அன்று செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில் பேசும்போது, சீன அதிகாரிகள் அறிக்கைகளை அனுப்பினார்களா அல்லது வேறு யாராவது அறிக்கையை அனுப்பினார்களா என்பதைக் குறிப்பிடாமல், கொரோனா தொடர்பான முதல்கட்ட அறிக்கை சீனாவிலிருந்து வந்தது என்று கூறினார்.

`அறிகுறிகளற்ற தொற்றாளர்கள் மூலம் கொரோனா பரவுமா?' - உலக சுகாதார அமைப்பு சொல்வதென்ன?

இந்த நிலையில், தற்போது உலக சுகாதார அமைப்பு தகவல்களைப் புதுப்பித்துள்ளது. அதில், சீனாவில் உள்ள உலக சுகாதார அமைப்பின் அலுவலகம்தான் டிசம்பர் 31-ம் தேதி நிமோனியா பரவுவதாக அறிவித்தது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த நோய் பரவுவதற்கான காரணங்கள் தெரியவில்லை என்றும் கூறியிருந்தது.

இதுதொடர்பான விளக்கங்களை உலக சுகாதார அமைப்பு, சீன அதிகாரிகளிடம் ஜனவரி 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் இரண்டு முறை கேட்டுள்ளது. இதனையடுத்து, ஜனவரி 3-ம் தேதி தகவல்களை சீன அதிகாரிகள் வழங்கியுள்ளனர். இதனால், சீன அரசு முதலில் வைரஸ் பரவுவது தொடர்பான தகவல்களை வெளியில் தெரிவிக்கவில்லை என்றும் நாங்கள்தான் தகவல்களை வெளியிட்டோம் என்றும் உலக சுகாதார அமைப்பு தற்போது கூறியுள்ளது.

டெட்ரோஸ்
டெட்ரோஸ்

உலக சுகாதார அமைப்பின் அவசரகால இயக்குநர் மைக்கேல் ரியான், கடந்த வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசுகையில், ``அபூர்வமாக சில விஷயங்கள் நடக்கும்போது அதனை அதிகாரபூர்வமாக சரிபார்க்க, நாடுகளுக்கு 24 முதல் 48 மணிநேரம் ஆகும். இதனையடுத்தும், நாடுகள் குறிப்பிட்ட அந்த விஷயம் தொடர்பான தன்மை அல்லது காரணம் குறித்த கூடுதல் தகவல்களை அமைப்புக்கு வழங்க வேண்டும். உலக சுகாதார அமைப்பு, அறிக்கை தொடர்பான விஷயங்களைக் கேட்டவுடன், சீன அதிகாரிகள் உடனடியாக அலுவலகத்தைத் தொடர்பு கொண்டனர்” என்று தெரிவித்தார்.

எனினும், வைரஸ் தோற்றம் மற்றும் பரவல் தொடர்பான விஷயங்கள் மர்மமாகவே இருப்பதாலும், உலக நாடுகளின் அழுத்தத்தாலும் உலக சுகாதார அமைப்பு சீனா மீது விசாரணைகளை மேற்கொள்ள நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆரம்பம் முதல் முழுமையான ஒரு விசாரணையை மேற்கொள்ள, நிபுணர்கள் குழு ஒன்று அடுத்த வாரம் சீனாவுக்கு செல்ல தயாராக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

`ஹெச்.ஐ.வி போலதான் கொரோனாவும்; வாழப் பழகிக்கொள்வோம்’ - உலக சுகாதார அமைப்பு
அடுத்த கட்டுரைக்கு