Published:Updated:

`கொரோனாவால் வாழ்க்கையின் நாள்கள் மாறத் தொடங்கின!’ - சீன சூழலை விவரிக்கும் இந்திய மாணவர்

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

ஜனவரி 23-ம் தேதி வரை சுதந்திரமாகத் திரிந்தோம். சந்தைகளுக்கும் நண்பர்களின் வீடுகளுக்கும் சென்றோம். ஆனால், நகரம் முடக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதும் எங்களின் அன்றாட இயக்கமே தடைபட்டது” என நினைவுகூர்ந்தார்.

சீனாவின், வுகான் பகுதியிலிருந்துதான் கொரோனா பரவத் தொடங்கியதாக நம்பப்படுகிறது. அதிகளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அந்நகரம் முடக்கப்பட்டது. இதையடுத்து வுகானில் இருக்கும் மற்ற நாட்டு மக்களையும் அந்தந்த நாட்டு அரசாங்கங்கள் மீட்டன.

இந்தியாவும் கடந்த சில நாள்களுக்கு முன்பு வுகானிலிருந்த மாணவர்கள் உட்பட பலரையும் மீட்டு வந்தது. தற்போது, மீட்கப்பட்ட மாணவர்களில் ஒருவர் வுகானில் தான் தங்கியிருந்தது வரை இருந்த சூழலை விளக்கியுள்ளார்.

சீனா செல்லும் ஏர் இந்தியா விமானம்
சீனா செல்லும் ஏர் இந்தியா விமானம்

மகராஷ்டிராவைச் சேர்ந்த ஆஷிஷ் குர்மே என்பவர் வுகான் அருகிலுள்ள உள்ள மருத்துவ பல்கலைக்கழகம் ஒன்றில் எம்.பி.பி.எஸ் படித்து வருகிறார். சீனாவின் நிலையைக் குறித்து ஊடகங்களிடம் அவர் பேசும்போது, ``எங்களுடைய பல்கலைக்கழகம் கடந்த ஆண்டு டிசம்பர் 7-ம் தேதி முதல் ஜனவரி 3-ம் தேதி வரை தேர்வுகளை நடத்த இருந்தது.

முதல் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபரின் வழக்கு டிசம்பர் 8-ம் தேதி பதிவானது. ஆனால், அங்கிருந்த எங்களுக்கு ஜனவரி முதல் வாரம்தான் தெரிய வந்தது. ஆரம்பத்தில் நகரத்தில் எந்தவிதமான தடையும் வழங்கப்படவில்லை. ஆனால், வைரஸ் அதிகளவில் பரவத் தொடங்கியது பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது” என்றார்.

`உதவும் வெப்பநிலை?; தினமும் 9,000 அழைப்புகள்..!' -கொரோனா வைரஸை இந்தியா எப்படி எதிர்கொள்கிறது?

கொரோனா பரவுவது தொடர்பாகப் பல்வேறு வதந்திகள் உலகம் முழுவதும் சுற்றி வருகிறது. இதைக் குறிப்பிட்டு பேசிய ஆஷிஷ், ``வுகானின் சாலைகளில் இறந்தவர்களின் உடல்கள் கிடக்கும் வீடியோக்கள் போலியானவை. நான் இந்தியாவுக்கு வந்த பிறகே அவற்றைப் பார்த்தேன். ஹூபே மாகாணத்தில் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த பலரின் வாழ்க்கையும் மெதுவாக மாறத் தொடங்கியது.

ஜனவரி முதல் வாரத்தில் ஒவ்வொருவரின் உடல் வெப்பநிலையையும் கண்காணிக்கும் பணியை அரசு தொடங்கியது. அம்மாதம் 23-ம் தேதி வரை சுதந்திரமாக திரிந்தோம். சந்தைகளுக்கும் நண்பர்களின் வீடுகளுக்கும் சென்றோம். ஆனால், நகரம் முடக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதும் எங்களின் அன்றாட இயக்கமே தடைபட்டது” என நினைவுகூர்ந்தார்.

``குடியிருக்கும் இடங்களைவிட்டு வெளியேற அனுமதி மறுக்கப்பட்டது. எங்களுடைய பேராசிரியர்கள் எங்களது தேவைகளைக் கவனித்துக்கொண்டனர். சீன குடிமக்கள் எங்களது வளாகத்துக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. மருத்துவ மாணவர்கள் வீடுகளுக்குத் திரும்ப ஆலோசித்துக் கொண்டிருந்தனர். எங்களுக்கு மாஸ்க்குகள் வழங்கப்பட்டன. எங்களுடைய உடல்நிலை தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டது. நாங்கள் இந்தியாவுக்குத் திரும்ப நினைத்தோம். ஆனால், விமானநிலையமும் மூடப்பட்டிருந்தது” என்று அங்கிருந்த நாள்களை விவரித்தார்.

வுகான் பல்கலை
வுகான் பல்கலை

``இந்திய தூதரகம் புறப்படுவதற்கான ஏற்பாடுகளைச் செய்தது” என்றவர், ``பல்கலைக்கழக வளாகத்துக்குள் ஒரு பேருந்தைக் கொண்டு வந்து விமான நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். அரசு அதிகாரிகளும் காவல்துறை அதிகாரிகளும் சாலைகளில் நின்று ஒவ்வொருவரின் அசைவையும் கண்காணித்தனர். எங்களிடம் சுமார் 30 கேள்விகள் கேட்கப்பட்டன. பின்னர், விமான நிலையத்துக்கு அனுப்பப்பட்டோம்” என்றும் குறிப்பிட்டார்.

இந்தியாவில் சுமார் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருந்த ஆஷிஷ் அந்தக் கண்காணிப்பு முடிந்ததும் லடூரில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பியுள்ளார். ``15 வருடங்களுக்கு முன்னர் சீனாவைத் தாக்கிய சார்ஸ் என்ற வைரஸால் ஏற்பட்ட இழப்புகளை ஒப்பிடும்போது கொரோனாவால் ஏற்பட்டுவரும் இழப்பு குறைவுதான்” என்றும் கூறியுள்ளார்.

Credits : NDTV

`குணமாகி திரும்பியவர்களுக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு?!- தொடர் பீதியில் சீன மக்கள்
அடுத்த கட்டுரைக்கு