உலகளவில் அதிக விளம்பரங்களை செய்யும் நிறுவனங்களில் கோகா கோலா நிறுவனமும் ஒன்று. சமூக ஊடகங்களிலும் அதிகளவில் விளம்பரங்களைச் செய்துவருகிறது. இந்தநிலையில், தற்போது கோகோ கோலா நிறுவனம் தங்களது விளம்பரத்தைச் சமூக ஊடகங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்களில் குறைந்தது 30 நாள்களுக்கு நிறுத்திவைப்பதாக அறிவித்துள்ளது.
ஆன்டி டிஃபமேஷன் லீக், என்ஏஏசிபி உள்ளிட்ட அமைப்புகள் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராமில் #StopHateForProfit என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி இனவெறி, வெறுப்பு மற்றும் வன்முறையைத் தூண்டும் விளம்பரங்களுக்கு எதிராகக் குரல் கொடுத்து வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு கோகோ கோலா நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், கோகோ கோலா நிறுவனம் ஒருபடி மேலே சென்று ட்விட்டர், யூடியூப் மற்றும் பிற டிஜிட்டல் தளங்களையும் கருத்தில்கொண்டு நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாகக் கூறியுள்ளது.

கோகோ கோலா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜேம்ஸ் குவின்சி இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ``கோகோ கோலா நிறுவனம் உலகளவில் அனைத்துச் சமூக ஊடகங்களிலும் ஜூலை 1-ம் தேதி முதல் குறைந்தது 30 நாள்களுக்குக் கட்டண விளம்பரங்களை இடைநிறுத்தம் செய்கிறது. எங்களது விளம்பரங்களின் தரங்களையும் கொள்கைகளையும் மறுபரிசீலனை செய்ய இந்த நேரத்தை நாங்கள் எடுத்துக்கொள்கிறோம்.
வெறுப்பு, வன்முறை மற்றும் தேவையில்லாத சில விஷயங்களை அகற்ற எங்களுடன் இணைந்து சமூக ஊடகங்களின் நிர்வாகிகளும் செயல்பட வேண்டும் என எதிர்பார்க்கிறோம். அதிகளவிலான பொறுப்பு மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை நாங்கள் எதிர்பார்க்கிறோம். உலகில் இனவெறிக்கு இடமில்லை. அதேபோல, சமூக ஊடகங்களிலும் இனவெறிக்கு இடமில்லை” என்று தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
StopHateForProfit!
கோகோ கோலா இத்தகைய அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பாகவே லிப்டன் டீ மற்றும் பென் அண்ட் ஜெர்ரி ஐஸ்கிரீம் உள்ளிட்ட பிராண்டுகளின் தலைமை நிறுவனமான யூனிலீவர் இந்த ஆண்டு இறுதி வரை அமெரிக்காவில் முகநூல் மற்றும் ட்விட்டரில் தங்களது விளம்பரங்களை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது.
முகநூல் தலைமை நிர்வாக அதிகாரி மார்க், கொள்கை மாற்றங்களைக் குறித்து அறிவித்தாலும், புறக்கணிப்புகளைப் பற்றிப் பதிலளிக்கவில்லை. வன்முறைகள், வெறுப்பு தொடர்பான பதிவுகளுக்கு எதிரான விமர்சனங்களையும் அதிபர் ட்ரம்பின் கணக்கு உள்ளிட்ட சர்ச்சைக்குரிய கணக்குகளுக்கு எதிரான விமர்சனங்களையும் கருத்தில் கொண்டு இதற்கான நடவடிக்கைகளை எடுக்க முகநூல் நிர்வாகம் நடவடிக்கைகளை எடுத்துவருவதாகக் கூறப்படுகிறது.

யூனிலிவரின் அறிவிப்புக்குப் பதிலளிக்கும்விதமாகப் பேசிய முகநூல் நிர்வாகத்தின் செய்தித் தொடர்பாளர், ``நமது சமூகத்தைப் பாதுகாப்பது தொடர்பாக ஒவ்வொரு ஆண்டும் பில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்து பணியாற்றுகிறோம். எங்களுடைய கொள்கைகளை மதிப்பீடு செய்வது தொடர்பாகப் பல்வேறு நிபுணர்களுடன் ஆலோசனைகளை மேற்கொள்கிறோம். எனினும், எங்களுக்கு இன்னும் அதிகமான வேலை இருக்கிறது என்பதை நாங்கள் உணர்கிறோம். பிரச்னைகளைத் தவிர்க்க புதிய தொழில்நுட்பங்கள், கொள்கைகளை உருவாக்க பிற நிபுணர்களுடன் தொடர்ந்து பணியாற்றுவோம்” என்று குறிப்பிட்டார். கோகோ கோலா நிறுவனத்தின் அறிவிப்பு குறித்து முகநூல் நிறுவனம் இன்னும் பதிலளிக்கவில்லை.
StopHateForProfit பிரசாரம் கடந்த வாரம் முதல் தொடங்கப்பட்டு பலரது வரவேற்பையும் பெற்றுவருகிறது. இந்தப் பிரசாரம் தொடர்பாக ஊடகங்களிலும் விளம்பரங்கள் செய்யப்பட்டன. அதில், ``சுதந்திரம், சமத்துவம் மற்றும் நீதி ஆகியவற்றுடன் அனைத்து வணிக நிறுவனங்களும் எங்களுடன் ஒற்றுமையுடன் நிற்க கேட்டுக்கொள்கிறோம். ஜூலை மாதத்தில் நீங்கள் முகநூலில் விளம்பரங்கள் செய்யக்கூடாது. `மதவெறி, இனவெறி வெறுப்பு மற்றும் வன்முறையை ஊக்குவிப்பதில் உங்களுடைய லாபங்கள் இருக்கக்கூடாது’ என்ற சக்திவாய்ந்த செய்தி ஒன்றை முகநூலுக்கு அனுப்புவோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.