Election bannerElection banner
Published:Updated:

கடலில் `டிராஃபிக் ஜாம்' : சூயஸ் கால்வாயில் சிக்கிய ராட்சத சரக்குக் கப்பல்!

சூயஸ் கால்வாயில் சிக்கிக்கொண்ட எவர் கிவன் கப்பல்
சூயஸ் கால்வாயில் சிக்கிக்கொண்ட எவர் கிவன் கப்பல் ( ap )

சூயஸ் கால்வாயில் கப்பல் ஏற்படுத்திய விபத்தால், ஆசியாவின் மத்திய தரைக்கடல் பகுதியையும், ஐரோப்பாவின் செங்கடல் பகுதியையும் இணைக்கும் சூயஸ் கால்வாயின் நீர்வழித்தடம் முற்றிலுமாக முடக்கப்பட்டிருக்கிறது.

உலகின் மிக முக்கியக் கடல் வர்த்தகப் பாதையான சூயஸ் கால்வாயில், எவர் கிவன் (Ever Given) என்ற வணிகக் கப்பல் சிக்குண்டது. கால்வாயின் இரண்டு பக்கக் கரைகளின் சுவர்களிலும் மோதியபடி, பக்கவாட்டில் சிக்கிக்கொண்ட இந்தக் கப்பலால், அந்தப் பாதையில் ஒட்டுமொத்த கப்பல் போக்குவரத்தும் தடைப்பட்டிருக்கிறது.

சீனாவிலிருந்து ஆயிரக்கணக்கான கன்டெய்னர்களுடன் புறப்பட்ட எவர் கிவன் கப்பல், மலேசியா வழியாக பயணித்து மார்ச் 22, திங்கட்கிழமை இரவு எகிப்திலுள்ள சூயஸ் கால்வாயை வந்தடைந்தது. மார்ச் 23, செவ்வாய் அதிகாலை 7:40 மணியளவில் அங்கிருந்து கிளம்யிய எவர் கிவன், கால்வாய் வழியாக நெதர்லாந்தின் ராட்டர்டாமுக்கு (Rotterdam) சென்றுகொண்டிருந்தது. அப்போது, திடீரென்று வீசிய பலத்த காற்றால் கப்பல் கட்டுப்பாட்டை இழந்து, முன்பக்கம் (Bow) கால்வாயின் வடக்குப் பக்க சுவற்றின் மீது மோதியது. அடுத்தகணமே கப்பலின் பின்பக்கம் மேற்கு திசையில் இழுத்துத் தள்ளப்பட்டு, மற்றொரு பக்கச் சுவரில் மோதி நின்றது.

கால்வாயில் சிக்கிக்கொண்ட கப்பல்
கால்வாயில் சிக்கிக்கொண்ட கப்பல்
Planet Labs Inc.

இந்த நிகழ்வை, மற்றொரு கப்பலில் பயணம் செய்துகொண்டிருந்த ஜூலியன் கோனா (Julianne cona) என்ற பெண் ஒருவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாகப் பதிவேற்றி `ship is super stuck’ எனப் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்தச் சம்பவம் குறித்து சூயஸ் நிர்வாகம் தெரிவித்திருப்பதாவது, ``கப்பலை மீட்டெடுத்து நிலைமையைச் சரிசெய்ய தொடர்ந்து முயன்றுவருகிறோம். கப்பல் மோதியிருக்கும் கால்வாயின் இரண்டு பகுதிகளிலும் தோண்டி மணலை அப்புறப்படுத்தி மீட்டெடுக்கத் திட்டமிட்டிருக்கிறோம். இரண்டு நாள்களில் நிலைமை சீராகும்!’’

கப்பலை மீட்கும் பணி
கப்பலை மீட்கும் பணி
ap

சுமார் 400 மீட்டர் (,1313 அடி) நீளமும், 59 மீ அகலமும் உடைய இந்தக் கப்பல் தைவானைச் சேர்ந்த எவர்கீரின் என்ற கடல்சார் (Evergreen Marine corp) நிறுவனத்துக்குச் சொந்தமானது. 2018-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த ராட்சத கப்பல் அல்ட்ரா லார்ஜ் கன்டெய்னர் ஷிப் (Ultra large container ship-ULCS) வகையைச் சேர்ந்தது.

இந்தக் கப்பல் ஏற்படுத்திய விபத்தால், ஐரோப்பாவின் மத்திய தரைக்கடல் பகுதியோடு, ஆசியாவையும் ஆப்ரிக்காவையும் பிரிக்கும் செங்கடலை இணைக்கும் சூயஸ் கால்வாயின் நீர்வழித்தடம் முற்றிலுமாக முடக்கப்பட்டு, ஏராளமான சரக்குக் கப்பல்கள் கால்வாயின் தென்பகுதியில் குவிந்துவருகின்றன. வணிகக் கப்பல்களின் இந்த அணிவகுப்பால் அந்தக் கடல் பகுதியில் `மெரைன் டிராஃபிக் ஜாம்’ ஏற்பட்டுள்ளது. இதை vesselFinder.com என்ற இணையதளம் செயற்கைக்கோள் படமாக வெளியிட்டிருக்கிறது.

1869-ம் ஆண்டு செயற்கையாக உருவாக்கப்பட்ட இந்த சூயஸ் கால்வாய், 193 கி.மீ நீளமும், 24 மீ ஆழமும், 205 மீ அகலமும்கொண்டது. எகிப்தின் வருவாயில் மிகப்பெரிய பங்களிப்பைச் செய்துவரும் இந்தக் கால்வாயிலிருந்து, வருவாயைப் பெருக்கும் நோக்கில், எகிப்து அரசு 2015-ம் ஆண்டு பெரிய கப்பல்கள் பயணிக்கும் வகையில் விரிவாக்கம் செய்தது.

ஆசியாவிலிருந்து ஐரோப்பாவுக்கு பெட்ரோலியப் பொருள்கள், இயற்கை எரிவாயு போன்ற வணிகப் பொருள்களைக் கொண்டு செல்ல ஆப்பிரிக்காவைச் சுற்றி நெடும்பயணமாகச் சென்றுகொன்டிருந்த நிலையை மாற்றி, செலவையும், பயணநேரத்தையும், தூரத்தையும் குறைக்கும் வகையில் செயற்கையாக வெட்டப்பட்ட இந்த சூயஸ் கால்வாயில் ஆண்டுக்கு 19,000-க்கும் மேற்பட்ட கப்பல்களில், 1.17 பில்லியன் டன் கணக்கிலான வர்த்தகம் நடைபெறுவதாகவும் 2020-ம் ஆண்டில் சூயஸ் கால்வாய் நிர்வாகம் (Suez Canal Authority) தெரிவித்திருந்தது.

உலக நீர்வழி வர்த்தகத்தில் 10% சூயஸ் கால்வாய் மூலமே நடக்கிறது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு