Published:Updated:

`பாகுபாடு இல்லாமல் கொரோனா பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கு இதுவே சாட்சி!’-கலங்கும் ரஷ்ய அதிபர் புதின்

அதிபர் புதின் மற்றும் பிரதமர் மிகைல் மிஷுஸ்டின்
News
அதிபர் புதின் மற்றும் பிரதமர் மிகைல் மிஷுஸ்டின் ( Twitter )

`` வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளதைக் காரணம் காட்டி பிரதமரின் செயல்களை முடக்காமல், எல்லா செயல்பாடுகளிலும் மிகைல் மிஷுஸ்டினின் உள்ளீட்டுடனே முடிவுகள் எடுக்கப்படும்” - அதிபர் புதின்

உலகையே நிலைகுலையச் செய்து வரும் கொரோனா வைரஸானது பல தரப்பு மக்களையும் ஏற்றத் தாழ்வுகள் இன்றி பாதிப்புக்கு உள்ளாக்கி வருகிறது. ரஷ்யாவிலும் கொரோனா வைரஸானது தொடர்ந்து அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை 1 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் அங்கு பாதிப்படைந்துள்ளனர். இந்த நிலையில், ரஷ்ய பிரதமரான மிகைல் மிஷுஸ்டினும் தனக்கு கொரோனா தொற்றின் அறிகுறிகள் தென்பட, பரிசோதனை செய்துகொண்டார். பரிசோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ரஷ்ய அதிபர் புதின்
ரஷ்ய அதிபர் புதின்

ரஷ்யாவின் பிரதமராக ஜனவரியில் அதிபர் புதினால் நியமிக்கப்பட்டவர் மிகைல் மிஷுஸ்டின். கொரோனா வைரஸ் ரஷ்ய மக்களை கொடூரமான வகையில் வேட்டையாடி வரும் சூழலில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் தலைவராக மிஷுஸ்டின் இருந்து வருகிறார். தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவுடன் அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதினுடன் வீடியோ கான்ஃபரன்ஸிங்கில் உரையாடினார் மிகைல், தன்னுடன் பணியாற்றிய சக ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க, தன்னை சுய தனிமைப்படுத்துதல் செய்துகொள்வதாகவும் தனக்குப் பதிலாக தன்னுடைய பணிகளைக் கவனித்துக் கொள்வதற்கு தற்காலிகப் பிரதமரை செயல்பட ஒப்புதல் வழங்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார். இவரின் கோரிக்கையை ஏற்று, அதிபர் புதின் முதல் துணைப் பிரதமர் ஆண்ட்ரி பெலோசோவை தற்காலிக பிரதமர் பொறுப்பில் நியமிக்கும் அரசாணையில் கையொப்பமிட்டுள்ளார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

துணைப் பிரதமரை தற்காலிகப் பிரதமராக நியமித்த பின்னர் அதிபர் புதின், ``கொரோனா வைரஸ் தொற்று யாருக்கும் ஏற்படலாம். நான் எப்போதும் சொல்லிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் மிகவும் சுறுசுறுப்பான நபர். இதுவரை உங்களுடைய பணிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். வைரஸ் எவ்வாறு பாகுபாடு காட்டாமல் வேலை செய்கிறது என்பதற்கு இதுவே சாட்சி. தொற்றுக்கு உள்ளாகி இருக்கும் சமயத்திலும் உங்களால் வேலை செய்ய இயலும் என நம்புகிறேன். வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளதைக் காரணம் காட்டி பிரதமரின் செயல்களை முடக்காமல், எல்லா செயல்பாடுகளிலும் மிகைல் மிஷுஸ்டினின் உள்ளீட்டுடனே முடிவுகள் எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால், ரஷ்யாவில் அமல்படுத்தப்பட்டுள்ள தேசிய ஊரடங்கு மே 11- ம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. வெப்பமான வானிலை காலம் தொடங்கியுள்ள நிலையில், மக்கள் கிராமப் புறங்களை நோக்கி இடம்பெயர்வது வழக்கம். ஆனால், இந்த நேரத்தில் இடப்பெயர்வு என்பது கூடாது என அரசு அறிவித்துள்ளது. மேலும், மக்கள் இதைச் செய்யாமல் இருக்க ரஷ்ய அதிகாரிகள், மாஸ்கோ நகர் முழுவதும் போலீஸாரின் ரோந்துப் பணியை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தனர்.

ரஷ்யா
ரஷ்யா

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிர்வினையாக ரஷ்யா எடுத்த ஊரடங்கு உள்ளிட்ட சில முக்கிய முடிவுகள், இத்தாலியில் உருவான சூழல் போல் இங்கு நிகழாமல் இருக்க உதவியதாக அதிபரின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்தப் போதிலும், 1073 பேர் உயிரிழந்துள்ளனர். இது ஒப்பீட்டளவில் குறைந்த எண்ணிக்கையாகும் என அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இந்த வார தொடக்கத்தில், நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராகப் போரிட்டு வரும் சுகாதார ஊழியர்களுக்குப் போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை என தெரிவித்திருந்தார். மேலும், நாட்டின் பல பிராந்தியங்களில் மருத்துவர்களும் சுகாதார ஊழியர்களும் போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை என குற்றம் சுமத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, மாஸ்கோ மேயர் செர்ஜி சோப்பியானின், ``ரஷ்ய தலைநகரில் வசிக்கும் மக்கள் நிலைமை எவ்வளவு மோசமாக உள்ளது என்பதை உணரவில்லை. அதிகமான மக்கள் மீறுவதாகவும், வைரஸ் பரவலின் வேகம் குறைந்து நல்ல சூழல் விரைவில் நிகழும் பட்சத்தில் நிச்சயமாகக் கட்டுப்பாடுகளை குறைப்போம். அதுவரையில் மக்கள் பொறுமையாகவும், தைரியமாக இருக்க வேண்டும். இது உங்களுக்கும் உங்கள் ஆரோக்கியத்துக்கும் முக்கியமானது” என தெரிவித்துள்ளார்.