Published:Updated:

`சிறு காய்ச்சல்... கொலையாளி... 2 வது இடத்தில் பிரேசில்!’ - அதிபரின் அலட்சியத்தை எதிர்க்கும் மக்கள்

அதிபர் ஜெய்ர் பொல்சனாரோ
அதிபர் ஜெய்ர் பொல்சனாரோ

``சமீபத்திய பேரணி ஒன்றில் அவர் முகக்கவசம் அணியாமலும் தனிமனித இடைவெளியைப் பின்பற்றாமலும் இருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அவருடன் இருந்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அகஸ்டோ ஹெலனோ, ``நாம் இந்தப் போரில் வெற்றி பெறுவோம்” என்று கூறினார்.”

கொரோனா வைரஸ் உலகளவில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. ஆரம்பத்தில் அதிகமாகப் பாதிப்படைந்த பல நாடுகளும் தற்போது இயல்புநிலைக்கு படிப்படியாகத் திரும்பி வருகின்றன. ஆனால், ஆரம்பத்தில் அலட்சியமாக இருந்த பல நாடுகளிலும் வைரஸின் தாக்கம் கடுமையாக அதிகரித்துள்ளது. அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா போன்ற நாடுகளில் நாளுக்குநாள் வைரஸின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. மிகவும் மோசமான பாதிப்புகளைச் சந்தித்த நாடுகளின் பட்டியலில் ரஷ்யாவை பிரேசில் பின்னுக்குத் தள்ளியது. அதாவது, அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக அதிக பாதிப்படைந்த நாடாக பிரேசில் உள்ளது. எனினும், அந்நாட்டின் அதிபர் வைரஸ் தொடர்பான நடவடிக்கைகளைத் தீவிரமாக எடுக்காமல் அலட்சியமாக இருந்து வருவதாக அவர்மீது குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன.

பிரேசில் அதிபர் ஜெய்ர் பொல்சனாரோ
பிரேசில் அதிபர் ஜெய்ர் பொல்சனாரோ

பிரேசிலில், இதுவரை சுமார் 3,76,000-க்கும் மேற்பட்டவர்கள் வைரஸ் தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். கொரோனாவால் பாதிப்படைந்தவர்களின் சுமார் 23,500-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். ஒவ்வொருநாளும் ஆயிரக்கணக்கான மக்கள் புதிதாக இந்தத் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். கடந்த வாரம் இந்த எண்ணிக்கை புதிய மைல்கல்லை அடைந்தது எனலாம். கடந்த சனிக்கிழமை அன்று ரஷ்யாவைவிட அதிகமான பாதிப்புகளை பிரேசில் சந்தித்துள்ளது என ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தகவல் வெளியிட்டது. அந்த இரவில்தான் பிரேசிலின் அதிபர் ஜெய்ர் பொல்சனாரோவும் அவரது பாதுகாப்புக் குழுவும் அதிபர் மாளிகையில் இருந்து வெளியேறி உணவகம் ஒன்றுக்கு சென்றனர். அங்கு அவர் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது வெளியே இருந்த மக்கள் அவரை நோக்கி `கொலையாளி’ என்றும் `குப்பை’ என்றும் கத்தியுள்ளனர். அப்போது அவர் அந்தக் கூட்டத்தை தனது விரல்களை அசைத்துள்ளார்.

`அதனால் என்ன?!’ - கொரோனா விவகாரத்தில் அலட்சியம்; பிரேஸில் அதிபருக்குக் குவியும் கண்டனங்கள் #Corona

நாட்டில் கொரோனா வைரஸ் அதிக பாதிப்புகளை ஏற்படுத்திய போதும் இறப்புகளின் எண்ணிக்கை உயர்ந்தபோதும் அதிபர் பொல்சனாரோ இந்த வைரஸை `சிறு காய்ச்சல்’ என்று குறிப்பிடுகிறார். கொரோனாவின் தாக்கத்தை மிகவும் குறைவாக மதிப்பிடக்கூடியவராகவும் உள்ளார். கொரோனா நடவடிக்கைகள் தொடர்பான கருத்து வேறுபாடுகளால் மட்டும் கடந்த சில வாரங்களில் இரண்டு சுகாதார அமைச்சர்கள் தங்களது பணிகளை விட்டு வெளியேறியுள்ளனர். ஒருவரை அதிபர் நீக்கினார், மற்றொரு அமைச்சர் ராஜினாமா செய்துள்ளார். வைரஸைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்படும் ஊரடங்கால் பொருளாதார பாதிப்புகள் ஏற்படும் என்பது குறித்து ஆரம்பம் முதலே அவர் தனது கவலைகளை வெளிப்படுத்தி வந்தார். பொருளாதார பாதிப்புகள், வைரஸ் பாதிப்பைவிட மோசமாக இருக்கும் என்றும் எச்சரித்தார். மிகவும் கடுமையாகப் பாதிப்படைந்த பகுதிகளில் ஆளுநர்கள் பிறப்பித்த ஊரடங்குக்கு எதிராகவும் பேசினார்.

அதிபர் பொல்சனாரோவின் ஆதரளவாளர்கள், அவருடைய கருத்துக்கு பலத்த ஆதரவுகளைத் தெரிவித்து வருகின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை, அதிபர் மாளிகைக்கு வெளியே கூடி அவருக்கு ஆதரவாகவும் ஊரடங்குக்கு எதிராகவும் பதாகைகளை ஏந்தி போராடினர். ஒவ்வொரு வார இறுதியிலும் இதுமாதிரியான பேரணிகளும் அந்நாட்டில் நடந்து வருகின்றன. பொல்சனாரோவின் முகநூல் பக்கத்தில் இந்தப் பேரணிகள் நேரடியாக ஒளிபரப்பும் செய்யப்படுகின்றன. சமீபத்திய பேரணி ஒன்றில் அவர் முகக்கவசம் அணியாமலும் தனிமனித இடைவெளியைப் பின்பற்றாமலும் இருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அவருடன் இருந்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அகஸ்டோ ஹெலனோ, ``நாம் இந்தப் போரில் வெற்றி பெறுவோம்” என்று கூறினார்.

அதிபர் ஜெய்ர் பொல்சனாரோ
அதிபர் ஜெய்ர் பொல்சனாரோ

மனாஸ் பகுதியின் மேயர் ஆர்துர் விர்ஜிலியோ, அதிபரின் நடவடிக்கைகள் தொடர்பாக சி.என்.என் ஊடகத்திடம் பேசும்போது, ``கொரோனா வைரஸ் தொடர்பான இறப்புகளுக்கு அதிபரும் பொறுப்பு. வாயை மூடுங்கள், வீட்டிலேயே இருங்கள், ராஜினாமா செய்யுங்கள்” என்று கூறினார். மனாஸ் பகுதி கொரோனா வைரஸால் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. அங்கு மட்டும் 1,100-க்கும் அதிகமானவர்கள் இறந்துள்ளனர். மனாஸின் மேயரை அதிபர் பொல்சனாரோ `பீஸ் ஆஃப் ஷிட்’ என்றும் கடுமையாக விமர்சித்தார். பிரேசிலில் பாதிப்பு அதிகமாவது சுகாதார நிபுணர்களைக் கடுமையான கவலைக்கு உள்ளாக்கியுள்ளது. மேலும், பிரேசில் மற்றுமொரு இருண்ட வாரத்துக்குள் நுழைவதாகவும் தெரிவிக்கின்றனர்.

`அதிபரின் அழுத்தம்;  அதிகரித்த உயிரிழப்புகள்!’ - ஒரே மாதத்தில் ராஜினாமா செய்த பிரேசில் அமைச்சர்
அடுத்த கட்டுரைக்கு