Published:Updated:

`நாம் செய்ய வேண்டியது இதுதான்!' - வைரலாகும் தீக்குச்சி வீடியோ #Corona

தீக்குச்சி
தீக்குச்சி

இன்றைய சூழலில் ஏன் கூட்டத்திலிருந்து விலகி நம்மை தனிமைப் படுத்திக்கொள்ள வேண்டும் என்பதை எளிமையாக விளக்கும் இந்த வீடியோ பலரையும் கவர்ந்து வருகிறது.

உலக அளவில் பரவி வரும் கொரோனா வைரஸ் மக்களிடையே மிகப்பெரிய அளவில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பற்றிய கட்டுரைகள் சமூக வலைதளங்களில் நெட்டிசன்களால் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன. ஆனால், வைரஸ் பரவுவதைத் தடுக்க முக்கிய நடவடிக்கையாகக் கூறப்படுவது கூட்டங்களிலிருந்து விலகி இருப்பதுதான். இதை எளிமையாக விளக்கும் மிகச்சிறிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஜுவான் டெல்கன் என்பவர்தான் இந்த வீடியோ கிளிப்பை உருவாக்கியுள்ளார். 12 நொடிகள் ஓடும் இந்த வீடியோவில் வரிசையாகத் தீக்குச்சிகள் அடுக்கப்பட்டுள்ளன. முதல் தீக்குச்சியில் நெருப்பு பற்ற வைக்கப்பட்டதும் அடுத்தடுத்துள்ள தீக்குச்சிகள் தீப்பற்றி எரிந்துகொண்டே வருகின்றன. திடீரென்று இதனிடையில் இருந்த ஒரு தீக்குச்சி மட்டும் சட்டென்று வரிசையிலிருந்து விலகிக்கொள்கிறது. இதனால், விலகிய தீக்குச்சியின் பின்னால் உள்ள தீக்குச்சிகளில் தீப்பற்றுவது தடுக்கப்படுகிறது. இந்தச் சிறிய வீடியோவிற்கு, ``உங்களது பங்கை நீங்கள் செய்யுங்கள். வீட்டிலேயே இருங்கள். நாம் செய்ய வேண்டியது இதுதான்" என்று கேப்ஷனும் எழுதப்பட்டுள்ளது.

திரைத்துறை பிரபலங்கள் முதல் நெட்டிசன்கள் வரை பலரும் இந்தச் சிறிய வீடியோவை ரீ-ட்வீட் செய்து வந்தனர். தற்போது வரை 40,000-க்கும் மேலான லைக்குகளையும் 16,000-க்கும் மேலான ரீ- ட்வீட்டுகளையும் இந்த வீடியோ பெற்றுள்ளது. இன்றைய சூழலில் ஏன் கூட்டத்திலிருந்து விலகி நம்மைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதை எளிமையாக விளக்கும் இந்த வீடியோ பலரையும் கவர்ந்து வருகிறது.

`கல்வி நிறுவனங்கள் விடுமுறை முதல் திருமணங்கள் வரை!' - தமிழக அரசின் முழு உத்தரவு விவரங்கள் #Corona
அடுத்த கட்டுரைக்கு