Published:Updated:

`அதிர வைக்கும் பலி எண்ணிக்கை; 3 வாரங்களில் எகிறும் ஆபத்து?!’ - கவலையளிக்கும் அமெரிக்காவின் நிலை

அமெரிக்கா - போராட்டம்
அமெரிக்கா - போராட்டம் ( AP )

``பல நாடுகளிலும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. அந்நாட்டு அதிகாரிகள் மக்களிடம், `பொது சுகாதார அளவில் மிகப்பெரிய பாதிப்புகள் கூட்டம் கூடுவதால் ஏற்படும் என்பதால் போராட்டங்களை தவிருங்கள்’ என கோரிக்கை விடுத்துள்ளனர்”

உலகிலேயே அமெரிக்காதான் கொரோனா வைரஸால் மிகவும் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளது. இதுவரை சுமார் 19.50 லட்சம் மக்கள் இந்த வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். 1 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், அமெரிக்கா முழுவதும் உள்ள நகரங்களில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு நீதி கேட்டும் நிறவெறிக்கு எதிராகவும் மக்கள் தீவிரமாகப் போராடி வருகின்றனர். போராட்டங்களின் இடையே கடுமையான வன்முறைச் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. இதனால், அமெரிக்காவின் சாலைகள் போர்க்களமாக காட்சியளிக்கிறது. ஏற்கெனவே, அதிபர் ட்ரம்ப் கொரோனா விவகாரத்தில் விமர்சிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது போராட்டம் தொடர்பான தன்னுடைய நடவடிக்கைகளுக்காகவும் விமர்சிக்கப்பட்டு வருகிறார்.

அமெரிக்கா - போராட்டம்
அமெரிக்கா - போராட்டம்
AP

ட்ரம்பின் நடவடிக்கைகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் கோபத்தை இன்னும் அதிகமாக்குகிறதே தவிர அவர்களுக்கான தீர்வை வழங்கவில்லை என பலரும் குற்றச்சாட்டுகளை எழுப்பி வருகின்றனர். வீதிகளின் இறங்கி போராட்டங்களை நடத்தி வரும் மக்களில் பெரும்பான்மையானவர்கள் முகக்கவசங்களை அணியாமல் ஃப்ளாட்டின் பெயரைக் கத்தி போராட்டங்களை நடத்தி வருகின்றனர். காவலர்கள் அவர்களைக் கைது செய்து வாகனங்களில் அடைத்து வைத்திருப்பதும் தனிமனித இடைவெளியைப் பின்பற்றுவது குறித்த கேள்வியை எழுப்புகிறது. உலகிலேயே அதிகமாகப் பாதிப்படைந்த அமெரிக்காவில் மக்கள் முகக்கவசம் அணியாமலும் தனிமனித இடைவெளியைப் பின்பற்றாமலும் இருப்பது ஆட்சியாளர்களை இன்னும் கவலைக்கு உட்படுத்தியுள்ளது. இதனால், செய்வது அறியாது ஆட்சியாளர்கள் திணறி வருகின்றனர்.

`ஐரோப்பிய நாடுகளில் குறையும் பாதிப்பு; இந்தியா, அமெரிக்கா, பிரேசிலில்..?’ -உலகளவில் கொரோனா அப்டேட்ஸ்

போராட்டங்கள் ஒருபக்கம் நடந்துகொண்டிருக்க, மறுபக்கம் வைரஸ் தொற்று தொடர்பான எண்ணிக்கைகள் அச்சத்தை இன்னும் அதிகப்படுத்தியுள்ளன. கொரோனா வைரஸ் அங்கு எவ்வளவு வேகமாகப் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது என்பதற்கு இந்த எண்ணிக்கைகளே சான்றுகள். கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் அமெரிக்காவில் 4,430 பேர் இந்த வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். அவற்றில், கடந்த வியாழக்கிழமை மட்டும் 1,036 பேர் இறந்துள்ளனர். இதனால், வெள்ளிக்கிழமை நிலவரப்படி அமெரிக்காவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.08 லட்சத்தைக் கடந்துள்ளது. பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 20 லட்சத்தை நெருங்கி வருகிறது. ஆனால், இன்னும் சில நாள்களில் பாதிப்பு எண்ணிக்கைகள் கடுமையாக அதிகரிக்கும் என நிபுணர்கள் கூறியுள்ளனர். போராட்டக்காரர்களை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கைகளை விடுத்து வருகின்றனர்.

இதுதொடர்பாக அமெரிக்க மருத்துவர் ஜெரோம் ஆடம்ஸ் பேசுகையில், ``நோய் பரவும் முறையின் அடிப்படையில் பார்த்தால் இன்னும் பெரிய அளவில் வைரஸ் பாதிப்பு ஏற்படும் என்று அச்சப்படுகிறோம். சமூகத்துக்கும் அவர்களுக்கும் அதிக அளவில் தீங்கு விளைவிக்கும் வகையில் போராட்டங்களை மக்கள் நடத்துவது குறித்து எனக்கு மிகவும் கவலையாக உள்ளது” என எச்சரிக்கைவிடுத்துள்ளார். எனினும், ``நம்முடைய தேசத்தை குணப்படுத்தவோ அல்லது மக்கள் அனுபவிக்கும் வலியை அகற்றவோ எளிதான மருந்து இல்லை” என்றும் அவர் தனது வேதனையைத் தெரிவித்தார். இதற்குப் பிறகு செய்ய வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கிறது என்று கூறிய அவர், ``மக்கள் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீள வேண்டும். ஊரடங்கு பிரச்னைகளில் இருந்து மீள வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.

அமெரிக்கா போராட்டம்
அமெரிக்கா போராட்டம்
AP

போராட்டங்களின் விளைவுகளால் அதிகரிக்கும் நோய்த்தொற்று எண்ணிக்கைகள் இன்னும் இரண்டு மூன்று வாரங்களில் வெளிப்படும் என நிபுணர்கள் கூறியுள்ளனர். வெளியில் நடக்கும் இந்தப் போராட்டங்கள் வைரஸ் பரவுவதை இன்னும் எளிமையாக்கும் என்றும் கூறியுள்ளனர். இதையடுத்து, கலிபோர்னியா பகுதியில் உள்ள பள்ளிகள் மற்றும் உடற்பயிற்சி நிலையங்களைத் திறக்கவும் அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது வைரஸ் பரவலை இன்னும் பேராபத்துக்கு உள்ளாக்கும் என்றும் கூறப்படுகிறது. ஜார்ஜ் ஃப்ளாய்ட்டின் மரணத்துக்கு நீதி கேட்டு அமெரிக்காவில் நடைபெறும் மக்களின் போராட்டத்துக்கு ஆதரவாக பல நாடுகளிலும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. இதனால், அந்நாடுகளின் அரசாங்கங்களும் அச்சத்தில் உள்ளனர். குறிப்பாக ஆஸ்திரேலியா மற்றும் லண்டன் பகுதிகளில் மக்கள் வார இறுதியில் போராட்டங்களை நடத்த இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், அந்நாட்டு அதிகாரிகள் மக்களிடம், `பொது சுகாதார அளவில் மிகப்பெரிய பாதிப்புகள் கூட்டம் கூடுவதால் ஏற்படும் என்பதால் போராட்டங்களைத் தவிருங்கள்’ எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

`ட்ரம்ப்புக்கு கவுன்டர் கொடுத்த போலீஸ்; குறிவைக்கப்படும் பத்திரிகையாளர்கள்!’ - திணறும் அமெரிக்கா
அடுத்த கட்டுரைக்கு