Published:Updated:

`அம்னீசியா; கொரோனா செய்தி; 30 வருடங்களுக்குப் பிறகு நினைவுக்கு வந்த ஊர்!'- சீனாவை நெகிழவைத்த சம்பவம்

ஜூ
ஜூ

``நான் உன்னை மீண்டும் பார்ப்பேன் என நினைக்கவில்லை. நீ இன்னும் இருக்கிறாய் என்பதில் மிகுந்த மகிழ்ச்சி" என்று கண்ணீர் மல்க ஜூ-வின் தாய் கூறியுள்ளார்.

சீனாவின் தென்மேற்குப் பகுதியிலுள்ள சிஷூய் எனும் ஊரைச் சேர்ந்த ஜூ ஜியாமிங் என்பவர் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு வேலை தேடுவதற்காகத் தனது வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார். தனது சொந்த ஊரிலிருந்து 1,300 கி.மீ தொலைவில் தென் பகுதியிலுள்ள ஃபுஜியன் எனும் பகுதிக்கு வந்த ஜூ, கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டார். வேலைக்குச் சேர்ந்த சில நாள்களிலேயே ஏற்பட்ட விபத்தால் பாதிப்படைந்த அவர் அம்னீசியா எனும் மறதி நோய்க்கு உள்ளானார். தன்னுடைய அடையாள அட்டைகளையும் இழந்துள்ளார்.

காவல்துறை அதிகாரி
காவல்துறை அதிகாரி

அம்னீசியாவால் பாதிக்கப்பட்டதால் எல்லாவற்றையும் மறந்த ஜூ, தனது வேலையையும் இழந்து வீடற்றவராக இருந்துள்ளார். பின்னர், வெவ்வேறு இடங்களில் பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில், அப்பகுதியில் வசித்து வந்த சீன தம்பதியைச் 2003-ம் ஆண்டு சந்தித்துள்ளார். அவர்கள் ஜூவை அழைத்து சென்று தங்களுடன் வசிக்க அனுமதித்துள்ளனர். பின்னர், அவர்களுடனே வசித்து வந்துள்ளார். அவ்வப்போது தன்னுடைய பெயரையும்கூட மறக்கும் நிலை அவருக்கு இருந்துள்ளது. 2015-ம் ஆண்டு சீன தம்பதி இருவரும் கிழக்கு சீனாவில் உள்ள தங்களது சொந்த மாகாணமான ஜேஜியாங் எனும் பகுதிக்கு ஜூ-வுடன் இணைந்து குடிபெயர்ந்துள்ளனர்.

`மீண்டு வரும் சீனா... பிடியில் சிக்கிய இத்தாலி' - அதிர்ச்சி தரும் புள்ளிவிவரங்கள் #Corona

``லீ குடும்பத்தினர் என்னையும் குடும்ப உறுப்பினரைப்போல பார்த்துக்கொண்டனர்" என்று கூறும் ஜூ தொடர்ந்து தனது சொந்த ஊரைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இருந்துள்ளார். ஆனால், அதுபற்றி அதிகமான நினைவு வரவில்லை என்றும் குறிப்பிடுகிறார்.

புதிய நகரத்தில் வசித்து வந்த நிலையில், பழைய நினைவுகள் ஜூ-க்கு மெல்ல திரும்பி வந்துள்ளன. சீனாவை அதிகம் பாதித்துள்ள கொரோனா வைரஸ் தொடர்பான செய்திகளைக் கடந்த சில நாள்களுக்கு முன்பு டிவி-யில் பார்த்துக் கொண்டிருந்தபோது அவருக்கு திடீரென தனது சொந்த ஊரின் பெயரானது ஞாபகம் வந்துள்ளது. இதையடுத்து அருகில் உள்ள காவல்நிலைய அதிகாரிகளைத் தொடர்புகொண்டு நிலையை விளக்கியுள்ளார். அதிகாரிகளும் அவருக்கு உதவி செய்துள்ளனர்.

ஜூ மற்றும் காவலர்
ஜூ மற்றும் காவலர்

அதிகாரிகளின் உதவியுடன் ஜூ தன்னுடைய குடும்பத்தினரிடம் வீடியோ வழியாகப் பேசியுள்ளார். அதில் ஜூ-வின் 83 வயது தாய் பேசும்போது, ``நான் உன்னை மீண்டும் பார்ப்பேன் என நினைக்கவில்லை. நீ இன்னும் இருக்கிறாய் என்பதில் மிகுந்த மகிழ்ச்சி" என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

27 வயதில் வீட்டைவிட்டு வந்த ஜூ ஜியாமிங் 30 வருடங்கள் கழித்து தன்னுடைய 57வது வயதில் குடும்பத்தினருடன் இணையப்போவதை நினைத்து தனது மகிழ்ச்சியை கண்ணீருடன் வெளிப்படுத்தியுள்ளார். தாய் மற்றும் உடன் பிறந்தவர்கள் நலமுடன் உள்ளனர் என்றும் ஆனால், ஜூ-வின் தந்தை 18 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

சீனாவில் வைரஸ் தாக்கம் படிப்படியாகக் குறைந்து வருவதால் அரசும் சில கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், விரைவில் ஜூ தன் குடும்பத்தினருடன் சேருவார் என்று அதிகாரிகள் நம்பிக்கையளித்துள்ளனர்.

Credits : Daily mail

`நாங்கள் எதிர்பார்த்ததைவிடவும் அதிக இறப்புகள்...' -கொரோனா பரவலால் பதறும் உலக சுகாதார நிறுவனம்
அடுத்த கட்டுரைக்கு