Published:Updated:

மத்திய அரசின் புதிய தடை உத்தரவு... உலக நாடுகள் முதல் தமிழ்நாடு வரை..! #Coronaupdate

கொரோனா
கொரோனா

இந்தியாவில் அதிகபட்சமாக கேரளாவில் 9 பேரும் டெல்லி மற்றும் கர்நாடகாவில் 4 பேரும் பாதிப்படைந்துள்ளனர்.

உலகை அச்சுறுத்தும் கொரோனா!

சீனாவை அதிக அளவில் பாதித்து வந்த கொரோனா வைரஸானது உலகின் பல நாடுகளுக்கும் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. குறிப்பாக இத்தாலி, ஈரான், தென் கொரியா ஆகிய நாடுகளில் கொரோனா சீனாவுக்கு அடுத்தபடியாக அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் இதுவரை 1,19,177 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 4,295 பேர் இறந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனாவில் 80,778 பேரும் இத்தாலியில் 10,149 பேரும் ஈரானில் 8,042 பேரும் தென் கொரியாவில் 7,755 பேரும் பாதிக்கப்பட்டுள்ள நபர்களின் கணக்கில் அடங்குவர்.

கடந்த நாள்களை ஒப்பிடும்போது சீனாவில் பாதிப்படைபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இத்தாலி மற்றும் ஈரானில் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை சீனாவில் பாதிப்படையும் எண்ணிக்கையைவிட பல மடங்கு அதிகரித்துள்ளதாகவும் இறப்பவர்களின் எண்ணிக்கையும் சீனாவைவிட இந்த நாடுகளில் அதிகரித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா
கொரோனா

இந்தியா:

கொரோனா வைரஸால் வெளிநாடுகளிலிருந்து இந்தியா திரும்பிய சில நபர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் தகுந்த நடவடிக்கைகள் எடுத்துள்ளதாகவும் மக்கள் கவலைப்படத் தேவையில்லை என அறிவித்திருந்தாலும் மக்கள் மத்தியில் தொடர்ந்து அச்சமான சூழல் நிலவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 50 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளிலிருந்து இந்தியா வருபவர்களுக்கு விமான நிலையத்தில் வைரஸ் தொடர்பான பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. இதுவரை 9,41,717 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். பரிசோதனை அறிக்கையில் 50 பேருக்குப் பாதிப்பு இருப்பதாகத் தெரியவந்துள்ளது. அதில் 34 பேர் இந்தியர்கள் என்றும் 16 பேர் வெளிநாட்டவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் அதிகபட்சமாகக் கேரளாவில் 9 பேரும் டெல்லி மற்றும் கர்நாடகாவில் 4 பேரும் பாதிப்படைந்துள்ளனர். யூனியன் பிரதேசங்களான லடாக், ஜம்மு மற்றும் காஷ்மீர், பஞ்சாப், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் ஒரு சிலர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஹரியானாவில் 14 வெளிநாட்டவர்களுக்கும் ராஜஸ்தானில் 2 வெளிநாட்டவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இந்த நிலையில் கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகளில் பயணம் மேற்கொண்டவர்கள் இந்தியா வர மத்திய அரசு தடை விதித்துள்ளது. முன்னதாகவே விசா வழங்கப்பட்டிருந்தாலும் அவர்கள் இந்தியா வர அனுமதி மறுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா அதிகம் பாதித்துள்ள இத்தாலி நாட்டில் 55 இந்திய மாணவர்கள் சிக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இத்தாலி மருத்துவமனைகளில் கொரோனா தொடர்பான சான்றிதழ் கிடைக்காததால் அவர்கள் நாடு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா... பயப்படத் தேவையில்லை. ஏனெனில்...

தமிழ்நாடு:

தமிழகத்திலும் இந்த வைரஸ் பரவாமல் தடுக்க அரசு தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வெளிநாடுகளிலிருந்து தமிழகம் வரும் பயணிகள் அனைவரும் பரிசோதனை செய்யப்பட்டு தினமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை 1 லட்சத்துக்கும் அதிகமான நபர்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர். வைரஸால் அதிகம் பாதிப்படைந்த சீனா, ஜப்பான், இத்தாலி, ஈரான் ஆகிய நாடுகளிலிருந்து வந்த பயணிகளுடன் அரசாங்கம் தொடர்பில் இருப்பதாக தெரிவித்துள்ளனர். சுமார் 1,200-க்கும் மேற்பட்டவர்களை அரசு கண்காணித்து வருகிறது.

இந்த நிலையில் ஓமனில் இருந்து தமிழகம் வந்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த நபருக்குக் கொரோனா இருப்பது உறுதியானது. மருத்துவமனை தனிப்பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அந்த நபரும் தற்போது குணமடைந்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், ``நமது மாநிலத்துக்கு ஒரு நல்ல செய்தி. ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிக்குக் கொரோனா டெஸ்ட் நெகட்டிவ்வாக வந்துள்ளது. இந்த விரைவான மீட்பு சாத்தியமானது, தமிழ்நாடு சுகாதாரத்துறையின் துல்லியமான சிகிச்சை மற்றும் நிபுணத்துவத்தால் மட்டுமே. தற்போதைய நிலவரப்படி, தமிழ்நாடு கொரோனா இல்லாத மாநிலமாக மாறியுள்ளது" என்று பதிவிட்டிருந்தார்.

பங்குச் சந்தையை அதிரவைத்த கொரோனா! - ஒரே நாளில் 6 பில்லியன் டாலர்களை இழந்த ஜெஃப் பெஸோஸ்
அடுத்த கட்டுரைக்கு