Published:Updated:

ஒண்ணுமே புரியலே உலகத்திலே! #MyVikatan

Covid ( <a href='https://www.freepik.com/vectors/family'>Family vector created by pikisuperstar - www.freepik.com</a> )

‘சும்மா செல்லையே பார்த்துக் கொண்டிருந்தால் பார்வைக் குறைபாடு வரும்’ என்று சொல்லியவர்களெல்லாம் தற்போது இருக்கும் இடம் தெரியவில்லை. பிற்காலத்தில் கண் டாக்டர்களுக்கு பிரகாசமான எதிர்காலம் உண்டோ என்ற சந்தேகம் வருகிறது!

ஒண்ணுமே புரியலே உலகத்திலே! #MyVikatan

‘சும்மா செல்லையே பார்த்துக் கொண்டிருந்தால் பார்வைக் குறைபாடு வரும்’ என்று சொல்லியவர்களெல்லாம் தற்போது இருக்கும் இடம் தெரியவில்லை. பிற்காலத்தில் கண் டாக்டர்களுக்கு பிரகாசமான எதிர்காலம் உண்டோ என்ற சந்தேகம் வருகிறது!

Published:Updated:
Covid ( <a href='https://www.freepik.com/vectors/family'>Family vector created by pikisuperstar - www.freepik.com</a> )

‘ஒண்ணுமே புரியலே உலகத்திலே!

என்னவோ நடக்குது மர்மமாய் இருக்குது

ஒண்ணுமே புரியலே உலகத்திலே!….

பட்டுக்கோட்டையாரின் இந்தப் பாடலும், நடிகர் சந்திர பாபுவின் குரலும் நமக்கெல்லாம் மிகப்பரிச்சயமானதே.அந்தப் பாடலின் முழுதான அர்த்தத்தை இந்தக் கொரோனா காலத்தில்தான் உணர முடிகிறது. கோவிட்-19 என்பதிலேயே அது வந்த ஆண்டு இருக்கிறது.முதல் அலை,இரண்டாம் அலை,மூன்றாம் அலை என்று ஒவ்வொரு அலையும் ஒவ்வொரு சுனாமியாக உலக மக்களை வதைத்துக் கொண்டிருக்கிறது. உலகச் சுகாதார நிறுவன அதிகாரிகளோ, இன்னும் 10 ஆண்டுகளுக்கு அது உலகை வலம் வரும் என்கிறார்கள். இரண்டாம் அலையின் வேகம் மூன்றில் இல்லையென்ற கருத்தும் நிலவினாலும்,பரவும் நிலையோ, ராக்கெட் வேகத்தில்தான் உள்ளது. என் மாமா, ‘நோய் வந்து போராடி வென்று கூடப் பிழைத்து விடலாம்.ஆனால், நம்மையும் நோய் தாக்கி விடுமோ என்ற பயத்தில் வாழ்வதுதான் ரொம்பவும் மோசமானது’ என்பார். உண்மைதானே! பயமின்றி எங்காவது வெளியில் நடமாட முடிகிறதா? கல்யாணம், காட்சி என்று குடும்பத்தோடு செல்ல முடிகிறதா? திருவிழா பார்க்கத் தந்தையின் தோளில் சவாரி செய்த காலமெல்லாம் கனவாகிப் போனதே.தந்தை- தாய்க்குக் கொள்ளி வைக்கக் கூட முடியாத சோகத்தை எத்தனை உள்ளங்கள் ஆயுளுக்கும் நினைத்து ஆறுதலின்றி அல்லல் பட்டுக் கிடக்கின்றன.கூடி விளையாடுவதும்,கட்டிப்பிடி வைத்தியமும் கானல் நீராகி விட்டதே.குழந்தைகளை டி.வி., பக்கமும் கைபேசி பக்கமும் போகக் கூடாதென்ற பெற்றோர், கடன் வாங்கியாவது தங்கள் குழந்தைகளுக்குச் செல் போன் வாங்கிக் கொடுக்க வேண்டிய கட்டாய காலம் ஒன்று வருமென்று நாமெல்லாம் கனவிலும் நினைத்ததில்லையே.உலகப் பந்தை ஒட்டு மொத்தமாக உதைத்தாடும் கொரோனாவை என்னென்பது? ’தனித்திரு…பசித்திரு…விழித்திரு…’ என்பதன் பொருள் இப்போதுதானே நன்கு விளங்குகிறது!

கை கழுவி,மாஸ்க் போடுவதில் ஆரம்பித்தது, இப்பொழுது பூஸ்டர் டோசில் வந்து நிற்கிறது. அமெரிக்க, ஐக்கிய நாடுகள் வழக்கம் போலவே முந்திக் கொண்டுள்ளன. நான் அமெரிக்காவில் இருந்தபோது, கடந்த ஆண்டு மார்ச் மாதமே முதல் தடுப்பூசியை (பைசர்), குடும்பத்துடன் சென்று போட்டுக்கொண்டேன்.34 நாட்களுக்குப் பிறகு இரண்டாவது தடுப்பூசி. அதன் பிறகு சுவிட்சர்லாந்து சென்று தங்கியபோது, 60 நாட்களுக்குப் பிறகு பூஸ்டரைப் போட்டுக் கொண்டேன். மூன்றாவது அலை வேகமெடுத்த பிறகு உலக நாடுகள் அனைத்தும் பூஸ்டருக்குத் தாவி,வேகம் பிடிக்கின்றன. இஸ்ரேலில் நான்காவது முறையும், அதாவது இரண்டாவது பூஸ்டர் போட்டிக் கொண்டிருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதில் வேடிக்கை என்னவென்றால், பல நாடுகளில், முதல் தடுப்பூசியாக எதைப் போட்டுக் கொண்டோமோ அதனையேதான் பூஸ்டர் வரை போட்டுக் கொள்ள வேண்டுமென்று சொல்ல, சில ஆராய்ச்சி நிறுவனங்களோ, பூஸ்டர் டோசை மாற்றிப் போட்டுக் கொண்டால் வீரியம் அதிகமாவதாகக் கூற, ஏற்கெனவே அரண்டு போய்க் கிடக்கும் மக்கள், எவர் சொல்வதை நம்புவதென்று தெரியாமல் குழம்பிப் போய்க் கிடக்கின்றனர்.

Covid
Covid
Health vector created by freepik - www.freepik.com

பல நாடுகளில், இரண்டாவது தடுப்பூசி போட்டு 60 நாட்கள் நிறைவடைந்த நிலையில் பூஸ்டர் போடுகின்றனர்.

நமது நாட்டில் 270 நாட்கள் ( ஒன்பது மாதங்கள்) முடிந்த பின்னரே பூஸ்டர் போட வேண்டுமென்கின்றனர். இரண்டாவது அலை வேகமெடுத்தபோது,பல நாடுகளில் வணிக நிறுவனங்களின் வேலை நேரத்தை, ஒன்றிரண்டு மணி நேரங்கள் அதிகப் படுத்திக் கொண்டனர். அதாவது வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்துப் பொருள் வாங்குவதற்கு வசதியாக. நமது நாட்டிலோ வணிக நிறுவனங்களின் வேலை நேரத்தைக் குறைத்தனர். இவ்வளவுக்கும் நேரத்தை அதிகப்படுத்திய நாடுகளின் மக்கட்தொகை, நமது நாட்டோடு ஒப்பிடுகையில், மிகக் குறைவே. விமான நிறுவனங்கள் பெரு வீழ்ச்சிக்குப் பிறகு இப்பொழுதுதான் தட்டுத் தடுமாறி உயரே எழும்பிப் பறக்க ஆரம்பித்துள்ளன. விமானப் பயணத்திற்கான நடைமுறைகள்தாம் மிகவும் மர்மமாக உள்ளன. விமானத்தில் ஏறுவதற்கு முன்னர் ஆர்.டி.பி.சி.ஆர் (RT PCR) டெஸ்ட் அவசியம் என்கிறார்கள். நெகடிவ் டெஸ்ட் ரிசல்ட் இருந்தால் மட்டுமே பயண அனுமதி.வெளி நாட்டில் விமானமேறி 10, 12 மணி நேரத்தில் இந்தியா வந்திறங்கினால்,இங்கு மறுபடியும் ஒரு டெஸ்ட்.அதிலும் நெகடிவ் வர வேண்டுமாம்.

நான் கடந்த ஓராண்டாகத் தங்கியிருந்த மேலை நாடுகளில், வீட்டில் யாருக்கேனும் கொரோனா இருந்தால்கூட, கூட இருப்பவர்கள் 3 அல்லது 5 நாட்களுக்குப் பிறகே டெஸ்ட் எடுத்துப் பார்க்க வேண்டுமென்றும்,அப்பொழுதுதான் ஒருவருக்குத் தொற்று இருக்கிறதா என்பதை முழுமையாக அறிய முடியும் என்கிறார்கள். அப்படியானால் நாம் பின்பற்றும் முறை அவசியமற்றது என்றே தோன்றுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இன்னும் சில வேடிக்கைகள் நம் நாட்டில் சர்வ சாதாரணமாகி விட்டது. வணிக வளாகத்திற்கோ, கோயிலுக்கோ போவதைத் தடை செய்பவர்கள், அரசியல் கூட்டங்கள் நடத்தவும்,அமைச்சர்களும், அரசியல் தலைவர்களும் மக்களுக்கு உதவிகள் வழங்குவதாகச் சொல்லிப் பெருந் திரளான மக்களை ஓரிடத்தில் சேர்க்கவும், எந்தத் தடையும் விதிப்பதில்லை.சமூக இடை வெளியைப் பற்றிக் கிஞ்சித்தும் கவலைப் படுவதில்லை. ‘சும்மா செல்லையே பார்த்துக் கொண்டிருந்தால் பார்வைக் குறைபாடு வரும்’ என்று சொல்லியவர்களெல்லாம் தற்போது இருக்கும் இடம் தெரியவில்லை.’ஒரு வேளை பிற்காலத்தில்,கண் டாக்டர்களுக்கு ஒரு வளமான எதிர்காலம் உண்டோ’ என்ற சந்தேகம் வருகிறது. ஏனெனில் விஞ்ஞானம் எந்த அளவுக்கு வளர்ச்சிக்கு வழி காட்டுகிறதோ அதே அளவுக்கு வீழ்ச்சிக்கும் வித்திட்டு விடுகிறது.

‘இன்பம் இன்பம் என்பதெல்லாம் துன்பத்தின் சாயலே!’ என்ற பாடல் வரிகளில் பல உண்மைகள் புதைந்து கிடக்கத்தானே செய்கின்றன.

shopping
shopping
Paper photo created by jcomp - www.freepik.com

சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கும் கருத்துக்கள் பயம் அளிப்பதாகவே உள்ளன. ’அப்படியென்ன முடிவுகள்’ என்றுதானே முணுமுணுக்கிறீர்கள். இந்தக் கொரோனா காலத்தில், நமது நாட்டின் தனிமனித பொருளாதார வளர்ச்சி குறித்த ஆய்வு சொல்வது இதுதான்: ”ஏழைகள் மேலும் ஏழைகளாக ஆகி, அவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டிருக்கையில் பணக்காரர்கள் மேலும் பணத்தைச் சேர்த்து,கொழுத்த பணக்காரர்கள் ஆகிக் கொண்டிருக்கிறார்களாம்”. நிச்சயமாக, நாடு வளர்ச்சி பெற வளம் நிறைந்த முதலீட்டாளர்கள் தேவைதான். அதே சமயம் உழைக்கும் வர்க்கம் உற்சாகமாகப் பணியாற்றினால்தான் வளர்ச்சி உறுதிப்படும்.அவர்களின் உற்சாகம் அவர்கள் ஈட்டும் வருமானத்தில்தான் உள்ளது என்பது,சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

முதலீட்டாளர்களும்,தொழிலாளர்களும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவர்கள்.ஒரு பக்கம் வளர்வதும் மறுபக்கம் தேய்வதும் ஏற்றுக்கொள்ளக் கூடியதன்று.இரண்டின் ஒருமித்த வளர்ச்சியில்தான் ஒட்டுமொத்த இந்தியாவின் வளர்ச்சி யும் உள்ளது.பொருளாதார நிபுணர்கள் அம்மாதிரியான வளர்ச்சிக்கு வழிகோலும் விதமாகத் திட்டங்களைத் தீட்ட வேண்டும். ஆட்சியாளர்களும் தங்கள் ஆட்சியை அடுத்த முறையும் தக்க வைப்பதற்கு எடுக்கும் முயற்சிகளில் பாதியையாவது நாட்டு வளர்ச்சி சிறப்புறக் காட்ட வேண்டும்.’2020 லேயே வல்லரசாவோம்’ என்ற பேச்சு சில ஆண்டுகளுக்கு முன்னால் எல்லோர் வாயிலும் புகுந்து வந்தது. ஆனால், தற்போது அது பற்றிய பேச்சையே காணோம்.ஓ..இரண்டாண்டுகள் பழசாகிப் போனதாலா?

சரி.பிரச்னைக்கு என்னதான் தீர்வு என்கிறீர்களா? நிறைய இருக்கிறது. ஒன்றிரண்டை இங்கு காண்போம்.

-ஆட்சியாளர்கள்,அதிகாரிகள் கூட்டு இருக்கவே கூடாது.நான் பார்த்தவரை, அமெரிக்க ஐக்கிய நாடுகளில் அது மிக மிகக் குறைவு. அன்றைக்கு ஆண்டவர்கள் ஒவ்வொருவராக, வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததற்காக இன்றைக்கு ரெய்டுக்கு ஆளாகிறார்களே, அன்றைக்கும நமது நாட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை செயல்பாட்டில்தானே இருந்தது!

- இன்றைய நடைமுறையில், ’சட்டத்தின் முன் அனைவரும் சமம்’ என்பது ஏட்டளவில் மட்டுமே.அது மீண்டும் நிலை நாட்டப்பட வேண்டும். அரசியல்வாதிகள், அதிகாரிகள், ஆர்டினரி மக்கள் ஆகிய அனைவருக்கும் அது பொதுவாக்கப்பட வேண்டும்.

-பிசாத்துக் காசுக்காக ஓட்டளிக்கும் பழக்கத்தை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும். நம் பணத்தைக் கொள்ளையடித்தவர்களின் வீடுகளில் ரெய்டு நடக்கின்றபோது,பொங்கல், வடைக்காக அவர்களுக்கு ‘ஜே’ போடும் புதுப் பழக்கத்திற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.

ம்…என்ன சொல்லி என்ன?…

ஒண்ணுமே புரியலே உலகத்திலே…

என்னவோ நடக்குது…மர்மமாய் இருக்குது…

ஒண்ணுமே புரியலே உலகத்திலே!

- ரெ.ஆத்மநாதன், கூடுவாஞ்சேரி
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism