Election bannerElection banner
Published:Updated:

`அதிக சலிப்பு; நிமிடங்களில் விற்றுத்தீர்ந்த டிக்கெட்டுகள்!’ - சீனாவில் திறக்கப்பட்ட டிஸ்னி லேண்ட்

டிஸ்னி லேண்ட்
டிஸ்னி லேண்ட் ( AP )

``நாட்டில் பல பகுதிகள் மூடப்பட்டுள்ளன. எனவே, மீண்டும் திறக்கப்படும் முதல்நாளை எண்ணி காத்துக்கொண்டிருந்தோம். முந்தைய நாள்களை ஒப்பிடும்போது என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்பதைக் காண ஆர்வமுடன் வந்தோம்.”

கொரோனா வைரஸால் உலகமே தனது இயல்பு நிலையை இழந்து தவித்துக்கொண்டிருக்கிறது. இதுவரை 42 லட்சம் மக்கள் இந்த வைரஸ் தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். சுமார் 2.84 லட்சம் மக்கள் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இந்தப் பரவலைத் தடுக்க பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மனத்தளவில் கடுமையாக பாதிப்படைந்துவருகின்றனர்.

எனினும், சில நாடுகளில் ஊரடங்கு உள்ளிட்ட நடவடிக்கைகளால் வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டு, விதிமுறைகளுடன் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக, வைரஸ் உருவாகியதாகக் கருதப்படும் சீனாவின் பெரும்பான்மையான பகுதிகள் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளன. இதனால், அந்நாட்டு மக்கள் பலரும் தங்களது அன்றாட வாழ்க்கைக்குத் திரும்பி வருகின்றனர்.

டிஸ்னி லேண்ட்
டிஸ்னி லேண்ட்
AP

இந்நிலையில், சீனாவில் ஊரடங்கு தளர்த்தப்பட்டதை அடுத்து, பல மாதங்களுக்குப் பிறகு ஷாங்காய் பகுதியில் உள்ள டிஸ்னிலேண்ட் தற்போது திறக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள பொழுதுபோக்கு தொடர்பான தளங்களில் டிஸ்னிலேண்டுக்கு எப்போதும் சிறப்பு இடம் உண்டு.

இதனால், டிஸ்னிலேண்ட் பிரியர்கள் பலரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எனினும், முன்பதிவு அடிப்படையில், குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. அங்கு வரும் மக்களுக்கு உடலின் வெப்பநிலை கண்காணிக்கப்படுகிறது. முகக்கவசங்கள் அணிதல், வரிசைகள் மற்றும் சவாரிகளின்போது, தனிமனித இடைவெளியைக் கடைபிடித்தல் போன்றவற்றை டிஸ்னிலேண்ட் அலுவலகர்கள் தொடர்ந்து வலியுறுத்திவந்தனர்.

Vikatan

தனிமனித இடைவெளியைக் கடைபிடிக்க, தரைகளில் கோடுகள் வரையப்பட்டும், பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அலுவலர்கள் செய்துவைத்துள்ளனர். முன்னெச்சரிக்கையாக, மிக்கி மவுஸ் போன்ற கேரக்டர்களுடன் உரையாடுவது உள்ளிட்ட சில முக்கியமான நிகழ்ச்சிகளையும் அந்நிர்வாகம் தடைசெய்திருந்தது. சீனாவின் சில பகுதிகளில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துவருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பான அச்சம் மக்கள் மத்தியில் நிலவுவதாகவும் கூறப்படுகிறது. இத்தகைய சூழலிலும் டிஸ்னிலேண்ட் டிக்கெட்டுகள் சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்துவிட்டதாக சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

டிஸ்னிலேண்ட் திறந்த முதல்நாளே வந்த சிலர், ``நாட்டில் பல பகுதிகள் மூடப்பட்டுள்ளன. எனவே, மீண்டும் திறக்கப்படும் முதல்நாளை எண்ணி காத்துக்கொண்டிருந்தோம். முந்தைய நாள்களை ஒப்பிடும்போது, என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்பதைக் காண ஆர்வமுடன் வந்தோம்” என உற்சாகத்துடன் கூறினர். ``பல நாள்களாக வீடுகளுக்குள் முடங்கி இருக்கிறோம். அதிக அளவில் சலிப்பு ஏற்பட்டுவிட்டது” என்றும் தெரிவித்துள்ளனர். ஷாங்காய் சிஸ்னிலேண்டில், கடந்த ஆண்டு மட்டும் சுமார் 12 மில்லியன் பார்வையாளர்கள் வந்துள்ளனர். எனினும், அதிகபட்சமாக ஃபுளோரிடாவில் உள்ள டிஸ்னி வேல்டில் சுமார் 21 மில்லியன் பார்வையாளர்கள் வந்துள்ளனர். டிஸ்னியின் நம்பர் 1 டிஸ்னிலேண்டாக இது கூறப்படுகிறது.

டிஸ்னி லேண்ட்
டிஸ்னி லேண்ட்
AP

``இது மிகவும் உணர்ச்சிகரமான காலை” என்கிறார், ஷாங்காய் டிஸ்னிலேண்டின் தலைவர் ஜோ ஸ்காட். தொடர்ந்து அவர் நியூயார்க் டைம்ஸிடம் பேசுகையில், ``வாழ்க்கை உங்களை சோர்வுக்கு உள்ளாக்கும். ஆனால், நம்முடைய பிராண்ட் நம்பிக்கையாக இருக்க வேண்டும். அனைத்து சுரங்கப்பாதையின் முடிவிலும் ஒளி இருக்கும். டிஸ்னிலேண்டுக்கு வரும் அனைவரும் தனிமனித இடைவெளியை மிகவும் மதித்து செயல்படுகிறார்கள்” என்று கூறியுள்ளார். மேலும், துணைத் தலைவர் ஆன்ட்ரூ போல்ஸ்டெயின் பேசும்போது, ``பெரும்பான்மையான விளையாட்டுகள் திறந்திருக்கும். போகப்போக ஒவ்வொன்றாகத் திறக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

சீனாவில் வைரஸ் பாதிப்பு அதிக அளவில் குறைந்ததால், வணிக நடவடிக்கைகள் கடந்த மார்ச் மாத இறுதி முதல் தொடங்கப்பட்டன. பள்ளிகள், முக்கிய சுற்றுலாத்தலங்கள் ஆகியவையும் திறக்கப்பட்டன. கடந்த மூன்று மாத ஊரடங்கால் டிஸ்னி நிர்வாகத்துக்கு லாபத்தில் சுமார் 91 சதவிகிதம் சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், டிஸ்னியின் தயாரிப்பில் வெளிவரும் திரைப்படங்களின் வெளியீட்டையும் அந்நிறுவனம் தாமதப்படுத்தியுள்ளது. டிஸ்னி ப்ளஸ் வழியாக சில வருவாயை டிஸ்னி நிறுவனம் ஈட்டியதாகவும் கூறப்படுகிறது.

`பொதுமக்கள் நலனே முக்கியம்; லாபக் கணக்கெல்லாம் அப்புறம்தான்!’ -மூடப்பட்ட டிஸ்னி லேண்ட் பூங்காக்கள்
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு