Published:Updated:

`லீ-க்கு பக்கபலமாக இருந்த மருத்துவர்'- ஜாங்மிங் மரணத்தால் கலங்கும் சீனா #CoronaVirus

மருத்துவர் ஜாங்மிங்
மருத்துவர் ஜாங்மிங்

``ஆயிரக்கணக்கில் மக்கள் இந்த கொரோனாவால் இறந்துகொண்டிருக்கும் சூழலில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் முக்கிய மருத்துவர்களும் மறுபுறம் உயிரிழக்கும் நிலைமை தொடர்ந்து அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது"

கொரோனா வைரஸின் தாக்கத்தால் உலகின் பல நாடுகளிலும் கடந்த சில மாதங்களாக பதற்றமான சூழலும் மக்களிடையே அச்சமும் நிலவி வருகிறது. இதன் பாதிப்பு குறித்து சீன அரசு முதலில் மௌனம் காத்ததே, பிரச்னை விஸ்வரூபம் எடுக்கக் காரணமாக கருதப்படுகிறது. இந்த வைரஸ் தாக்குதல் குறித்து சீன மருத்துவரான லீ வென்லியாங் கடந்த டிசம்பர் மாதமே எச்சரித்துள்ளார். இதுதொடர்பான அவரது குறுந்தகவல்கள் வெகுவிரைவாக பரவத்தொடங்கியது. இதனால், சீனாவைச் சேர்ந்த பொது சுகாதாரத் துறை அதிகாரிகள், மருத்துவர் லீ வென்லியாங்கைக் கண்டித்துள்ளனர். பின்னர், அவரும் பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்துவிட்டார்.

மருத்துவர்  லீ  வென்லியாங்
மருத்துவர் லீ வென்லியாங்

இந்த நிலையில், மருத்துவம் லீ-க்கு பக்கபலமாக இருந்து அவருடன் பணியாற்றிய மற்றோரு மருத்துவரான டாக்டர் மெய் ஜாங்மிங் என்பவரும் வுகானின் ஜின்யின்டன் மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ள செய்தி பலரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

`லீ... நீங்கள்தான் எங்கள் ஹீரோ!’ -கொரோனா வைரஸைக் கண்டறிந்த சீன மருத்துவருக்கு நேர்ந்த கதி

டாக்டர் மெய் ஜாங்மிங்

மருத்துவர் லீ பணியாற்றிய துறையிலேயே ஜாங்மிங்கும் பணியாற்றி வந்துள்ளார். கொரோனா வைரஸ் பரவுவது தொடர்பாக எச்சரிக்கை விடுத்து தண்டிக்கப்பட்ட மருத்துவர்களில் இவரும் ஒருவர். 1986-ம் ஆண்டு மருத்துவத் துறையில் பட்டம் பெற்றதிலிருந்து வுகான் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். கண் நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதில் நிபுணத்துவம் பெற்றவராக அறியப்படுகிறார்.

வுகான் மருத்துவமனை அவரைப் பற்றி, ``தனது பணியில் தீவிரமாகவும் பொறுப்புணர்வோடும் செயல்படக்கூடியவர். நோயாளிகள் மீது கவனமாகவும் பொறுமையாகவும் செயல்படக்கூடியவர். அவருடைய மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறொம்" என்று கவலையுடன் செய்தி வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

கடந்த டிசம்பர் மாதம் முதல் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளித்து வந்த சுமார் 25-க்கும் மேற்பட்ட தலைமை மருத்துவர்கள் இறந்துள்ளனர். இதில் 13-க்கும் மேற்பட்டவர்கள் இந்த வைரஸ் தாக்கத்தால் இறந்துள்ளனர் என்பது உறுதியாகியுள்ளது. மருத்துவர் லீயின் மரணத்தைத் தொடர்ந்து, வுகானின் வுசாங் மருத்துவமனையின் தலைவரான லியு ஜிமிங் இந்த வைரஸால் இறந்தார். லீயின் மரணத்தின்போது ஏற்பட்ட சர்ச்சைகள் இவரின் மரணத்தின்போதும் ஏற்பட்டது. மக்கள் தொடர்ந்து அரசாங்கத்தை விமர்சித்தனர்.

இவர்களை அடுத்து, சீன மருத்துவமனையின் முக்கியத் தலைவர்கள் உட்பட பலரும் சிகிச்சையின்போது நோய்த்தொற்று ஏற்பட்டு இறந்துள்ளனர். மருத்துவர் ஜாங் ஜின்சிங் என்பவர் பணியின்போது மாரடைப்பு ஏற்பட்டு இறந்துள்ளார். ஆயிரக்கணக்கில் மக்கள் இந்த கொரோனாவால் இறந்துகொண்டிருக்கும் சூழலில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் முக்கிய மருத்துவர்களும் மறுபுறம் உயிரிழக்கும் நிலைமை தொடர்ந்து அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

கொரோனா
கொரோனா

மருத்துவர்களைத் தவிர்த்து சீனாவில், இதுவரை சுமார் 2,900-க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். 80,000-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். வாரம்தோறும் அதிகரித்து வந்த புதிய நோயாளிகளின் எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆனால், சீனாவைத் தவிர்த்து மற்ற நாடுகளில் இந்த வைரஸின் தாக்கம் அதிகமாகிக்கொண்டு வருகிறது. தென் கொரியா, இத்தாலி, ஜப்பான் மற்றும் இரான் உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த வைரஸை எதிர்த்து தற்போது போராடி வருகிறது. எளிதாகவும் வேகமாகவும் பரவும் இந்த வைரஸின் தாக்குதல் குறித்து உலக பொது சுகாதார நிறுவனம் உட்பட பல நாடுகளும் கவலையில் உள்ளது.

அமேசான், கூகுள், ட்விட்டர்...  கொரோனா பாதிப்பில் ஊழியர்கள், நிறுவனங்கள் எடுத்த நடவடிக்கைகள்!
அடுத்த கட்டுரைக்கு