Published:Updated:

`புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இந்தியச் சிறுவனுக்கு `ஹீரோ'வான துபாய் இளவரசர்!'- நெகிழ வைத்த சந்திப்பு

சிறுவன் அப்துல்லா மற்றும் ஷேக் ஹம்தன்
சிறுவன் அப்துல்லா மற்றும் ஷேக் ஹம்தன்

அப்துலாவைப் பார்த்ததும் கட்டிப்பிடித்ததைக் குறிப்பிட்ட பாத்திமா, ``அவனைப் பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி என்றார். நேர்மறையான எண்ணங்களுடன் இருக்க அவரை நீங்கள் ஊக்குவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டதாகக் குறிப்பிட்டார்.

ஹைதராபாத்தைச் சேர்ந்த 7 வயதுச் சிறுவன், அப்துல்லா. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இந்தச் சிறுவன் கடந்தசில மாதங்களாக அதற்கான சிகிச்சை பெற்று வருகிறார். உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரது பெற்றோர்கள் ஜனவரி மாதம் முதல் சிறுவன் பள்ளிக்குச் செல்வதையும் நிறுத்தினர். யூ டியூப்பில் அதிகமான வீடியோக்களைப் பார்த்து நேரத்தைச் செலவிட்டு வந்த அப்துல்லா, துபாய் இளவரசரான ஷேக் ஹம்தன் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் பேசும் வீடியோக்களைப் பார்த்துள்ளார். இளவரசரின் பேச்சுகளால் ஈர்க்கப்பட்ட அப்துல்லா, அவரது தீவிர ரசிகராகவும் மாறியுள்ளார்.

சிறுவர்கள் அப்துல்லா, அகமது மற்றும் ஷேக் ஹம்தன்
சிறுவர்கள் அப்துல்லா, அகமது மற்றும் ஷேக் ஹம்தன்

அப்துல்லாவைப் பற்றி அவரது அம்மா நவுஷீன் பாத்திமா, ``அப்துல்லாவுக்குப் புற்றுநோய் இருப்பது அவனுக்கே தெரியாது. மருத்துவ அறிக்கைகள் வந்தபிறகு இதுபற்றிக் கேட்டுக்கொண்டிருந்தான். அவனது உடலில் சில மோசமான செல்கள் இருப்பதாக மட்டுமே நாங்கள் கூறினோம். சிகிச்சையின்போது அப்துல்லா அவரது வீடியோக்களைப் பார்க்கத் தொடங்கினான். தன்னுடைய ஹீரோ என்று சொல்லிக் கொண்டிருந்தான். கீமோதெரபியின்போது அவனுக்கு சோர்வு ஏற்படுவதிலிருந்து மீட்க அவருடைய பெயரையே பயன்படுத்துவோம்" என்று கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து அப்துல்லா சமூக வலைதளத்தில் அவரைச் சந்திக்க விரும்புவதாகக்கூறி வீடியோ ஒன்றையும் பகிர்ந்திருந்தார். பின்னர், இது தொலைக்காட்சிகளிலும் செய்தியானது. அந்த வீடியோவில், ``ஷேக் ஹம்தன் மிகவும் சாந்தமானவர், துணிச்சலானவர் மற்றும் அன்பானவர். நான் அவரது செல்லப்பிராணிகளைச் சந்திக்க விரும்புகிறேன். அவருடைய ஆடைகளைப் பார்க்க விரும்புகிறேன். நான், உங்களுடைய மிகப்பெரிய ரசிகன். உங்களைச் சந்திக்க விரும்புகிறேன். உங்களை மிகவும் நேசிக்கிறேன்" என்று பேசியிருந்தார். இந்த வீடியோ இளவரசரின் கவனத்திற்கும் சென்றுள்ளது. அவரும் அப்துல்லாவை அவரது குடும்பத்துடன் அழைத்து கடந்த வெள்ளிக்கிழமை சந்தித்துள்ளார்.

சந்திப்பிற்குப் பின் பாத்திமா கல்ஃப் நியூஸிடம் பேசும்போது, ``அப்துல்லாவுக்கு அவரைச் சந்திக்க வேண்டும் என்பது மிகப்பெரிய ஆசை. அது தற்போது நிறைவேறியுள்ளது. தனது நிஜ வாழ்க்கையின் ஹீரோவை அவன் சந்தித்துள்ளான். இளவரசரின் இந்த இதயத்திற்கு நெருக்கமான சந்திப்பால் நாங்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். அப்துல்லா மற்றும் அவனது தம்பியிடம் விளையாட்டுத்தனமாகவும் அன்பாகவும் நடந்துகொண்டார். மிகவும் எளிமையாக இருந்தார். இளவரசருடன் பேசுவது போலவே நாங்கள் உணரவில்லை" என்றார்.

ஷேக் ஹம்தன் உடன் அப்துல்லா மற்றும் குடும்பத்தினர்
ஷேக் ஹம்தன் உடன் அப்துல்லா மற்றும் குடும்பத்தினர்

அப்துலாவைப் பார்த்ததும் கட்டிப்பிடித்ததைக் குறிப்பிட்ட பாத்திமா, ``அவனைப் பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி என்றார். அப்துல்லா மிகவும் வலிமையானவர். நேர்மறையான எண்ணங்களுடன் இருக்க அவரை நீங்கள் ஊக்குவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். ஒரு குடும்பத்தினராக எப்போதும் அவருடன் நீங்கள் நிற்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அவனுக்கு அளிக்கப்பட்டுவரும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டார்" என்றும் கூறினார்.

இரண்டு சகோதரர்களில் ஒருவர் துபாயில் தங்க வேண்டும், மற்றொருவர் மட்டுமே இந்தியாவுக்குச் செல்ல முடியும் என்று ஹம்தன் சிறுவர்களிடம் விளையாடியுள்ளார். இதனால், அப்துல்லாவின் சகோதரன் அகமது குழப்பமடைந்துள்ளார். ஆனால், ஷேக் ஹம்தனுடன் தங்குவதற்கு அப்துல்லா விருப்பம் தெரிவித்ததை வேடிக்கையாகக் குறிப்பிட்டார், பாத்திமா. மேலும், ``ஹம்தனின் குரல் அப்துல்லாவிற்கு மிகவும் பிடித்துள்ளது. இதைப் பற்றி அவன் இரண்டு, மூன்று முறைகள் என்னிடம் கூறிவிட்டான்" என்றும் பாத்திமா குறிப்பிட்டார்.

சுமார் பதினைந்து நிமிடங்கள் நடந்த இந்தச் சந்திப்பிற்குப் பிறகு ஹம்தனின் செல்லப்பிராணிகளுடன் அப்துல்லா நேரத்தைக் கழித்துள்ளார். யானைகள், ஒட்டகச்சிவிங்கி ஆகியவற்றிற்கு உணவுகளை வழங்கி ஒரு மணி நேரம் அதனுடன் விளையாடியுள்ளார். அப்துல்லாவின் தந்தை தஜ்முல் ஹூசைன் இளவரசருக்குப் பரிசுகளையும் வழங்கியுள்ளார். பின்னர், துபாயின் பிரபல சுற்றுலா தளங்களான புர்ஜ் கலீஃபா, கடற்கரை மற்றும் பாலைவன சவாரி ஆகிவற்றிற்கும் சென்றுள்ளனர். ``அப்துல்லாவை ஒரு நோயாளியாக உணரவைக்க நாங்கள் விரும்பவில்லை. இவை அனைத்தும் அவனை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் என நம்புகிறோம்" என்று வருத்தத்துடன் கூறியுள்ளார்.

ஷேக் ஹம்தன்
ஷேக் ஹம்தன்

இந்த நிலையில், அப்துல்லாவுடன் ஷேக் ஹம்தன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. சிறுவனின் கதையுடன் இந்தச் சந்திப்பை அறிந்த பலரும் நெகிழ்ந்து இந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்து வருகின்றனர்.

Credits : GulfNews

அடுத்த கட்டுரைக்கு