கடலில் டிராஃபிக் ஜாம்... சூயஸ் கால்வாயில் சிக்கிய ராட்சத Ever Given கப்பல்... எண்ணெய் விலை உயருமா?!

சூயஸ் கால்வாய் இல்லாவிட்டால் ஆசியாவிலிருந்து ஐரோப்பாவிற்கு செல்ல இருக்கும் ஒரே கடல்வழி ஆப்பிரிக்கா வழியே செல்வது. ஆனால், இதற்கு 34 நாட்கள் வரை செல்லும்.
டிராஃபிக் ஜாம் என்றால் சாலைகளில்தான் ஏற்படும் என நாம் பொதுவாக நினைத்துக்கொள்வோம். ஆனால், வானத்திலும், ஏன் கடலிலும்கூட டிராஃபிக் ஜாம் ஏற்படும். அப்படி கடலில் நேற்று ஏற்பட்ட டிராஃபிக் ஜாம் உலக வர்த்தகத்தையே ஸ்தம்பிக்க வைத்துக்கொண்டிருக்கிறது.
உலகின் பரபரப்பான வர்த்தகப் பாதைகளில் ஒன்று எகிப்தின் சூயஸ் கால்வாய். இந்த கால்வாய் வழியில்தான் குறுக்கே 400 மீட்டர் நீளமும், 59 மீட்டர் அகலமும் கொண்ட உலகின் மிகப்பெரிய கப்பல்களில் ஒன்றான Ever Given கப்பல் மாட்டிக்கொண்டுள்ளது. கடந்த செவ்வாய்க் கிழமை கால்வாயின் இரு பக்கங்களிலும் இக்கப்பல் மோதி, பக்கவாட்டில் மாட்டிக்கொண்டதால் மிகப்பெரிய கடல்வழி டிராஃபிக் ஜாம் உருவாகி உள்ளது. இதனால் டஜன் கணக்கான கப்பல்கள் கடந்து செல்ல முடியாமல் கடலில் தேங்கி நிற்கின்றன.
கடந்த செவ்வாய்கிழமை (மார்ச் 22) காலை, எவர் கிவன் எண்ணெய்க் கொள்கலன் கப்பல் சீனாவிலிருந்து நெதர்லாந்தின் துறைமுக நகரமான ரோட்டர்டாமிற்குப் புறப்பட்டது. இக்கப்பல் ஆயிரக்கணக்கான டன் சரக்குகளை ஏற்றிக் கொண்டு மத்தியதரைக் கடலுக்குச் செல்லும் வழியில் சூயஸ் கால்வாயின் வழியாக சென்று கொண்டிருந்தது. மார்ச் 22 அன்று எகிப்தின் சூயஸ் கால்வாயை வந்தடைந்த இந்தக் கப்பல் மார்ச் 23 அங்கிருந்து புறப்பட்டு நெதர்லாந்தின் ரோட்டர்டாம் நோக்கி நகர ஆரம்பித்தது.

சூயஸ் கால்வாயின் ஊடே அமைதியாக சென்று கொண்டிருந்த கப்பல், எதிர்பாராமல் வீசிய திடீர் காற்றால் தன் கட்டுப்பாட்டை இழந்து, கப்பலின் முன்பக்கம் கால்வாயின் வடக்கு பக்க கரையில் மோதி திருப்ப முடியாதபடி மாட்டிக்கொண்டது. அதே வேகத்தில் கப்பலின் பின் பகுதி மேற்குப் பக்கமாக இழுபட்டு கால்வாயின் மறு கரையில் சென்று மோதி மேற்கொண்டு நகர முடியாமல் இறுகியது. அங்கு வீசிய கடும் காற்று, மணல் சூறாவளி, தூசி புயலால் ஏற்பட்ட பார்வைக்குறைப்பாட்டால் இந்த அசம்பாவிதம் நிகழந்திருக்கலாம் என்று கப்பல் நிறுவனம் விளக்கம் அளிக்கிறது. கப்பலின் அனைத்து ஊழியர்களும் பாதுகாப்பாக இருப்பதாகவும் இதுவரை எந்த ஒரு எண்ணெய்க் கசிவோ, வேறு அசம்பாவிதங்களோ ஏற்படவில்லை என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
Ever Given சரக்குக் கப்பல்
2,00,000 டன் எடையுள்ள, மெகாஷிப் என அழைக்கப்படும் எவர் கிவன் கப்பல், 2018-ம் ஆண்டில் கட்டப்பட்டு, தைவானிய போக்குவரத்து நிறுவனமான எவர்கிரீன் மரைன் மூலம் இயக்கப்படுகிறது. அமெரிக்காவின் எம்பயர் ஸ்டேட் பில்டிங் அளவுக்கு நீளமான இக்கப்பல்தான் சூயஸ் கால்வாயில் இதுவரை சென்ற மிகப்பெரிய கப்பல். 2,20,000 டன் கொள்கலன்களை எடுத்துச் செல்லக்கூடிய இக்கப்பல் மிகப்பெரிய சரக்குக் கப்பல் வகையை சேர்ந்தது.
அல்ட்ரா-லார்ஜ் கன்டெய்னர் ஷிப்ஸ் (யு.எல்.சி.எஸ்) என்று அழைக்கப்படும் புதிய வகை கப்பல்களில் எவர் கிவனும் ஒன்று. சூயஸ் கால்வாய் வரலாற்றில் இவ்வாறு சிக்குண்ட மிகப்பெரிய கப்பல் இதுதான்.
சூயஸ் கால்வாய்!
25, ஏப்ரல் 1859-ல் ஆரம்பிக்கப்பட்ட சூயஸ் கால்வாய் கட்டுமானப் பணி சூயஸ் கால்வாய் நிறுவனத்தினால் ஆரம்பிக்கப்பட்டது. 1869 நவம்பரில் இது போக்குவரத்துக்காகத் திறந்து வைக்கப்பட்டது.
193 கிலோமீட்டர் நீளமுள்ள (120 மைல்) சூயஸ் கால்வாய் உலகின் மிகவும் பரபரப்பான நீர்வழிகளில் ஒன்று. முக்கியமாக மத்திய கிழக்கிலிருந்து ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவிற்கு கச்சா எண்ணெயை, பல கொள்கலன் கப்பல்கள் கொண்டு செல்லும் மிக முக்கிய கடல்வழிப் பாதை இதுதான். சூயஸ் கால்வாய் இல்லாவிட்டால் ஆசியாவிலிருந்து ஐரோப்பாவிற்கு செல்ல இருக்கும் ஒரே கடல்வழி ஆப்பிரிக்கா வழியே செல்வது. ஆனால், இதற்கு 34 நாட்கள் வரை செல்லும்.

ஒரு நாளுக்கு சுமார் 50 கப்பல்கள் இவ்வழியை கடக்கின்றன. மத்தியதரைக் கடலை செங்கடலுடன் இணைத்து, ஆசியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான குறுகிய கடல் இணைப்பை இது வழங்குகிறது. இந்த கால்வாயின் வழியாக உலகளாவிய வர்த்தகத்தில் சுமார் 12 சதவிகிதமும், திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு 8 சதவிகிதமும் என ஒரு நாளுக்கு சுமார் ஒரு மில்லியன் பீப்பாய் எண்ணெய் எடுத்துச்செல்லப்படுகின்றன.
இந்தப் பெரிய கொள்கலன் கப்பல் சூயஸ் கால்வாயில் பல நாட்கள் சிக்கித் தவிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கப்பலை நகர்த்துவதிலும், கால்வாயின் போக்குவரத்து நெருக்கடியை சரி செய்வதிலும் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. சூயஸ் கால்வாய் ஆணையம் வெளியிட்ட படங்களில், கப்பலின் ஹல் கால்வாயின் ஒரு கரையில் இறுகிப்போயுள்ளதை காட்டுகிறது. மீட்பு பணியில் பல இழுவைப் படகுகள் ஈடுபட்டு வருகின்றன.
இதனால் சூயஸ் கால்வாயில் மிகப்பெரும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இருவழிகளிலும் போக இருந்த பல நூறு கொள்கலக் கப்பல்கள் டிராஃபிக்கில் மாட்டி ஸ்தம்பித்து நிற்கின்றன.

நிலைமை அடுத்த ஓரிரு நாட்களுக்குள் சரியாகாவிட்டால் உலக சந்தையில் பல பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட ஆரம்பிக்கலாம். தேவை அதிகரிப்பால் விலை உயர்வு ஏற்படலாம். இதனால் விநியோக சங்கிலியில் பெரும் பாதிப்பு ஏற்படும் என்றும் அதனால் உலக வர்த்தக, பொருளாதார சந்தையில் பெரும் நெருக்கடி ஏற்படக் கூடும் எனவும் அஞ்சப்படுகின்றது. உலக சந்தையில் எண்ணெய் விலை ஏறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
அதைவிட முக்கியமாக, இந்த ராட்சத கப்பலை இழுக்கும் முயற்சிகள் தோல்வியுற்றால் அதிலுள்ள சரக்குகளை அகற்றத் தொடங்குவோம் என அதன் நிறுவனம் கூறியுள்ளது.
இந்தப் போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க கால்வாயின் பழைய பாதையை தற்காலிகமாகத் திறக்கவுள்ளதாக எகிப்து அரசு கூறியுள்ளது. அதன் வழியே மற்றைய கப்பல்கள் திருப்பி விடப்பட உள்ளதாகவும் தெரிகிறது.
ஏற்கெனவே கொரோனாவினால் நலிந்து போயுள்ள உலக பொருளாதாரம் இக்கப்பல் டிராஃபிக் ஜாமால் மேலும் வீழ்ச்சியை சந்திக்குமோ என்கிற கவலை உலக நாடுகளைச் சூழ்ந்துள்ளது!