Published:Updated:

`68 வருடங்களாக இங்குதான் இருக்கிறேன்!' - இங்கிலாந்து அரசால் கலங்கும் 95 வயது முதியவர்

95 வயது முதியவர் ஆன்டோனியோ ஃபின்னெல்லி
95 வயது முதியவர் ஆன்டோனியோ ஃபின்னெல்லி

75% வெளிநாட்டினருக்கு ஏற்கெனவே குடியுரிமை ஆவணங்கள் கிடைத்துவிட்டன. மீதமிருக்கும் 25% மக்களைத்தான் கூடுதல் ஆவணங்கள் சமர்ப்பிக்கச் சொல்லியிருக்கிறோம்.

இத்தாலியைச் சேர்ந்த 95 வயது முதியவரான ஆன்டோனியோ ஃபின்னெல்லி, 68 வருடங்களாக இங்கிலாந்தில் வசித்து வருகிறார். 32 வருடங்களாக அரசின் ஓய்வூதியம் வாங்கி வரும் இவரின் குடியுரிமையை நிரூபிக்க இங்கிலாந்து அரசு கூறியிருக்கிறது. இங்கிலாந்தின் உள்துறை அமைச்சகம், இதுதொடர்பான ஆவணங்களையும் விரைவில் சமர்ப்பிக்கச் சொல்லியிருக்கிறது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிந்த பிறகு பல்வேறு மாற்றங்களை இங்கிலாந்து உள்நாட்டில் செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இங்கிலாந்தில் வசித்துவரும் மற்ற ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த மக்களைத் தங்கள் குடியுரிமையை நிரூபிக்கும் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டுமென அரசு கூறியுள்ளது. இதனால், ஏழைகள் மற்றும் முதியவர்கள் உட்பட பலரும் பாதிப்படைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இங்கிலாந்து
இங்கிலாந்து

1952ல் இங்கிலாந்திற்குக் குடிபெயர்ந்த ஆன்டோனியோ தன்னுடைய பாதி வாழ்க்கையை அங்கேதான் கழித்திருக்கிறார். அரசின் இந்த நடவடிக்கை தொடர்பாகப் பேசிய அவர், ``நான் முதன் முதலில் இங்கிலாந்திற்கு வந்தபோது என்னிடம் கொடுக்கப்பட்ட வெளிநாட்டினர் சான்றிதழை இன்னும் வைத்திருக்கிறேன். ஆனால், என்னுடைய வங்கிக் கணக்குகளைத் தான் மீண்டும் கேட்கின்றனர்" என்று வேதனையுடன் கூறுகிறார். மனைவியையும், மகனையும் இழந்த ஆன்டோனியோ தன்னுடைய பேரக்குழந்தைகளுடன் தற்போது வசித்து வருகிறார்.

``ஆன்டோனியோ ஃபினெல்லி 70 ஆண்டுகளாக இங்கு வசித்து வருகிறார். சுமார், 40 ஆண்டுகள் இங்கு பணியாற்றியுள்ளார். மிகவும் நல்ல மனிதர். ஆனால், இப்போது அவருக்குக் குடியுரிமையை நிரூபிப்பது ஒரு சுமையைப்போல முன் நிற்கிறது. இந்த விஷயத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை" என்கிறார் சமூக ஆர்வலரான டிமிட்ரி ஸ்கார்லடோ.

தொடர்ந்து பேசிய ஸ்கார்லடோ, ``இந்தப் பிரச்னை ஆன்டோனியோவிற்கு மட்டுமல்ல, அவரைப் போல பல முதியவர்கள், ஏழை எளியமக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கிட்டத்தட்ட 70 வருடங்களாக இந்த நாட்டில் வசித்து வரும் ஆன்டோனியோவுக்குக் குடியுரிமையை நிரூபிக்கும் நிர்பந்தம் இருப்பதைப் பார்க்கும்போது, இந்த அரசாங்கம் வெளிநாட்டினரை எப்படிஅணுகுகிறது என்ற சந்தேகம் எழுகிறது. மேலும், ஆன்டோனியோ முகாமிற்கு வந்துள்ளதால் எங்களைப் போன்ற தன்னார்வலர்களின் உதவியைப் பெற முடிகிறது. எந்தப் பட்டியலிலும் பெயர் இல்லாதவர்கள், தனியாக வசிப்பவர்கள் அல்லது பல்வேறு பாதிப்பிற்கு உள்ளானவர்கள் எங்கே செல்வார்கள்?" எனத் தன்னார்வலரான டிமிட்ரி ஸ்கார்லடோ கேள்வியும் எழுப்பியுள்ளார்.

எம்.பி ஆல்பெர்டோ காஸ்டா,
எம்.பி ஆல்பெர்டோ காஸ்டா,

இதற்கு அரசாங்கத் தரவுகள் டிஜிட்டலைஸ் செய்யப்படாததுதான் முக்கியமான காரணம் எனக் கூறப்படுகிறது. பிரிட்டன் எம்.பி ஆல்பெர்டோ காஸ்டா, இந்தப் பிரச்னை குறித்து தொடர்ந்து மற்ற உறுப்பினர்களுடன் விவாதித்து வருவதாகத் தெரிவித்திருக்கிறார். மேலும், ``75% வெளிநாட்டினருக்கு ஏற்கெனவே குடியுரிமை ஆவணங்கள் கிடைத்துவிட்டது. மீதமிருக்கும் 25% மக்களைதான் கூடுதல் ஆவணங்கள் சமர்ப்பிக்கச் சொல்லியிருக்கிறோம்" எனத்தெரிவித்திருக்கிறது இங்கிலாந்தின் உள்துறை அமைச்சகம்.

அடுத்த கட்டுரைக்கு