Published:Updated:

20 ஆண்டுகள் தவமிருந்து பெற்ற குழந்தை.. 13 வாரத்தில் நேர்ந்த சோகம்.. மனதை உலுக்கும் புகைப்படம்!

டாமி ஐரேசன் குழந்தையுடன் அழுதுகொண்டே வரும் புகைப்படம்
டாமி ஐரேசன் குழந்தையுடன் அழுதுகொண்டே வரும் புகைப்படம் ( Daily mail )

நான் அவனிடம் பாடிக் காண்பித்தேன். அவனைப் பிடித்துக்கொண்டேன்... நேசித்தேன். இறுதி தருணத்தில் அவன் கண்களைத் திறக்கவில்லை.

இங்கிலாந்தின் கிங்ஸ் லின் டவுனைச் சேர்ந்தவர் டாமி ஐரேசன் என்ற பெண். டாமிக்குத் திருமணமாகி ஒரு மகள் இருக்கிறார். இரண்டாவதாக டாமிக்கு ஆண் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று டாமியும் அவரின் கணவரும் தீர்மானித்துள்ளனர். ஆனால், டாமிக்கு திடீரென எண்டோமெட்ரியோசிஸ் என்னும் நோய் தொற்று ஏற்பட்டது. இதனால் அவரால் கர்ப்பமடைவதில் பிரச்னை இருந்துவந்த நிலையில், முதல் குழந்தை பிறந்த பின் நீண்ட வருடங்கள் ஆன பிறகு 2017-ம் ஆண்டு கர்ப்பம் தரித்துள்ளார்.

2018-ம் ஆண்டு ஜூலை மாதம் ஆண் குழந்தை பிறந்தது. வில்பர் எனப் பெயரிடப்பட்ட அந்தக் குழந்தை குறை மாதத்தில் பிறந்ததால் பிறந்தது முதல் நோய்வாய்பட்டிருந்தது. அரிய மரபணு மாற்று நோயால் சுவாசிக்க முடியாமலும், கை, கால்களை நகர்த்த முடியாமலும் குழந்தை இருந்துள்ளது. இதனால் மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருந்தது.

டாமி ஐரேசன்
டாமி ஐரேசன்
Daily mail

குழந்தை கருவில் இருக்கும்போதே பிரச்னை இருப்பதை மருத்துவர்கள் டாமியிடம் வலியுறுத்தியுள்ளனர். ஆனால், 20 வருடம் கழித்து கர்ப்பம் தரித்திருப்பதால் அதைக் கலைக்க டாமி தயாராகவில்லை. இதன்பிறகு 32 வாரங்கள் கழித்து சிசேரியன் மூலம் குழந்தை பெற்றெடுத்துள்ளார். கிட்டத்தட்ட 12 வாரங்கள் மருத்துவமனையில் வில்பர் சிகிச்சை எடுத்துவந்த நிலையில் அவரின் மரபணு சோதனை முடிவுகள் வந்துள்ளன. நோய் தொற்று இருந்தாலும் மூளை இயல்பாகச் செயல்படுவதால் குழந்தை குணமடைவான் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, குழந்தை வில்பரை வீட்டுக்கு அழைத்துச் செல்லமுடிவெடுத்துள்ளார் டாமி. அப்போது எதிர்பாராதவிதமாக குழந்தைக்கு கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட மூளையில் பாதிப்பு ஏற்பட்டது.

மூளை பாதிப்பிலிருந்து மீள சிறிது காலம் தேவைப்படும் டாமியிடம் மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால், இரண்டு வாரங்களுக்குப் பிறகு மருத்துவர்கள் எதிர்பாராத அந்தச் சம்பவம் நிகழ்ந்தது. ஆம் வில்பர் உயிரிழந்துவிட்டான். வில்பர் பிறந்ததிலிருந்தே மருத்துவமனையின் எமர்ஜென்சி ரூமைத் தாண்டியதில்லை. அவரின் உடல்நிலையைக் கருத்தில்கொண்டு குழந்தையை வெளியில் கொண்டுசெல்ல மருத்துவர்கள் அனுமதிக்கவில்லை.

ஆனால் இறக்கும் நொடியில், டாமி வில்பரை மருத்துவமனையின் வாசல் வரை தன் தோளில் தூக்கிக்கொண்டு நடந்தார். அதுவே வில்பரை சுமந்துகொண்டு முதலாவதாகவும், கடைசியாகவும் டாமி நடந்தது. மனதை உலுக்கும் இந்தத் தருணத்தை அங்கிருந்தவர்கள் புகைப்படமாக எடுத்துள்ளனர். கடைசியாக ஒரு முறை குழந்தையைப் பிடித்துக்கொண்டு நடந்து செல்லும்போது, ​​கண்ணீரில் டாமி உடைந்து போவதைப் படம் காட்டுகிறது.

இந்தப் புகைப்படத்தை இரண்டு ஆண்டுகள் கழித்து தற்போது டாமி கண்ணீருடன் இணையத்தில் பதிவிட்டு தனக்கு நேர்ந்தது மற்ற தாய்மார்களுக்கு நேரக் கூடாது என்று கூறியுள்ளார். அவருடைய கண்ணீர் பதிவில், ``கருவுற்ற 20 வாரத்துக்குப் பின் ஸ்கேன் செய்தோம். கருவில் பிரச்னை இருப்பதாக மருத்துவர்கள் முதலில் உணர்ந்தபோது, ​​நான் என் கர்ப்பத்தை நிறுத்த விரும்புகிறீர்களா என்று அவர்கள் என்னிடம் மீண்டும் மீண்டும் கேட்டார்கள். ஆனால், ஒவ்வொரு முறையும் நான் இல்லை என்று சொன்னேன். என் மகள் ஜிலானுக்கு ஒரு உடன்பிறப்பைக் கொடுக்க நான் பல ஆண்டுகள் காத்திருந்தேன். நான் கருவுற்ற தருணம் எனக்குள் இருந்த வாழ்க்கை மிகவும் விலைமதிப்பற்றதாக உணர வைத்தது. மருத்துவர்கள் சொன்னாலும் என் குழந்தையை ஒரு நாள் வீட்டுக்கு அழைத்து வர முடியும் என்ற நம்பிக்கையையும் கொண்டிருந்தேன். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவனுக்கு மரபணு நோய் இருந்ததை அறியும்போது நொறுங்கிப்போனோம்.

டாமி ஐரேசன்
டாமி ஐரேசன்
Daily mail

எமர்ஜென்சி அறையில் அனுமதிக்க, அவனைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று செவிலியர்கள் எனக்கு அறிவுறுத்தினர். ஆனால் என் தொடுதல் அவனுக்கு ஆறுதலளித்தது. நாள்கள் செல்லச் செல்ல, அவன் வலுவடைந்தான். என் மகனைப் பற்றித் தெரிந்துகொண்டேன். நான் அவனிடம் பாடிக் காண்பித்தேன். அவனைப் பிடித்துக்கொண்டேன்... நேசித்தேன். இறுதி தருணத்தில் அவன் கண்களைத் திறக்கவில்லை. என் பையன் போய்விட்டான் என்று எனக்குத் தெரியும். அவன் இனி என்னை அடையாளம் காணப் போவதில்லை.

வில்பர் இனி என் தொடுதலுக்குப் பதிலளிக்கவில்லை. எங்களுக்கிடையேயான தொடர்பு மறைந்துவிட்டது. நான் பேரழிவிற்கு ஆளானேன். என்னைப் போன்ற வேதனையை அனுபவிக்கும் மற்ற பெற்றோர்களிடமும் படத்தைப் பகிர்ந்துகொள்ள முடிவு செய்தேன். என் துயரத்தை மிகவும் கொடூரமாகப் பதிவுசெய்த அந்தப் படம் மற்றவர்கள் பார்க்கும்போது வருத்தமடைவார்கள் என்று எனக்குத் தெரியும். ஆனால், என்னைப் போன்ற இழப்பை அனுபவித்த பலரும் `இந்தத் துயரத்தை உணர்ந்தவர்கள் அவர்கள் மட்டுமல்ல' என்று நினைத்து ஆறுதலடைவார்கள் என்றே பகிர்ந்தேன்" என்று கூறியவர் தன் மகனின் சாம்பலை டெடி பியரின் பொம்மையில் வைத்து தினமும் பார்த்து வருகிறார்.

அடுத்த கட்டுரைக்கு