Published:Updated:

`அவரின் உடலைத் தேடுவது ஒரு கொடுங்கனவுபோல இருந்தது!' - பாகிஸ்தான் விபத்தில் தாயை இழந்த மகனின் வேதனை

பாகிஸ்தான் விமான விபத்து
News
பாகிஸ்தான் விமான விபத்து

``விபத்து நடந்த இடத்தில் மக்கள் யாரும் பொறுப்பாக நடந்துகொள்ளவில்லை. அவர்கள், செல்ஃபி எடுப்பதில் ஆர்வமாக இருந்தார்கள்.”

உலக நாடுகள் பலவும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறிவருகின்றன. இந்த வைரஸ் பாதிப்பால் உலகமே தனது இயல்பு நிலையை இழந்துள்ளது. பொருளாதாரம் மற்றும் எதிர்காலம் குறித்த கவலைகள் ஒவ்வொரு மனிதரையும் ஆட்கொண்டுள்ளது. இதைவிட, கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகிவிடக்கூடாது என்கிற அச்சமும் பலரிடம் உள்ளது.

கராச்சியில், தங்களின் விடுமுறையைக் கழிக்கவும் ரம்ஜான் கொண்டாடவும் சென்ற ஃபசல் ரஹ்மான் மற்றும் அவரது மனைவி வஹிதா ரஹ்மான், லாகூரில் விமானத்தில் ஏறியபோது அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் கவலை, வழியில் வைரஸ் தொற்றால் இருவரும் பாதிப்படைந்துவிடக்கூடாது என்பதாகத்தான் இருந்தது. ஆனால், நிகழ்ந்த சம்பவம் அதைவிடக் கொடூரமானது என்றே கூறலாம்.

பாகிஸ்தான் விமான விபத்து
பாகிஸ்தான் விமான விபத்து

பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான ஏர்பஸ் ஏ320 பயணிகள் விமானம், கடந்த வெள்ளிக்கிழமை லாகூரிலிருந்து கராச்சி நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தது. கராச்சியில் உள்ள ஜின்னா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு சில விநாடிகள் முன்னதாக, விமான நிலையத்துக்கு அருகில், மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள மாடல் காலனி குடியிருப்புப் பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியது. அந்த விமானத்தில் பயணிகள், பணியாளர்கள் என 99 பேர் பயணித்துள்ளனர். இந்தக் கோர விபத்தில், சுமார் 97 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் ஃபசல் ரஹ்மான் மற்றும் அவரது மனைவி வஹிதா ரஹ்மானும் அடங்குவர்.

ரஹ்மான் தம்பதியின் மகன் இனாம் உர் ரஹ்மான், ``நாங்கள் மருத்துவர்களுடனும் குடும்பத்தினருடனும் பலமுறை கலந்துரையாடினோம். அவர்கள் பயணத்தை பாதுகாப்பாக மேற்கொள்ள வேண்டும் என்பதே எங்களுடைய மிகப்பெரிய கவலையாக இருந்தது” என்றார். ``நாங்கள் இன்னும் அதிர்ச்சியில் இருக்கிறோம். எங்களது வீட்டில் ரம்ஜான் கொண்டாட்டம் இல்லை. என்ன நடந்தாலும், என்ன காரணம் அதன் பின்னால் இருந்தாலும் எங்கள் பெற்றோர்கள் எப்போதும் ஒன்றாகவே இருக்க விரும்பினர். கடைசி வரை அவர்கள் ஒன்றாகவே இருந்தார்கள்” என்று வேதனையுடன் ரஹ்மான் கூறியுள்ளார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்த விமான விபத்தில், இரண்டு பேர் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். விமானம் விழுந்த ஜின்னா சர்வதேச விமான நிலையத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால்,, பல வீடுகளும் வாகனங்களும் கடுமையாக சேதமடைந்துள்ளன. விமானம் விழுந்த வேகத்தில் அது தீப்பற்றியதால் அந்த சுற்றுவட்டாரத்தில் தீயின் வேகம் அதிகமாக இருந்ததாகவும், வானளவுக்கு கரும்புகை கிளம்பியதாகவும் கூறப்பட்டுள்ளது. விபத்து நடந்த இடத்தில் கூடிய கூட்டத்தில் இருந்த உறவினர்கள், அவர்களது அன்புக்கு உரியவர்களைத் தேடியதாகக் கூறப்படுகிறது. மீட்புக் குழுவினர், தன்னார்வலர்கள், தீயணைப்புத் துறை எனப் பலரும் வந்ததால் அப்பகுதி நெரிசலாக மாறியதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தான் ஏர்லைன்ஸ்
பாகிஸ்தான் ஏர்லைன்ஸ்

கராச்சியில், ஷாஹித் அகமது என்பவர் தனது தாயின் வருகைக்காக விமான நிலையத்தில் காத்திருந்தார். விபத்து நடந்ததை அறிந்த அவர், உடனே சம்பவ இடத்துக்குச் சென்றுள்ளார். அங்கு, மீட்புக் குழுவினர் உடல்களை எடுப்பதையும் மக்களில் சிலர் செல்ஃபி எடுக்கும் காட்சிகளையும் பார்த்ததாக ஷாஹித் குறிப்பிடுகிறார். ``விபத்து நடந்த இடத்தில் மக்கள் யாரும் பொறுப்பாக நடந்துகொள்ளவில்லை. அவர்கள் செல்ஃபி எடுப்பதில் ஆர்வமாக இருந்தார்கள்” என்று தனது தாயை இழந்த கவலையில் இருந்தபடி தெரிவிக்கிறார்.

விமானத்தில் இருந்த பெரும்பான்மையானவர்களைப் போல தன் மகனுடன் ரம்ஜான் கொண்டாட ஷாஹித்தின் தாய் திஷாத் பேகம் வந்துள்ளார். விபத்து நடந்த இடத்தில் ஷாஹித்தால், அவரது தாயின் உடலை கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே, அவர் மருத்துவமனைகளில் தனது தாயை தேடச் சென்றுள்ளார். ஆனால், எந்த மருத்துவமனையிலும் இறந்தவர்கள் அல்லது காயமடைந்தவர்களின் பெயர் பட்டியல் இல்லை என நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். மிகவும் குழப்பான சூழலாகவும் நிர்வாகம் முறையாகச் செயல்படவில்லை என்றும் தெரிவித்தார். ``என் தாயின் உடலைத் தேடுவது ஒரு கனவுபோல இருந்தது” என்று ஷாஹித் அகமது தெரிவித்துள்ளார்.