Published:Updated:

`நோ போலீஸ்.. நோ பீஸ்!’ -`chokeholds' தடைக்கு எதிராகக் கொந்தளித்த பிரான்ஸ் காவலர்கள்

பிரான்ஸ் காவலர்கள்
பிரான்ஸ் காவலர்கள் ( AP )

``கைவிலங்குகளை குற்றவாளிகளின் கையில் அணியும்போது தலைகளைக் கட்டுப்படுத்துவது மிகவும் அவசியமானது. நாங்கள் அவர்களை எட்டு நிமிடங்களுக்கும் மேலாக பிடித்து வைத்துக்கொள்ளப்போவதில்லை."

அமெரிக்காவில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு எதிராக பல நாடுகளிலும் கடுமையான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இனரீதியில் காலம்காலமாக ஆப்பிரிக்க அமெரிக்க மக்கள் ஒடுக்குமுறைகளுக்கு ஆளாவதை எதிர்த்து இந்தப் போராட்டங்கள் தீவிரமடைகின்றன. இந்தப் போராட்டம் மிகப்பெரிய அளவில் நடைபெற, ஜார்ஜ் ஃப்ளாய்ட்டின் கழுத்துப்பகுதியில் காவல்துறை அதிகாரி தனது முழங்காலை வைத்து அழுத்தும் வீடியோ அதிகமாக பகிரப்பட்டதும் முக்கிய காரணமாக அமைந்தது.

குற்றவாளிகள் தப்பித்துச் செல்லாமல் இருக்க பல நாடுகளிலும் காவல்துறை அதிகாரிகள் இத்தகைய முறையைக் கையாள்வது வழக்கம் எனக் கூறப்படுகிறது. கழுத்துப்பகுதியை அழுத்தி ஒருவரைக் கட்டுப்படுத்துவதன் மூலம் குற்றவாளிகள் உயிரிழக்க அதிகமான வாய்ப்புகள் உள்ளன. இந்த நிலையில், பிரான்ஸில் `chokeholds’ அதாவது குற்றவாளிகளை கழுத்துப்பகுதியில் இறுக்கி கட்டுப்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக அந்நாட்டுக் காவலர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பிரான்ஸ் காவலர்கள்
பிரான்ஸ் காவலர்கள்
AP

ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து எழுந்த போராட்டங்களை அடுத்து காவலர்களுக்கு இந்தத் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக அதிகாரிகள் பாரீஸில் உள்ள உள்துறை அமைச்சகத்துக்கு சாம்ஸ் எலிசீஸ் பவுலிவார்ட் எனும் பகுதியிலிருந்து பேரணி ஒன்றை நடத்தியுள்ளனர். பிரான்ஸின் உள்துறை அமைச்சர் கிறிஸ்டோஃப் கேஸ்னர், காவல்துறை அதிகாரிகளின் சங்க உறுப்பினர்களுடன் இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், அந்நாடு முழுவதும் உள்ள நகரங்களில் அதிகாரிகள் போராட்டங்களை நடத்தினர்.

தேசிய காவல்துறை அதிகாரிகள் சங்கத்தைச் சேர்ந்த ஃபேபியன் வேன்ஹெமெல்ரிக் என்ற அதிகாரி செய்தியாளர்களிடம் பேசும்போது, ``பொதுமக்களை அமைதிப்படுத்த வேண்டும் என்பதற்காக காவல்துறை அதிகாரிகள் நியாயமான முறையில் நடத்தப்படுவது இல்லை. எங்களையும் பாதுகாக்க வேண்டும். நாங்களும் மதிக்கப்பட வேண்டும். அனைவரும் எங்களையும் ஆதரிக்க வேண்டும். சட்டங்களை மீறி காவல்துறையினர் ஒருபோதும் நடந்துகொள்வது இல்லை. ஆனால், இந்தச் சட்டம் அதிகாரிகளை ஒருபோதும் கைவிட்டுவிடக் கூடாது” என்று கூறியுள்ளார்.

`முதலில் ஜார்ஜ்; தற்போது முதியவர்’ - அமெரிக்காவில் பதற்றத்தை அதிகரிக்கும் போலீஸாரின் அத்துமீறல்கள்

போராட்டத்தின்போது அதிகாரிகள் `நோ போலீஸ், நோ பீஸ்’ என்ற வாசகத்தை எழுதிய பதாகைகளை கையில் ஏந்தி போராட்டங்களை நடத்தினர். தங்களது கடமைகளைச் செய்யும்போது தாக்குதலுக்கு ஆளாகும் காவல்துறையினர் தொடர்பான கிராஃபிக் புகைப்படங்களையும் அவர்கள் கையில் வைத்திருந்தனர்.

அதில், `யார்.. யாரை படுகொலை செய்கிறார்கள்?’ என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது. மேலும், நீல நிற புகையையும் போராட்டத்தின்போது எழுப்பினர். பாரிஸில் உள்ள காவல்நிலையம் ஒன்றுக்கு வெளியே அதிகாரிகள் தங்களது கைவிலங்குகளை தரையில் வைத்து எதிர்ப்பைப் பதிவு செய்தனர். லியோன் பகுதியில் தங்களது கார்களை வரிசையாக நிறுத்தி நீல நிற விளக்குகளை ஒளிர வைத்துப் போராடினர்.

chokeholds தடைக்கு எதிராக காவல்துறையினர் பேசும்போது, ``கைவிலங்குகளை குற்றவாளிகளின் கையில் அணியும்போது தலைகளைக் கட்டுப்படுத்துவது மிகவும் அவசியமானது. நாங்கள் அவர்களை எட்டு நிமிடங்களுக்கும் மேலாக பிடித்து வைத்துக் கொள்ளப்போவதில்லை. கைவிலங்கை அணிவிக்க தலையை பிடிக்கப்போகிறோம். எங்களுக்கு வேறு வழிகள் இல்லை. இப்படி இருக்கும்போது இதை எப்படி தடை செய்யலாம்? அரசின் இந்த அறிவிப்பால் நாங்கள் மிகவும் கோபமாக உள்ளோம். காவல்துறை அதிகாரிகள் அனைவரும் இனவெறி உள்ளவர்கள் என மக்கள் நினைக்கிறார்கள். ஆனால், நாட்டில் பல இனத்தைச் சேர்ந்த மக்கள் வசிக்கிறார்கள். நாங்கள் அனைவருக்காகவும்தான் செயல்பட்டு வருகிறோம்” என்று கூறியுள்ளனர்.

பிரான்ஸ் காவலர்கள்
பிரான்ஸ் காவலர்கள்
AP

இனவெறிக்கு எதிரான குரல்கள் பிரான்ஸிலும் எதிரொலித்தன. குறிப்பாக, விளிம்புநிலை மக்கள் வாழும் பிரான்ஸின் புறநகர் பகுதிகளில் அதிகமான மக்கள் இனபாகுபாடுகளால் பாதிப்படைவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்நாட்டில் புலம்பெயர்ந்து வசிக்கும் மக்களை காவல்துறை அதிகாரிகள் மிகவும் மோசமாக இனவெறியுடன் நடத்துவதாக மனித உரிமை குழுக்கள் குற்றச்சாட்டுகளை எழுப்பி வருவதாகக் கூறப்படுகிறது. `ப்ளாக் லிவ்ஸ் மேட்டர்’ போராட்டம் பிரான்ஸிலும் பெரிய அளவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

காலாவதியான பொருளுடன் ஏன் வேலை செய்ய வேண்டும்? - நேருக்கு நேர் அதிபரை வறுத்தெடுத்த பிரான்ஸ் செவிலியர்
அடுத்த கட்டுரைக்கு