Published:Updated:

`ஜார்ஜ் ஃப்ளாய்ட்-க்கு கொரோனா.. ஆனால் இறப்புக்கு காரணம்..?!’ -வெளியானது பிரேதப் பரிசோதனை அறிக்கை

ஜார்ஜ் ஃப்ளாய்ட்
ஜார்ஜ் ஃப்ளாய்ட் ( Nam Y. Huh )

ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர்ந்து வரும் போராட்டங்களின் விளைவாக ஃப்ளாய்ட்டின் மரணத்தின்போது உடனிருந்த நான்கு போலீஸாரும் கைது செய்யப்பட்டுள்ளனர்

அமெரிக்காவில் மே மாதம் 25-ம் தேதி கறுப்பினத்தைச் சேர்ந்த 46 வயதான ஜார்ஜ் ஃப்ளாய்ட் போலீஸாரின் பிடியில் இருந்தபோது கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டார். இதைத்தொடர்ந்து அமெரிக்கா முழுவதிலும் இனவாதத்திற்கு எதிரான குரல்கள் வலுவாக ஒலிக்கத் தொடங்கியுள்ளன.

இந்த நிலையில், அவரின் பிரேதப் பரிசோதனை முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இதில் அவருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதியாகியுள்ளது. எனினும் அவரின் இறப்புக்கும் கொரோனாவுக்கும் தொடர்பில்லை என நிபுணர்கள் விளக்கியுள்ளனர்.

`ஜார்ஜ் ஃப்ளாய்ட்-க்கு கொரோனா.. ஆனால் இறப்புக்கு காரணம்..?!’ -வெளியானது பிரேதப் பரிசோதனை அறிக்கை
Emrah Gurel

ஹென்னபின் கவுண்டி மருத்துவ ஆய்வாளர் அலுவலகம், ஃப்ளாய்ட் குடும்பத்தின் ஒப்புதலோடு வெளியிட்ட 20 பக்கங்களைக் கொண்ட அவரின் பிரேதப் பரிசோதனை முடிவில் ஃப்ளாய்ட்டுக்கு ஏப்ரல் 3-ம் தேதி கொரோனா பாஸிட்டிவ் உறுதி செய்யப்பட்டது என குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும், அவருக்கு அறிகுறிகளற்ற நிலையிலேயே கொரோனா இருந்திருக்கிறது.

அவரின் நுரையீரல் ஆரோக்கியமாக இருந்த போதிலும் இதய தமனிகள் மிகவும் குறுகலாக இருந்ததாக பரிசோதனை முடிவுகள் கூறுகின்றன. இதற்கு முந்தைய ரிப்போர்ட்டுகளில் ஃப்ளாய்ட்டின் உடலில் ஒருவகை போதை தரக்கூடிய fentanyl மற்றும் methamphetamine இருந்தது கண்டறியப்பட்டது. எனினும் இவை மரணத்தை விளைவிக்கக் கூடியதாக இருக்க வாய்ப்பில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

போலீஸார் அவரை வலுக்கட்டாயமாக கைது செய்ய முற்போட்டபோது, காவல் அதிகாரி ஜார்ஜின் கழுத்தில் அதிக அழுத்தம் கொடுத்ததால் ஆக்ஸிஜன் தடைப்பட்டு, அதனால, கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டு ஃப்ளாய்ட் இறந்துள்ளார். அப்போது அவர் கூறிய `என்னால் சுவாசிக்க முடியவில்லை’ என்கிற வார்த்தைகள் உலகை அசைத்து வருகிறது. மேலும், இந்த மரணம் ஒரு கொலை என அதிகாரபூர்வ பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன.

``அவர் போதைப் பொருள்கள் உட்கொண்டிருந்தாரா இல்லையா என்பதெல்லாம் அவரின் மரணத்தோடு தொடர்பற்றவை. இன்னொருவரின் கையால் ஃப்ளாய்ட் இறந்துள்ளார். இது ஓர் இனவெறி தாக்குதல்" என ஃப்ளாய்ட்டின் குடும்ப உறுப்பினர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

ஜார்ஜ் ஃப்ளாய்ட் இறந்ததைக் கண்டித்து அமெரிக்காவின் பல மாகாணங்களிலும் ஊரடங்கை மீறி போராட்டம் வலுப்பெற்று வருகிறது.

`ஜார்ஜ் ஃப்ளாய்ட்-க்கு கொரோனா.. ஆனால் இறப்புக்கு காரணம்..?!’ -வெளியானது பிரேதப் பரிசோதனை அறிக்கை
Keith Srakocic

ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர்ந்து வரும் போராட்டங்களின் விளைவாக ஃப்ளாய்ட்டின் மரணத்தின்போது உடனிருந்த நான்கு போலீஸாரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஃப்ளாய்ட்டின் கழுத்தை நெரித்த டெரக் என்னும் போலீஸ் அதிகாரியின் பேரில் கொலைக்குற்றச்சாட்டும் உடனிருந்த மற்ற மூவர் மீதும் கொலைக்கு உதவியதாகக் குற்றச்சாட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா கறுப்பின அமெரிக்கர்களை அதிகளவில் பாதித்துள்ள நிலையில் மினசோட்டா மாகாணமும் அதற்கு விதிவிலக்கில்லை. மினசோட்டாவின் மொத்த மக்கள் தொகையில் 5.3% கறுப்பின மக்கள் உள்ளனர். அம்மாகாணத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட மக்களில் 22% பேர் கறுப்பினத்தவர்கள். இந்த நிலையில் நடக்கும் போராட்டங்கள், கொரோனா பரவலை மேலும் அதிகரித்துவிடும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு