Published:Updated:

ஸ்வீடன்: `மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது!’ - மீண்டும் பள்ளிக்குச் செல்லும் கிரேட்டா

கிரேட்டா தன்பெர்க்
கிரேட்டா தன்பெர்க்

கிரேட்டா கடந்த 2019-ம் வருடம் கல்வியை தற்காலிகமாக நிறுத்திவிட்டு பல நாடுகளிலும் பயணத்தை மேற்கொண்டு வந்தார்.

காலநிலை தொடர்பாகப் பேசும்போதெல்லாம் தவறாமல் நினைவுக்கு வரும் முகங்களில் கிரேட்டா தன்பெர்க்கின் முகமும் ஒன்று. ``எங்கள் குழந்தைப் பருவத்தை உங்களின் வெற்று வார்த்தைகளால் களவாடிவிட்டீர்கள். என்ன தைரியம் உங்களுக்கு?” எனக் கிரேட்டா கேட்ட கேள்வியை அவ்வளவு எளிதில் யாராலும் மறந்துவிட முடியாது. உலக நாடுகளின் தலைவர்களைக் காலநிலை மாற்றம் தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதற்காகத் தொடர்ந்து விமர்சித்து வந்தார்.

`` வலதிலும் சரி, இடதிலும் சரி, நடுநிலையான நிலைப்பாட்டிலும் சரி... இன்றைக்குத் தேவைப்படும் அரசியல் இல்லவே இல்லை!” எனக் கடுமையான விமர்சனங்களையும் வைத்துள்ளார். ஸ்வீடன் நாடாளுமன்றம் முன்பு போராட்டம், மாணவர்களுக்கு காலநிலை குறித்த விழிப்புணர்வு வழங்குதல், சூழலியல் தொடர்பான கட்டுரைகளை எழுதுதல் என மிகவும் ஆர்வத்துடன் பரபரப்பாகச் செயல்பட்டு வந்த 17 வயது கிரேட்டா தற்போது நீண்ட இடைவெளிக்குப் பின்னர், பள்ளிக்குச் செல்வதாக அறிவித்துள்ளார்.

கிரேட்டா தன்பெர்க் இதுதொடர்பாகத் தனது ட்விட்டர் பக்கத்தில், ``நான் பள்ளி செல்வதில் இருந்து எடுத்துக்கொண்ட இடைவெளி முடிந்துவிட்டது. மீண்டும் பள்ளிக்குச் செல்வது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார். இந்தப் பதிவுடன் புன்னகை செய்தபடி புகைப்படம் ஒன்றையும் சேர்த்துப் பதிவிட்டுள்ளார். கிரேட்டா, தான் படிப்பை தொடரப்போகும் பள்ளியின் பெயர் அல்லது எந்த நகரம் போன்ற எந்த விவரங்களைப் பற்றியும் கூறவில்லை.

கிரேட்டா கடந்த 2019-ம் வருடம் கல்வியை தற்காலிகமாக நிறுத்திவிட்டு பல நாடுகளிலும் பயணத்தை மேற்கொண்டு வந்தார். அவர் தொலைதூரக் கல்வி பயின்று வந்ததாகவும் தகவல்கள் வந்தன. ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட் நகரில் நடந்த ஐ.நா-வின் காலநிலை மாநாடு, ஸ்விட்சர்லாந்தில் நடந்த 2020 உலகப் பொருளாதார மன்றத்தின் 50-வது மாநாடு போன்றவற்றிலும் கலந்துகொண்டு உரையாற்றினார். இதையடுத்து, தன் பயணங்களை முடித்துக்கொண்டு தற்போது பள்ளிக்குத் திரும்பியுள்ளார்.

இதுமட்டுமன்றி இந்த கோவிட்-19 நோய்த்தொற்றுக் காலத்தில் நீட் மற்றும் JEE தேர்வுகளை மத்திய அரசு நடத்துவது குறித்தும் இன்று ட்வீட் செய்திருக்கிறார் கிரேட்டா. இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் மாணவர்களை இப்படி தேர்வெழுத வைப்பது முறையல்ல என அதில் தெரிவித்துள்ளார்.

`பற்றியெரியும் வீடு!’ – கிரேட்டா தன்பர்க், குடும்பத்தினர் எழுதிய புத்தகம் பேசும் உண்மைகள்!
அடுத்த கட்டுரைக்கு