Published:Updated:

`1 லட்சம் வீடுகள் சேதம்; 78 பேர் பலி?!’ - கனமழையில் சிக்கித்தவிக்கும் சீனா

சீனா வெள்ளப்பெருக்கு
சீனா வெள்ளப்பெருக்கு ( AP )

``சீனாவின் 26 வெவ்வேறு மாகாணங்களில் கடந்த சில நாள்களாக கடுமையான மழை பெய்து வருகிறது. குறிப்பாக, தென்மேற்குப் பகுதியான சிச்சுவான் மாகாணத்தில் புயல் மற்றும் மழை அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது”

போனகொரோனா வைரஸால் சீனா மிகவும் கடுமையாக பாதிப்படைந்தது. தொடர் போராட்டங்களுக்குப் பிறகு படிப்படியாக பாதிப்பிலிருந்து மீண்டு வந்தது. எனினும், மீண்டும் பல்வேறு பகுதிகளில் கொரோனா வைரஸ் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் தொடர்பான பிரச்னைகளால் பல நாடுகளின் எதிர்ப்பையும் சீனா சந்தித்துள்ளது. எல்லைப் பிரச்னை, புதிய சட்டம் அமல்படுத்தல் போன்ற பிரச்னைகளைகளையும் அந்நாடு சந்தித்து வருகிறது. இந்த நிலையில், தற்போது கனமழையால் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளது. இதனால், மக்கள் இயல்பு வாழ்க்கையை இழந்து தவித்து வருகின்றனர். வெள்ளப்பெருக்குத் தொடர்பான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

சீனா வெள்ளப்பெருக்கு
சீனா வெள்ளப்பெருக்கு
Weibo

சீனாவின் 26 வெவ்வேறு மாகாணங்களில் கடந்த சில நாள்களாக கடுமையான மழை பெய்து வருகிறது. குறிப்பாக, தென்மேற்குப் பகுதியான குவாங்கி மற்றும் சிச்சுவான் மாகாணத்தில் புயல் மற்றும் மழை அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. மழையால் ஏற்பட்ட பாதிப்புகளில் சிக்கி சுமார் 12 பேர் அப்பகுதிகளில் இறந்துள்ளதாகவும் கிட்டத்தட்ட 10 பேர் காணாமல் போனதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நெடுஞ்சாலைகள் சேதம், வாகனங்கள் மூழ்குதல் எனப் பல்வேறு பாதிப்புகளை அப்பகுதி மக்கள் சந்தித்ததால் அங்கிருந்து கிட்டத்தட்ட 7,500 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

`சுரங்கப்பாதையில் திடீர் வெள்ளப்பெருக்கு!' - ஊட்டி அருகே  4 மணி நேரம் வேனோடு தத்தளித்த டிரைவர்

பாதிக்கப்பட்ட அனைத்து மாகாணங்களிலும் கிட்டத்தட்ட 14 மில்லியன் மக்கள் இந்த வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ளதாகவும் சுமார் 7,00,000 மக்கள் பாதிப்படைந்த பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும், 1 லட்சம் வீடுகள் சேதமடைந்துள்ளன. தேசிய அளவில் வெள்ளப்பெருக்குக் காரணமாக ஜூன் மாதத்தில் மட்டும் சுமார் 78 பேர் இறந்திருக்கலாம் அல்லது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்றும் இந்த வெள்ளப்பெருக்கால் இதுவரை 25 பில்லியன் யுவான் அதாவது 3.5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் பொருள்சேதம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் அந்நாட்டின் அவசரநிலை மேலாண்மை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒவ்வோர் ஆண்டும் பருவகாலங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கின் காரணமாக சீனா கடுமையாகப் பாதிப்படைந்து வருகிறது. இந்த முறை யாங்சே ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகளவில் ஏற்பட்டுள்ளதாக சோங்கிங் நகராட்சி தெரிவித்துள்ளது. 1940-க்கும் பிறகு அந்த ஆற்றில் இத்தகைய பாதிப்பு தற்போதுதான் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. தென் பகுதி கடுமையாக பாதிப்படைந்த நிலையில் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளும் பாதிப்பைத் தாங்கத் தயாராகி வருகின்றன. இந்த வாரங்களில் 30 மி.மீ முதல் 50 மி.மீ மழை வரை பெய்யலாம் என அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காடுகள் அழிப்பு, நீர்ப்பாசனம் மற்றும் மின்சாரம் எடுத்தல் போன்றவற்றுக்காக நதிகளை திசை திருப்புதல் காரணங்களால் மழையால் ஏற்படும் பாதிப்புகள் அதிகமாவதாகக் கூறப்படுகிறது.

மழை பொழிவு வழக்கத்தைவிட அங்கு அதிகமாக உள்ளதால் 148 நீர்நிலைகள் ஏற்கெனவே அதன் அதிக அளவை எட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அணைகள் உள்ளிட்ட பிற நீர்நிலைகள் இடிந்து விழும் பட்சத்தில் உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளதாகவும் கூறியுள்ளனர். யாங்சே நதியின் துணை நதிகளும் அதிகளவில் பாதிப்படைந்துள்ளன. இதனால், மத்திய நீர் அமைச்சகம் பெரிய வெள்ளம் ஏற்பட்டால் சிறிய ஆறுகள் இன்னும் கடுமையாகப் பாதிப்படையலாம் என எச்சரித்துள்ளது. கொரோனாவால் பாதிப்படைந்த வுகான் பகுதிகளும் இந்த வெள்ளத்தால் கடுமையாக பாதிப்படைந்து வருகிறது. இந்தப் பகுதியில் ஏற்படும் சேதக்களைக் குறைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதிகளவில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

இடி-மின்னல்:`பீகார், உ.பி-யில் 100க்கும் மேற்பட்டோர் பலி!’ - பிரதமர் இரங்கல்
அடுத்த கட்டுரைக்கு