Published:Updated:

வீடு இல்லாதவர்களை எப்படிப் பாதுகாக்கிறார்கள்?

Homeless in India
Homeless in India

நாட்பட்ட நோய்த்தொற்றுகள் வீடற்றவர்களைப் பாதிப்பதற்கு மும்மடங்கு வாய்ப்புகள் அதிகம்.

கொரோனா வைரஸ் பரவுதலைத் தடுக்க நாடு முழுவதும் அடுத்த 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. மக்கள் வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது என மிக அழுத்தமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். உணவு மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் வீடுகளுக்கே வழங்குவதற்கு மாவட்ட நிர்வாகம் வழியாக ஆவண செய்ய வேண்டும் என உள்துறை அமைச்சக அறிக்கை குறிப்பிட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை அண்மையில் சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர்கூட, “நீங்கள் வீட்டிலேயே இருப்பதுமட்டும்தான் இந்தத் தேசத்துக்குத் தற்போது நீங்கள் செய்யக்கூடிய ஆகப்பெரும் உதவி” என்று குறிப்பிட்டார். #StayHome வகையறா ஹேஷ்டேக்குகளும் டிரெண்டாகி வருகின்றன.

corona
corona
நாட்டின் 0.15 சதவிகித மக்கள் வீடற்றவர்களாக இருக்கிறார்கள். இது நம் மொத்த மக்கள் தொகையில் 1.77 மில்லியன் பேர்.

ஆனால், இவை அத்தனையுமே தனக்கு மேலே கூரையுள்ள மக்களுக்கு மட்டுமே பொருந்தும். கடைசியாக 2011-ல் எடுக்கப்பட்ட சென்ஸஸ் கணக்கீட்டின்படி நாட்டின் 0.15 சதவிகித மக்கள் வீடற்றவர்களாக இருக்கிறார்கள். இது நம் மொத்த மக்கள் தொகையில் 1.77 மில்லியன் பேர். சென்ஸஸ் கணக்கீட்டில் சாலையோரங்களில், ரயில்வே பிளாட்பாரங்களில், மாடிப்படிகளில், கோயில்களில், தெருக்களில், சாலையோரம் கிடத்தப்பட்டிருக்கும் பெரிய குழாய்களில் வசிப்பவர்களைத்தான் நாம் வீடற்றவர்கள் என வரையறுத்திருக்கிறோம். 2011-க்குப் பிறகான ஒன்பது ஆண்டுகளில் வீடற்றவர்கள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதற்கான சாத்தியங்கள் உண்டு. கொரோனா தொடர்பான மத்திய மாநில அரசுகளின் அறிவிப்பு எதுவும் இந்த வீடற்றவர்களை எப்படிப் பாதுகாக்கப்போகிறோம் எனத் தெளிவாக விளக்கவில்லை.

வீடற்றவர்களைப் பாதுகாக்க வேண்டும்,ஏன்?

Homeless
Homeless

கொரோனா வைரஸ் பரவுதலைத் தடுக்க முக்கியமாகச் செய்ய வேண்டியவை வீட்டிற்குள் இருப்பதும், கைகளை அடிக்கடிக் கழுவுவதும்தான். ஆனால், இவை இரண்டுமே வீடற்றவர்களுக்கு மறுக்கப்படுகிறது. மேலும், சாலையிலேயே இருப்பதால் நுரையீரல் தொற்று போன்றவற்றால் மிக எளிதில் பாதிக்கக்கூடியவர்கள் அவர்கள்தான். நெருக்கடியாகக் கூட்டம் கூட்டமாகச் சுகாதாரமற்ற சீர்கேடான சூழலில் வாழ்வதால் அவர்களுக்கு நோய் மிக எளிதாகத் தொற்றும் வாய்ப்புகள் அதிகம். மேலும் நாட்பட்ட நோய்த்தொற்றுகள் வீடற்றவர்களை பாதிப்பதற்கு மும்மடங்கு வாய்ப்புகள் அதிகம் என்கிற உலக சுகாதார நிறுவனம்.

உலக நாடுகள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளன?

வீடற்றவர்களின் சுகாதாரம் சர்வதேசப் பிரச்னை. ஆஸ்திரேலியா கனடா மற்றும் பிரிட்டனில் இருக்கும் வீடற்றவர்களுக்காக இயங்கும் அமைப்புகள் கொரோனா தொற்றின் தீவிரம் குறித்து ஏற்கெனவே எச்சரித்துள்ளன. பிரிட்டனில் வீடற்றவர்களுக்காக இயங்கும் 36 அமைப்புகளின் தலைவர்கள் ஒன்றிணைந்து அந்த நாட்டு அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளார்கள். இதில் உடனடியாக நடவடிக்கை எடுத்த லண்டன் மேயர் சாதிக் கான் லண்டன் நகர் ஹோட்டல்களின் 300 அறைகளை வீடற்றவர்களுக்காக ஒதுக்கியுள்ளார். கொரோனா பாதிப்பு நீங்கும் வரை அவர்கள் அங்கேயே தங்கவைக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

homeless
homeless

2019-ம் ஆண்டின் கணக்கீட்டின்படி அமெரிக்காவில் 5,67,715 பேர் வீடற்றவர்களாக இருக்கிறார்கள். இவர்களில் அதிகம்பேர் நியூயார்க் நகரச் சாலைகளில் வசிப்பவர்கள். நியூயார்க்கில் 78,604 பேரும், லாஸ் ஏஞ்சஸ் நகரத்தில் 56,257 பேரும் வீடற்றவர்களாக இருக்கிறார்கள். இரண்டு தினங்களுக்கு முன்பு கலிஃபோர்னியா மாகாண கவர்னர் கவின் நியூசம் மாகாணம் முழுவதும் இருக்கும் 51,000 ஹோட்டல் அறைகள் இந்த வீடற்றவர்களுக்காகத் திறந்துவிடப்படும் எனத் தெரிவித்திருந்தார். கலிஃபோர்னியா மாகாணத்தில் 1,50,000 பேருக்கு வீடுவசதி இல்லை. குறைந்தபட்சம் 60,000 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது எனத் தனது அறிவிப்பில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

கொரோனா நோயால் முதன்முதலில் தாக்குதலுக்கு உள்ளான சியாட்டல் நகரத்தின் மேயர் வீடற்ற மக்களைக் கிராமங்களின் சிறுவீடுகளில் தீவிர உடல் பரிசோதனைக்குப் பிறகு, தங்க வைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகத் தெரிவித்திருந்தார்.

இது சர்வதேச நாடுகளின் நிலை. இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவருடைய ஆரோக்கியமும் பாதுகாக்கப்பட வேண்டியது. ஒருவருடைய ஆரோக்கியத்துக்காக மற்றொருவருடையதை சமன் செய்துகொள்ள முடியாது. மாவட்ட நிர்வாகங்கள் வீடற்றவர்களின் நிலையையும் தீவிர கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

`நாங்கள் சூப்பர்ஹீரோ இல்லை. ஆனால் போராடுகிறோம்!'- இது வெள்ளையுடை வீரர்களின் காலம்! #LetsStayPositive
அடுத்த கட்டுரைக்கு