Published:Updated:

`விமர்சனங்களைப் பற்றி கவலைப்பட்டால் செயல்பட முடியாது’ - கிரேட்டா தன்பெர்க்

கிரேட்டா தன்பெர்க்
கிரேட்டா தன்பெர்க்

``இந்த விமர்சனம் நிச்சயமாக எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. எப்போதும் போலவே நாங்கள் விமர்சிக்கப்படுகிறோம்''.

ஸ்விட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்று வரும் 2020 உலகப் பொருளாதார மன்றத்தின் 50 வது மாநாடு கடந்த சில நாள்களாக நடைபெற்று வந்தது. மாநாட்டில் காலநிலை ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க், உலகின் முக்கிய தலைவர்கள் உட்பட பலரது கவனத்தையும் பெற்றார். இந்த மாநாட்டின் கடைசி நாளான இன்று காலநிலை ஆர்வலர் கிரேட்டா செய்தியாளர்களைச் சந்தித்து பேசியுள்ளார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

செய்தியாளர்கள் சந்திப்பில் கிரேட்டா பேசும்போது, ``உலகப் பொருளாதார மன்றத்தில் காலநிலை தொடர்பான சில கோரிக்கைகளை வைத்தோம். எங்களுடைய கோரிக்கைகள் முழுவதுமாக நிராகரிக்கப்பட்டன” என்று கூறியுள்ளார்.

மாநாட்டில் காலநிலை தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு கிரேட்டா தன்பெர்க் பேசினார். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கிரேட்டாவை கடுமையாக விமர்சனம் செய்தார். இவரைத் தொடர்ந்து அமெரிக்கா கருவூல விவகாரங்களைக் கவனித்து வரும் அமைச்சர் ஸ்டீவன் முனுச்சினும் `கிரேட்டாவை பொருளாதாரம் படிக்கச் சொல்லுங்கள்' என விமர்சித்தார்.

`கேக் எல்லாம் கிடையாது; ஏழு மணிநேரப் போராட்டம்!’ -இது கிரேட்டா தன்பெர்க்கின் பிறந்தநாள்

படிம எரிபொருள்களுக்கு முதலீடு செய்வதை நிறுத்த வேண்டும் என்ற கிரேட்டாவின் கோரிக்கை குறித்து நேற்று பேசிய முனுச்சின், ``அவர் என்ன தலைமை பொருளாதார நிபுணரா, அவர் யார்? எனக்கு குழப்பமாக இருக்கிறது. இது ஒரு நகைச்சுவையும்கூட. கிரேட்டா கல்லூரிக்குச் சென்று பொருளாதாரம் குறித்து படித்துவிட்டு வந்து எங்களுக்கு விளக்கங்களைத் தரட்டும்” என்று பேசியிருந்தார்

ட்ரம்ப் - கிரேட்டா
ட்ரம்ப் - கிரேட்டா
AP

ஸ்டீவனின் விமர்சனம் குறித்து கிரேட்டாவிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு, ``இந்த விமர்சனம் நிச்சயமாக எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. எப்போதும் போலவே நாங்கள் விமர்சிக்கப்படுகிறோம். விமர்சனங்களைப் பற்றி கவலைப்பட்டால் நாங்கள் செய்வதைத் தொடர்ந்து எங்களால் செய்ய முடியாது” என்று பேசினார்.

கிரேட்டா மற்றும் ஸ்டீவன், இடையிலான சண்டை டவோஸ் மாநாட்டில் அதிகமாகக் கவனிக்கப்பட்டது. இதனால், அரசுகளுக்கும் பெறு நிறுவனங்களுக்கும் காலநிலை மாற்றம் என்பது அழுத்தம் தரக்கூடிய ஒன்றாக மாறியுள்ளதாகக் கூறப்படுகிறது.

ட்ரம்பின் ``Chill கிரேட்டா, Chill!” ட்வீட்டைக் கலாய்த்த கிரேட்டா தன்பெர்க்!
பின் செல்ல