Published:Updated:

`இந்த உதவியை மறக்க மாட்டேன்!’ -மருந்து விவகாரத்தில் இந்தியாவுக்கு நன்றி தெரிவித்த ட்ரம்ப்

மோடி-ட்ரம்ப்
மோடி-ட்ரம்ப்

``அசாதாரணமான சூழ்நிலைகளில்தான் நண்பர்களிடமிருந்து நிறையவே ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று ஹைட்ராக்சிக்ளோரோகுயின் மருந்து அனுப்பும் இந்தியாவுக்கும் இந்திய மக்களுக்கும் நன்றி” - ட்ரம்ப்

உலகளவில் கொரோனாவால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த வைரஸால் அமெரிக்கா கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளது. அமெரிக்காவில் மட்டும் இதுவரை 4.30 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இந்த வைரஸ் தொற்றுக்கு 14,000-க்கும் மேற்பட்டவர்கள் அமெரிக்காவில் பலியாகியுள்ளனர். அதிகளவில் இந்த வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தி வருவதால் மருந்துப் பொருள்களுக்கான தட்டுப்பாடுகள் ஏற்படும் என்ற அச்சம் உலக நாடுகளிடையே நிலவியது. இந்தியாவும் பல முக்கிய மருந்துகளின் ஏற்றுமதிக்குத் தடை விதித்தது. இந்த நிலையில், சில நாள்களுக்கு முன்பு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மோடியைத் தொடர்புகொண்டு `மருந்துப் பொருள்கள் மீதான தடையை நீக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்தார்.

ட்ரம்ப்
ட்ரம்ப்

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், ``மருந்துப் பொருள்கள் ஏற்றுமதிக்கு இந்தியா அனுமதியளித்தால் அது பாராட்டுதலுக்கு உரியது. இல்லையென்றால், ஒன்றும் பிரச்னை இல்லை. ஆனால், அதற்கான பதிலடி இருக்கலாம்” என்று மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசினார். ட்ரம்ப்பின் பேச்சுக்கு தொடர்ந்து பல விமர்சனங்கள் எழுந்த வண்ணம் இருந்தன. மேலும், இந்தியா எடுக்கப்போகும் முடிவுகள் குறித்தும் அதிக எதிர்ப்புகள் இருந்தன. இந்த நிலையில் இந்தியா, அண்டை நாடுகளுக்கும் கொரோனாவால் மிக அதிகமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கும் மருந்துகளை ஏற்றுமதி செய்யும் முடிவை எடுத்தது.

ட்ரம்ப் மிரட்டலும், ஒரு மணி நேரத்தில் மருந்துக்கான தடை நீக்கமும்!

வெளியுறவுத்துறை அமைச்சகமானது, `` மனிதாபிமான அடிப்படையில் பாராசிட்டமால் மற்றும் ஹைட்ராக்சிக்ளோரோகுயின் மருந்துகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்தது. எனினும், இந்தியாவுக்கு போதுமான அளவு மருந்துகள் கையிருப்பு உள்ளதா? அமெரிக்காவின் மிரட்டலுக்கு இந்தியா அடிபணிந்து விட்டதா? போன்ற கேள்விகளை எழுப்பி பலரும் மத்திய அரசை விமர்சித்தனர். ``இந்த விஷயத்தைத் தேவையில்லாமல் அரசியலாக்குகிறார்கள்” என்று மத்திய அரசும் விமர்சனங்களுக்குப் பதில் அளித்தது. இந்தியா எடுத்த முடிவுக்குப் பின்னர் ட்ரம்ப், ``மோடி சிறந்த மனிதர். அவர் நல்லவர். உங்களுக்கே தெரியும், இந்தியாவுக்குத் தேவை என்பதால்தான் அவர்கள் அந்த மருந்து வகைகளுக்கான ஏற்றுமதிக்குத் தடை விதித்திருந்தனர். இப்போது அதனால் நிறையவே நல்ல விஷயங்கள் நடக்கப்போகிறது” என்று பேசியதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், ``அசாதாரணமான சூழ்நிலைகளில்தான் நண்பர்களிடமிருந்து நிறையவே ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து அனுப்பும் இந்தியாவுக்கும் இந்திய மக்களுக்கும் நன்றி. இந்த உதவியை மறக்க மாட்டேன். இந்த வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு மட்டுமல்ல, மனிதகுலத்துக்கே உதவும் வலிமையான தலைமைப்பண்புள்ள பிரதமர் மோடிக்கு நன்றி” என்று ட்வீட் செய்துள்ளார்.

`பதிலடி இருக்கலாம்’ ;  `பிரதமர் மோடி நல்லவர்’ - தொனியை மாற்றிய ட்ரம்ப்
அடுத்த கட்டுரைக்கு