Published:Updated:

`இந்தியா, சீனாவில் அதிக பரிசோதனைகளை மேற்கொண்டால்..?' -அதிபர் ட்ரம்ப் சொல்லும் `கொரோனா கணக்கு'

ட்ரம்ப்
News
ட்ரம்ப் ( AP )

``அமெரிக்கா வரலாற்றில், அதிக அளவில் இந்த மாதம் வேலை வாய்ப்புகள் உயர்ந்துள்ளன. இதை நினைத்துப் பாருங்கள். இரண்டு அல்லது மூன்று மடங்குக்கும் மேலானது என நினைக்கிறேன்.”

கொரோனா வைரஸால் மிகவும் பாதிப்படைந்த நாடுகளில் அமெரிக்கா முதன்மையானது. அமெரிக்காவில் சுமார் 19.50 லட்சம் மக்கள் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இந்த வைரஸுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 1.10 லட்சத்தைக் கடந்துள்ளது. மக்கள்தொகை அதிகம் உள்ள நாடுகளை ஒப்பிடுகையில் அமெரிக்காவில் பாதிப்பு மிகவும் கடுமையாக உள்ளது.

வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ட்ரம்ப் ஆரம்பம் முதலே விமர்சிக்கப்பட்டு வருகிறார். ஆனால், ட்ரம்ப் சீனாவை விமர்சித்து வருகிறார். இந்த நிலையில், தற்போது அமெரிக்காவில் நடைபெறும் பரிசோதனைகள் குறித்தும் இந்தியா மற்றும் சீனாவில் உள்ள பாதிப்பு குறித்தும் ட்ரம்ப் பேசியுள்ளார்.

கொரோனா பரிசோதனை
கொரோனா பரிசோதனை

ட்ரம்ப் பேசுகையில், ``நாங்கள் 20 மில்லியனுக்கும் அதிகமான பரிசோதனைகளை மேற்கொள்வோம். நீங்கள் அதிகமாக பரிசோதனைகளை நடத்தும்போது, அதிகமான வைரஸ் தொற்றுகள் இருப்பது தெரியவரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதை நான் ஒவ்வொரு முறையும் மக்களிடம் சொல்லிவருகிறேன். சீனா, இந்தியா மற்றும் பிற நாடுகளில் நீங்கள் சோதனைகளை அதிக அளவில் மேற்கொண்டால், அதிகமான தொற்றுகள் அங்கும் இருக்கும் என நான் உறுதியளிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

பியூரிட்டன் எனும் நிறுவனம் விரைவான கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு பயன்படும் வகையில் ஸ்வாப்களை உற்பத்தி செய்யும் முக்கியமான நிறுவனமாகக் கருதப்படுகிறது.

இதைப் பற்றி ட்ரம்ப் கூறுகையில், ``பியூரிட்டனில் நீங்கள் தயாரிக்கும் ஒவ்வொரு ஸ்வாபிலும் அழகான `மேட் இன் யுஎஸ்ஏ’ என்பதை குறிப்பிடுகிறீர்கள். உங்களுடைய பரிசோதனைத் திறன்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இதனால்தான், பொருளாதாரத்தை மீண்டும் திறக்கும் நிலை ஏற்படுகிறது. எல்லோரும் சாத்தியமில்லை என்று நினைத்த பொருளாதாரம் மீண்டு வருகிறது. அமெரிக்காவின் வரலாற்றில், அதிக அளவில் இந்த மாதம் வேலை வாய்ப்புகள் உயர்ந்துள்ளன. இதை நினைத்துப்பாருங்கள். இரண்டு அல்லது மூன்று மடங்குக்கும் மேலானது என நினைக்கிறேன். நவம்பர் 3-ம் தேதி தேர்தலுக்கு முன்பாக மிகச் சிறப்பான மாதங்கள் வர இருக்கின்றன” என்று கூறியுள்ளார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ட்ரம்ப், இரண்டாவது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக ஜோ பிடன் போட்டியிட உள்ளார். ட்ரம்ப்பைவிட ஜோ பிடன் அதிக ஆதரவுகள் பெற்றிருப்பதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

தேர்தல் தொடர்பாக ட்ரம்ப், ``மிகவும் முக்கியமான தேர்தலாக இது இருக்கும். ஏனென்றால், நீங்கள் தவறான அதிபரை தேர்ந்தெடுத்தால் அவர்கள் உங்களது வரிகளை உயர்த்துவார்கள். நாட்டின் எல்லைகளைத் திறப்பார்கள். இதனால், நம் நாட்டுக்குள் அனைவரும் நுழைவார்கள்” என்று கூறியுள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளில் வலுவான பொருளாதாரத்தைத் தான் கட்டி எழுப்பியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், கொரோனாவால் பாதிப்படைந்த பொருளாதாரத்தை மீட்டுக் கொண்டுவருவதாகவும் உறுதியளித்தார்.

ட்ரம்ப்
ட்ரம்ப்
AP

கொரோனா வைரஸை கண்ணுக்குத் தெரியாத எதிரி என குறிப்பிட்ட அவர், ``சீனாவில் இந்த வைரஸ் தடுத்து நிறுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவர்கள் அதை செய்யவில்லை” என்று குற்றம் சாட்டினார். மேலும், ``1.5 பில்லியனுக்கும் அதிகமான பாதுகாப்பு உபகரணங்களை சுகாதாரப் பணியாளர்களுக்கு அரசு வழங்கியுள்ளது. தடுப்பூசிகள் நம்ப முடியாத அளவுக்கு வந்துகொண்டிருக்கின்றன.

பியூரிட்டன் போன்ற தனியார் நிறுவனங்களுடன் இணைந்து மிகப்பெரிய அளவில் சோதனைத் திறன்களை உருவாக்கி வருகிறோம். 75 மில்லியன் டாலர் செலவில் பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து உற்பத்திகளை இரட்டிப்பாக்கியுள்ளன. அதன்படி, பியூரிட்டன் நிறுவனமானது மாதத்திற்கு 40 மில்லியன் அளவில் ஸ்வாப்களை உற்பத்தி செய்ய உள்ளது” என்று கூறியுள்ளார்.