Published:Updated:

`அமெரிக்காவுடன் பேசுவதில் எங்களுக்கு விருப்பமில்லை!’ -இந்தியா தலையீட்டை எதிர்நோக்கும் இரான் அமைச்சர்

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் எங்களுக்கு விருப்பமில்லை என்று இரானிய அமைச்சர் ஜாவத் செரிஃப் கூறியுள்ளார்.

இரானிய அமைச்சர் - ஜாவத் செரிஃப்
இரானிய அமைச்சர் - ஜாவத் செரிஃப்

அமெரிக்கா மற்றும் இரான் ஆகிய நாடுகளுக்கிடையே பிரச்னைகள் நிலவிவந்த சூழலில், சில நாள்களுக்கு முன்பு இராக்கில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின்மீது இரான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்க ராணுவம் ட்ரோன் மூலம் நடத்திய தாக்குதலில், இரான் நாட்டு ராணுவப்படை தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இதனால், மூன்றாம் உலகப்போர் ஏற்படும் அபாயம் உள்ளதாக உலக நாடுகள் பதற்றமடைந்தன. இந்நிலையில், இந்தியா பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென இரான் வெளியுறவுத்துறை அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அமெரிக்கா  - இரான்
அமெரிக்கா - இரான்
Picasa

இரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாவத் செரிஃப் பேசுகையில், ``அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் எங்களுக்கு விருப்பமில்லை. அணுசக்தி ஒப்பந்தத்தின்கீழ் அமெரிக்கா உறுதியான நிலைப்பாட்டை கடைபிடிக்கவில்லை. அமெரிக்காவுடன் ஒப்பந்தம் இருந்தது. ஆனால், அதை அமெரிக்காவே உடைத்துவிட்டது. எங்களிடம் ட்ரம்ப் ஒப்பந்தத்தை வைத்தால். அது எவ்வளவு காலம் நீடிக்கும். எங்களுடைய பகுதிகளில் நம்பிக்கையை உருவாக்க வேண்டும். விரக்தியான மனநிலையிலிருந்து மீண்டுவர வேண்டும்” என்றார்.

`அமெரிக்க நெருக்கடியால் பதற்றத்தில் நடந்துவிட்டது’ -  விமானத் தாக்குதலை ஒப்புக்கொண்ட இரான்

மேலும், ``தற்போது இரானில் நிகழும் பதற்றங்களால், இரான் நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களை இழந்துள்ளது. சுலைமானி, ஐஎஸ்ஐஎஸ் போன்ற பயங்கரவாத குழுக்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்தார். ஆனால் இப்போது, அவரது மரணம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பாலும் பயங்கரவாதிகளாலும் கொண்டாடப்பட்டுவருகிறது” என்று பேசினார்.

ட்ரம்ப்
ட்ரம்ப்

தொடர்ந்து பேசிய அவர், ``வளைகுடா நாடுகளான இரான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன், கத்தார் உள்ளிட்ட நாடுகளில் நிலவும் பதற்றங்களைக் குறைக்க இந்தியா முக்கிய பங்காற்ற வேண்டும். ஏனெனில், புதுடெல்லி முக்கியமான இடத்தில் இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

இராக்கில் உள்ள அமெரிக்க ராணுவம் மற்றும் அதன் கூட்டணிப் படைகளை குறிவைத்து, ஒரு டஜன் பாலிஸ்டிக் ஏவுகணைகளை இரான் அனுப்பியது. இதனால், அமெரிக்கா மற்றும் இரான் இடையேயான பதற்றம் இன்னும் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.