Published:Updated:

`இதுதான் எங்களின் கடைசி நம்பிக்கை!’- வுகானில் தவிக்கும் இந்தியத் தம்பதி #CoronaVirus

ஆஷிஷ் மற்றும் நேகா
ஆஷிஷ் மற்றும் நேகா ( NDTV )

``ஒரே ஒரு பாட்டில் தண்ணீர் மட்டுமே உள்ளது. சில காய்கறிகள் மட்டுமே எங்களிடம் மிஞ்சியுள்ளன. அதுதான் இப்போது எங்களுடைய கடைசி நம்பிக்கையாகவும் இருக்கிறது" என இந்திய தம்பதி அந்த வீடியோவில் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸின் கொடூரமான தாக்குதலை எதிர்த்து சீன மக்கள் கடுமையாகப் போராடி வருகின்றனர். சீனாவைத் தவிர்த்து 25-க்கும் மேற்பட்ட நாடுகளும் இந்த வைரஸால் அதிகமான பாதிப்பைச் சந்தித்துள்ளது. நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டுவரும் இந்த வைரஸ் தாக்குதலால் உலக மக்கள் பலரும் அச்சத்தில் உள்ளனர். உலக சுகாதார அமைப்புடன் இணைந்து பல நாடுகளும் வைரஸை கட்டுப்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

சீனாவில் வாழும் மற்ற நாடுகளைச் சேர்ந்த மக்களையும் அந்தந்த நாட்டு அதிகாரிகள் விமானங்களின் வழியாக மீட்டு தனிமைப்படுத்தி சிகிச்சைகளை அளித்து வருகின்றனர். இந்தியாவும் போயிங் 747 என்ற விமானம் மூலம் வுகானில் தங்கியிருந்த சுமார் 650 இந்தியர்களைக் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மீட்டு வந்தனர். இவர்களும் கொரோனா குறித்த பரிசோதனைகளுக்குப் பிறகு ஒவ்வொருத்தராக வீடு திரும்ப உள்ளனர். இந்த நிலையில், வுகானில் இந்தியாவைச் சேர்ந்த பேராசிரியர் குடும்பம் ஒன்று சிக்கித் தவித்து வரும் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆஷிஷ் யாதவ், வுகானிலுள்ள டெக்ஸ்டைல் பல்கலைக்கழகத்தில் இணை பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி நேகா முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு வருகிறார். நேகாவின் அறுவை சிகிச்சையின் காரணமாக மத்திய அரசு அனுப்பிய ஏர் இந்தியா விமானத்தில் அவர்களால் சீனாவிலிருந்து வெளியேற முடியவில்லை எனக் கூறப்படுகிறது. வுகானில் தங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து தாங்கள் அனுபவித்து வரும் கஷ்டங்களை விவரித்தும், விரைவில் தங்ளை மீட்க நடவடிக்கை எடுக்கக் கோரியும் சில வீடியோக்களை அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

சனிக்கிழமை அன்று அவர்கள் வெளியிட்ட முதல் வீடியோவில், ``நாங்கள் பல்கலைக்கழகத்தின் அருகில்தான் தங்கியுள்ளோம். மாணவர்கள் அனைவரும் இந்தப் பகுதியில்தான் வசித்து வந்தனர். ஆனால், இப்போது, யாரும் இங்கில்லை. எங்கள் குடியிருப்பிலும்கூட யாரும் இல்லை. மேலும், எங்களுக்கு உணவு பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. ஒரே ஒரு பாட்டில் தண்ணீர் மட்டுமே உள்ளது. சில காய்கறிகள் மட்டுமே எங்களிடம் மிஞ்சியுள்ளன. இவைதான் இப்போது எங்களுடைய கடைசி நம்பிக்கையாகவும் இருக்கிறது” என்று பேசியுள்ளனர்.

`பேய் நகரத்தைப் போல இருந்தது!’ -வுகானிலிருந்து இந்தியர்களை மீட்ட விமானிகளின் திகில் அனுபவங்கள்

இதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை அவர்கள் வெளியிட்ட வீடியோவில், ``வானிலை மிகவும் மோசமடைந்து வருகிறது. நேற்று முதல் லேசான மழையும் பனிப்பொழிவும் உள்ளது. எங்கள் கட்டடத்தில் யாரும் இல்லை. எங்களிடம் தண்ணீர்கூட மிக குறைந்த அளவிலேயே இருந்தன. இங்குள்ள அதிகாரிகளிடம் தண்ணீர் மற்றும் உணவு வேண்டும் எனக் கோரிக்கை விடுத்த பின்பு சிறிதளவை அனுப்பி வைத்தனர். எனினும், விரைவில் அவை தீர்ந்துவிடும். எங்களுடைய பெற்றொர்கள் எங்களை நினைத்து மிகவும் கவலையில் உள்ளனர். எங்களை விரைவில் மீட்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளனர். இந்த வீடியோக்களில் காலியான பாட்டில்களையும் சுற்றுச் சூழலையும் மிஞ்சியிருக்கும் உணவையும் காட்டிள்ளனர்.

இதுதொடர்பாக சீனாவில் உள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ட்விட்டரில், ``சீனாவுக்கு உதவி செய்யும் விதத்தில் மருத்துவப் பொருள்களை இந்தியா இந்தவாரம் அனுப்ப உள்ளது. அந்த விமானம் திரும்பும்போது இந்தியா திரும்ப விரும்பும் இந்தியர்கள் பயணிக்கலாம். இதில், பயணிக்க விரும்பும் அனைவரும் தூதரகத்தைத் தொடர்புகொள்ளுங்கள்” என பதிவிட்டுள்ளது. மேலும், அவர்கள் தொடர்புகொள்ள மின்னஞ்சல் முகவரி மற்றும் தொடர்பு எண்களையும் பதிவு செய்துள்ளது.

`என் மூலமாக வைரஸ் பரவுவதை விரும்பவில்லை!’- கொரோனா பாதிப்பிலிருந்து மீண்ட  ஆப்பிரிக்க இளைஞர்
அடுத்த கட்டுரைக்கு