Published:Updated:

இது விமானமல்ல, பறக்கும் வெள்ளை மாளிகை... இந்தியா வரும் ட்ரம்ப்பின் 3 மாடி போயிங்747 #VikatanInfographics

பறக்கும் வெள்ளை மாளிகை - Air Force One
பறக்கும் வெள்ளை மாளிகை - Air Force One ( Vikatan )

அமெரிக்க அதிபர்களின் பாதுகாப்புக் கருதி தயாரிக்கப்பட்டுள்ள இந்த விமானம் அணு ஆயுத தாக்குதல்களைத் தாங்கக் கூடிய சக்தி வாய்ந்தது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியா வந்தபோது சென்னை விமானநிலையம் அமைந்துள்ள சாலை மற்றும் மாமல்லபுரம் செல்லும் சாலைகள் எப்படியெல்லாம் அலங்கரிக்கப்பட்டதோ, அதைவிடப் பல மடங்கு அலங்காரங்களைப் பெற்று வருகிறது குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரின் ஒரு பகுதி. காரணம், வருகின்ற 24-ம் தேதி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அகமதாபாத் வருகிறார் என்பதுதான்.

Modi - Trump
Modi - Trump
AP

இரண்டு நாள்கள் சுற்றுப்பயணமாக இந்தியா வரும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், 24-ம் தேதி அன்று அகமதாபாத்தில் கட்டப்பட்டுள்ள `உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானம்' என்ற பெருமைக்குரிய சர்தார் வல்லபபாய் படேல் மைதானத்தைப் பிரதமர் மோடியுடன் இணைந்து திறந்து வைக்கவிருக்கிறார். அதன்பின், அந்த மைதானத்திலேயே நடைபெறவுள்ள `நமஸ்தே ட்ரம்ப்' என்ற நிகழ்ச்சியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியோடு சேர்ந்து கலந்துரையாடல் நிகழ்ச்சியிலும் கலந்துகொள்கிறார்.

ட்ரம்ப் இந்தியா வருகிறார் என்ற செய்தி செவிக்கு எட்டியதும் நம்மவர்கள் மனதில், `அவர் எந்த விமானத்தில் வருவார்; அதில் என்னென்ன வசதிகளெல்லாம் இருக்கும்' என்பதுதான் முதலில் தோன்றியிருக்கும். வெள்ளை மாளிகையில் உள்ள பெரும்பாலான வசதிகளைத் தன்னகத்தே கொண்ட அந்த விமானத்தின் சிறப்புகளைத்தான் இன்ஃபோகிராபிக்ஸ் மூலம் இங்கே அலசப்போகிறோம்.

அமெரிக்க அதிபர் பயணிப்பதற்காகவே உருவாக்கப்பட்டுள்ள போயிங் 747 - 200B ரக விமானம் தனிச் சிறப்புகளைப் பெற்றது. இந்த விமானத்தின் வெளிப்பகுதியில் `UNITED STATES OF AMERICA' என்று எழுதப்பட்டிருக்கும். அமெரிக்காவிடம், அதிநவீன வசதிகள் கொண்ட போயிங் 747 - 200B ரக விமானங்கள் இரண்டு உள்ளன.

 

இந்த இரண்டு விமானங்களில், ஒன்றின் டெயில் பகுதியில் 28000 என்றும் மற்றொன்றில் 29000 என்றும் குறியீட்டு எண்கள் பொறிக்கப்பட்டிருக்கும். இது அமெரிக்க அதிபர்கள் மட்டுமே பயணிக்கும் விமானம் என்பதால் `ஏர் ஃபோர்ஸ் ஒன்' என்று பெயர் பெற்றுள்ளது.

Tail Code
Tail Code
Photo : jag9889

ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானம் மூன்று அடுக்கு கொண்டவையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 6 அடுக்கு மாடிகள் கொண்ட கட்டடத்தின் உயரம்கொண்ட இந்த விமானம் பார்ப்பவர்களுக்கு ஆச்சர்யத்தையும் பிரமிப்பையும் ஏற்படுத்துகிறது. இந்த விமானத்தின் தரை வெளிப்பகுதி, 4000 சதுர அடி பரப்பளவு கொண்டது என்ற தகவலின் மூலம் இந்த விமானத்தின் பிரமாண்டத்தைப் புரிந்துகொள்ளலாம்.

Vikatan
முதன் முதலாக
அமெரிக்க அதிபர்களுக்கென பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட `Air Force One' விமானத்தில் முதன்முதலாகப் பயணித்தவர், 1962-ம் ஆண்டு அமெரிக்க அதிபராக இருந்த ஜான் எஃப் கென்னடி!

1962-ம் ஆண்டு ஜான் எஃப் கென்னடி அமெரிக்க அதிபராக இருந்தபோது அமெரிக்க அதிபர்களுக்கென தனிச் சிறப்பு வாய்ந்த `Air Force One' விமானம் தயாரிக்கப்பட்டது. அது போயிங் 707 ரகத்தைச் சார்ந்தது. அதன் அப்டேட்டட் வெர்ஷன்தான் தற்போதுள்ள `போயிங் 747 - 200B ஏர் ஃபோர்ஸ் ஒன்' விமானம். அமெரிக்க அதிபர்களின் பாதுகாப்புக் கருதி தயாரிக்கப்பட்டுள்ள இந்த விமானம் அணு ஆயுத தாக்குதல்களைத் தாங்கக் கூடிய சக்தி வாய்ந்தது. அதுமட்டுமல்லாமல் தகவல் பரிமாற்றத்திலும் அதி நவீன வசதிகளைக் கொண்டது. தரையிறங்கும் இடங்களில் ஏதேனும் பிரச்னை என்றால்கூட வெகு நேரம் வானில் சுற்றித் திரிவதற்காக, நடு வானிலேயே எரிபொருள் மாற்றம் செய்யும் வசதியும் இந்த ரக விமானத்தில் உள்ளது.

Air Force One
Air Force One
Vikatan Infographics

இந்த விமானத்தின் மேல்தளத்தில் அதிபருக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ஒரு பகுதி உள்ளது. அங்கு அதிபர் தன் பணிகளைச் செய்வதற்காக வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகம் போன்ற பெரிய அலுவலகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் அதிபர் உடற்பயிற்சி செய்ய ஜிம் வசதி, அதிகாரிகளிடம் ஆலோசிக்க சந்திப்பு அறை, கழிப்பறை வசதி, படுக்கையறை வசதி என வெள்ளை மாளிகையில் உள்ள முக்கிய வசதிகள் அனைத்தும் விமானத்துக்குள்ளாகக் கொண்டு வரப்பட்டுள்ளன. 100 பேருக்கு உணவு தயார் செய்யும் அளவுக்கான இரண்டு சமையலறைகள் உள்ளன. உணவருந்த டைனிங் வசதியும் உள்ளது.

ஏர் ஃபோர்ஸ் ஒன்!
இதுதான் உலகின் மிகப் பாதுகாப்பான விமானம்.

அதிபருக்குச் சிகிச்சை மேற்கொள்வதற்காகச் சின்ன மருத்துவமனை வசதியும் விமானத்துக்குள் உள்ளது. அறுவை சிகிச்சை செய்ய ஆபரேஷன் தியேட்டர் வசதிகூட இருக்கிறது. அதிபருக்கு ரத்தம் தேவைப்பட்டால், அவருக்குக் கொடுப்பதற்காகவே அதிபரின் ரத்த வகையைச் சேர்ந்த சேமிக்கப்பட்ட ரத்த பைகள், ஒரு ஃப்ரிட்ஜ் முழுக்க வைத்து விமானத்தில் கொண்டு வரப்படுகிறது. அதிபர் பயணத்தின்போது எப்போதுமே ஒரு மருத்துவர் குழு கூடவே பயணிக்கும்.

Air Force One
Air Force One
Vikatan Infographics

மேலும் 70 பேர் அமர்ந்து பயணிக்க இருக்கை வசதியும், அதிபரின் ஆலோசனை அதிகாரி, பாதுகாப்பு மேலதிகாரி உள்ளிட்டவர்களுக்குப் படுக்கையறை வசதியும் செய்து தரப்பட்டுள்ளன. ஊடகத்துறை சார்ந்து நபர்களும் அதிபருடன் விமானத்தில் பயணிக்கலாம் என்பதால் அவர்களுக்கும் தனியாகப் படுக்கையறை ஒதுக்கப்படுகிறது. இவ்வளவு வசதிகளைத் தாங்கி பறந்து வரும் அமெரிக்க அதிபரின் சிறப்பு விமானம் அடுத்த வாரம் இந்தியா வரவிருக்கிறது.

இந்த விமானம் இந்தியா வரும்போது எடுக்கப்படும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் மிகப் பெரிய வைரல் ஆகும் என்பதில் சந்தேகமேயில்லை.
அடுத்த கட்டுரைக்கு