Election bannerElection banner
Published:Updated:

அட்லான்ட்டிஸ் தீவு உண்மையிலேயே இருந்ததா... ஆராய்ச்சியாளர்கள் ஏன் இன்னமும் தேடுகிறார்கள்?! #Atlantis

அட்லான்ட்டிஸ் (கற்பனைப்படம்)
அட்லான்ட்டிஸ் (கற்பனைப்படம்)

அட்லான்ட்டிஸ் நகரின் பசுமையான தீவுகளில் தங்கம், வெள்ளி மற்றும் பிற விலைமதிப்பற்ற உலோகங்கள் இருந்தனவாம். அட்லான்ட்டிஸ் நகரின் மத்தியில் தங்கத்தினால் ஆன சுற்றுச்சுவரைக் கொண்ட இரு ஆலயங்களும் இருந்தனவாம். அதில் ஒன்று பொஸைடென் கடவுளுக்கு என (Poseidon god) விசேஷமாக அமைக்கப்பட்டதாம்.

வரலாறு என்பது மக்கள் ஒப்புக்கொள்ள முடிவு செய்த கடந்த கால நிகழ்வுகளின் தொகுப்பு!
நெப்போலியன் போனபார்ட்

ஒரு கேள்விக்கு ஒரு பதில் என்றால் அது சமூகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. அதுவே ஒரு கேள்விக்கு ஓராயிரம் பதில்கள் சொல்லப்பட்டால் அது உலகத்துக்கே மிகப்பெரிய கேள்வியாகிவிடும். ஆனால் எந்தக் கேள்விக்கு இன்று வரை பதிலே கிடைக்கவில்லையோ அது கற்பனைகளின் துணை கொண்டு பல கிளைக் கேள்விகளால் ஊடுருவப்பட்டு எங்கோ ஒரு இடத்தில் வரலாற்றில் புதைந்திருக்கும். தேடுதல் ஒன்றே அதற்கு பதிலாக்கும். அப்படி இன்றுவரை பதிலளிக்கப்படாத ஒரு கேள்வி தான் அட்லான்ட்டிஸ்.

உலகத்தின் அற்புதமான கட்டடக்கலை, பலம் வாய்ந்த ராணுவம், அரசியல், விஞ்ஞான ரீதியாக மிகவும் முன்னேறிய சமூகம் என பண்டைய நாகரீகத்தில் வாழ்ந்த ஒரு நகரம் ஒரே நாளில், ஓர் இரவில் முற்றிலுமாக அழிந்து வீழந்தது என கிரேக்க தத்துவஞானி ப்ளேட்டோ கூறும் அட்லான்டிஸை (Atlantis) சுற்றி இருக்கும் மர்மங்கள் ஏராளம். இந்நகரம் பற்றிய கேள்விகள் நீருக்குள் அமுக்கிய ரப்பர் பந்து போல மீண்டும் மீண்டும் மேலே எழுந்து கொண்டுதான் இருக்கின்றன.

காலப்போக்கில் உண்மை என்று நிரூபிக்கப்பட்ட கட்டுக்கதைகள், ஆரம்பத்தில் கட்டுக் கதைகள் என சந்தேகிக்கப்பட்டு பின் அதிகாரபூர்வமாக உண்மை என்று நிரூபிக்கப்பட்ட வரலாறுகள் பல உண்டு. தொலைந்துபோன நகரமான ட்ரோய் பற்றிய கண்டுபிடிப்புக்கள் இதற்கு ஒரு நல்ல உதாரணம்.

கிரேக்க கவிஞர் ஹோமர், ட்ரோஜான்களையும் அவர்களது நகரத்தையும் தி இலியாட் மற்றும் தி ஒடிஸி ஆகியவற்றின் ஊடக பிரபலப்படுத்தினார். இந்த படைப்புகள் கிரேக்கத்திற்கும், ட்ராய்க்கும் இடையேயான 10 ஆண்டுகால யுத்தத்தின் கதையைச் சொல்லின. ஆனால் இதில் குறிப்பிடப்பட்ட ட்ரோய் உண்மையிலேயே இருந்ததா இல்லை வெறும் கட்டுக்கதையா என ஆராய ஜெர்மனியைச் சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர் Schliemann பயணிப்பட்டு அதில் வெற்றியும் கண்டார். இந்த வெற்றியே அட்லான்ட்டிஸ் பற்றிய தேடல்களுக்கு மேலும் தெம்பூட்டியது.

அட்லான்ட்டிஸ் தீவு உண்மையிலேயே இருந்ததா... ஆராய்ச்சியாளர்கள் ஏன் இன்னமும் தேடுகிறார்கள்?! #Atlantis

அட்லான்ட்டிஸ் மர்மம்!

கிரேக்க தத்துவவாதியான ப்ளேட்டோவின் ஒரு நூலின் ஒரு சில பக்கங்களில் உள்ள உரையாடல்களான “டிமேயஸ்” மற்றும் “கிரிட்டியாஸ்” ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள புராணத் தீவு தேசம் அட்லான்ட்டிஸ். கிட்டத்தட்ட 2,400 ஆண்டுகளாக மேற்கத்திய வரலாற்றாசிரியர்களை கட்டிப்போட்டுள்ள ஒரு மந்திர வார்த்தை இது. BC 9,600-யில், ஒரே இரவில் கடலுக்குள் மூழ்கிப்போன ஒரு அதி சக்திவாய்ந்த, பலம் பொருந்திய ராஜ்ஜியம் என இதனைப் ப்ளேட்டோ குறிப்பிடுகிறார்.

ப்ளேட்டோவின் கூற்றை வரலாறாக எடுத்துக் கொள்ள வேண்டுமா அல்லது வெறும் கற்பனை உருவகமா என்று பண்டைய கிரேக்கர்கள் தலையைப் பிய்த்துக் கொண்டனர். அதன் பின் 19-ம் நூற்றாண்டிலிருந்து, கிறிஸ்து பிறப்புக்கு முன்பு எரிமலை வெடிப்பால் முற்றிலுமாக அழிக்கப்பட்ட கிரேக்க தீவான சான்டோரினியோடு அட்லான்ட்டிஸை இணைப்பதில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்பின் இதனை கண்டுபிடிப்பதற்கும் நிரூபிப்பதற்கும் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன.

இப்போது விஞ்ஞானிகள், தொல்பொருள் நிபுணர்கள், வரலாற்று ஆசிரியர்கள் கொண்ட குழு ஒன்று தரையில் ஊடுருவும் ரேடார், சாட்டிலைட் படங்கள், ஆழ்கடல் தொல்பொருள் ஆய்வு, வரலாற்று சான்றுகள் போன்ற பலவற்றை வைத்து மூழ்கிப்போன நகரைத் தேடும் தேடுதல் வேட்டையை மீண்டும் தீவிரப்படுத்தி உள்ளன.

ஆனால் எங்கிருந்து தேடுவது என்பதற்கான விடை அடிப்படையான இரண்டு கேள்விகளில் இருந்து ஆரம்பிக்கின்றது. அட்லான்ட்டிஸ் என்றால் என்ன, நமக்கு அதைப் பற்றி என்ன தெரியும்?

ப்ளேட்டோவின் எழுத்தில் மனித நிலைப்பாடுகள் குறித்து மிகச்சரியான உண்மைகள் இல்லாதிருந்தால், இந்த அட்லான்ட்டிஸ் என்ற பெயர் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மறக்கப்பட்டிருக்கும். பளாட்டோ தன் நூலில் அட்லான்ட்டிஸ் குறித்து அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து மேய்ந்து, மிகத் துல்லியமாக எழுதியுள்ளார். அவரது எழுத்துக்கள் அட்லான்ட்டிஸ் பற்றி ஆராய்ச்சி செய்வோருக்கான ஒரு முழுமையான கையேடு. அரசியல், ராணுவம், தொழில்நுட்பம், வர்த்தகம், கலாசாரம், மதம், வாழ்க்கை முறை என அத்தனை விஷயங்களை விவரித்து எழுதியுள்ளார். அவர் குறிப்பிடும் அந்த இடம் உலக வரைபடத்திலேயே இல்லை என்றாலும் அவரது இந்த மிகத் துல்லியமான எழுத்துக்கள் தான் இன்று வரை ஆராய்ச்சியாளர்களையும் தொல்பொருளியலாளர்களையும் அட்லான்ட்டிஸை நோக்கிய பயணத்தை தொடரச் செய்கிறது.

அட்லான்ட்டிஸ் நகரம் புதைந்துள்ளதாக நம்பப்படும் Pillars of Hercules எங்குள்ளது?

ஹெர்குளஸின் தூண்கள் (Pillars of Hercules) என்பது மத்தியதரைக் கடல் மற்றும் அட்லான்ட்டிக் பெருங்கடலுக்கும் இடையில் உள்ள பதினான்கு கிலோமீட்டர் அகலமுள்ள ஜலசந்தியின் பழங்காலத்துப் பெயராகும். இதன்படி அட்லான்ட்டிஸின் மிகச்சிறந்த அமைவிடம் ஸ்பெயினின் தெற்கு பகுதியாக இருக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

அட்லான்ட்டிஸ் தீவு உண்மையிலேயே இருந்ததா... ஆராய்ச்சியாளர்கள் ஏன் இன்னமும் தேடுகிறார்கள்?! #Atlantis

தெற்கு ஸ்பெய்னின் நூற்றுக்கணக்கான ஏக்கர் தூரத்திற்கு பரந்து விரிந்திருக்கும் சதுப்பு நிலத்திற்கு கீழ் தான் அட்லான்ட்டிஸ் நகரம் புதைந்து போனதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள். 1922-ல் ஜார்ஜ் பார்சர் மற்றும் அடால்ஃப் ஷெல்டன் எனும் இரு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இந்த இடத்தில்தான் புதையுண்ட அட்லான்ட்டிஸ் நகரம் இருந்தது என்று சொன்னதை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை.

எனினும் அதன்பிறகு வந்த ஜெர்மன் நிபுணர்கள் இந்த இடத்தை சேட்டிலைட் மூலம் பெறப்பட்ட படங்களிலிருந்து ப்ளேட்டோ கூறிய அட்லான்ட்டிஸ் நகரின் வடிவமைப்பு ஒத்துப் போவதை உறுதி செய்தனர்.

1679-ம் ஆண்டில் ஸ்வீடிஷ் விஞ்ஞானி ஓலாஸ் ருட்பெக் 'அட்லாண்ட்' என்ற நான்கு தொகுதிகளைக் கொண்ட ஒரு நூலை வெளியிட்டார், அதில் ஸ்வீடன் தான் அட்லான்ட்டிஸின் அசல் தளம் என்றும், அனைத்து மொழிகளும் ஸ்வீடிஷ் மொழியிலிருந்து வந்தவை என்றும் நிரூபிக்க முயன்றார். ஆனால் அதனை ஸ்வீடிஷ் மக்கள் தவிர வெளியே யாரும் நம்பவில்லை.

ப்ளேட்டோ வர்ணித்த அட்லான்ட்டிஸ் நகரம்?!

ப்ளேட்டோ அட்லான்ட்டிஸை ஆசியாவை விட பெரிய தீவு என்று விவரிக்கிறார். மிகவும் மேம்பட்ட கலாசாரம், செல்வச் செழிப்பு, வளர்ந்த தொழில்நுட்பம், சிறப்பான அரசியல் கட்டமைப்பு மற்றும் நவீன நாகரீகம் கொண்ட அட்லான்ட்டிஸையும் அதைச் சுற்றியுள்ள கடலையும் உருவாக்கிய போசிடான் கடவுள், அவரது பத்துக் குழந்தைகளில் ஒருவனான அட்லஸை அரசனாக்கி அந் நகரத்தை பாதுகாத்தாரம். செல்வ வளங்கொழிக்கும் தேசமாக விளங்கிய அட்லான்ட்டிஸ் நகரின் பசுமையான தீவுகளில் தங்கம், வெள்ளி மற்றும் பிற விலைமதிப்பற்ற உலோகங்கள் இருந்தனவாம். அட்லான்ட்டிஸ் நகரின் மத்தியில் தங்கத்தினால் ஆன சுற்றுச்சுவரைக் கொண்ட இரு ஆலயங்களும் இருந்தனவாம். அதில் ஒன்று பொஸைடென் கடவுளுக்கு என (Poseidon god) விசேஷமாக அமைக்கப்பட்டதாம். இதன் கோபுரங்கள் தங்கத்தினாலும், விதானங்கள் தந்தம், தங்கம், வெள்ளி, ஆகியவற்றினாலும் உருவாக்கப்பட்டிருந்ததாம். அட்லான்ட்டிஸின் மக்கள் மேம்பட்ட வாழ்விலும், செல்வத்திலும் சுகபோகமாக வாழ்ந்துள்ளனர்.

அட்லான்ட்டிஸ் கதையின் தோற்றம்!

அட்லான்ட்டிஸின் கதையை தனது தாத்தாவிடமிருந்து கேட்டதாக ப்ளேட்டோ தனது 'கிரிட்டியாஸ்' புத்தகத்தில் எழுதியிருக்கிறார். அவர் தாத்தா அதை ப்ளேட்டோவின் காலத்திற்கு 300 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஏதெனிய அரசியல்வாதியான சோலோனிடமிருந்து கேட்டதாகவும், சோலோன் அதை ஒரு எகிப்திய பாதிரியாரிடமிருந்து கற்றுக்கொண்டதாகவும், அந்தப் பாதிரியார் அது 9,000 ஆண்டுகளுக்கு முன்பே நடந்தததாகவும் எழுதியுள்ளார். ஆக மொத்தத்தில் ப்ளேட்டோவே நேரில் பார்க்காத ஒரு நகரம்தான் அட்லான்ட்டிஸ். எனவே அவரது கதைகளுக்கு சுவை சேர்க்க எழுத்தப்பட்ட புனைவு இது என்றும், அதைச் சொல்வதில் அவரது நோக்கம் ஒரு சிறந்த சமுதாயத்தைப் பற்றிய அவரது கருத்துகளை உயர்த்துவதாகவே இருந்துள்ளதாகவும் சிலர் வாதிடுகின்றனர்.

அட்லான்ட்டிஸ் தீவு உண்மையிலேயே இருந்ததா... ஆராய்ச்சியாளர்கள் ஏன் இன்னமும் தேடுகிறார்கள்?! #Atlantis

அட்லான்ட்டிஸ் எப்படி அழிந்தது?

விஞ்ஞானிகள், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் அட்லான்ட்டிஸ் அழிவு பற்றி பல்வேறு கருத்துகளும் கதைகளும் உலவுகின்றன. சிலர் அணு வெடிப்பின் 40 மடங்குக்கு சமமான ஒரு பெரிய எரிமலை வெடிப்பால் இந்த நகரமே முற்றாக அழிக்கப்பட்டதாகவும், வேறு சிலர் 11,000 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெரிய வெள்ளம் அல்லது ஒரு சுனாமி இந்த முழு நகரத்தையும் தண்ணீருக்கு அடியில் எடுத்துச் சென்றதாகவும் கூறுகின்றனர்.

புராணக் கதைகளின் படி பொய், வஞ்சகம், லஞ்சம் இவற்றின் வசப்பட்ட அட்லான்ட்டிஸ் மக்களை, ஏதெனியர்கள் தாக்கி வெற்றி கொண்டனர். இந்த நிலையில், கடவுளின் தண்டனையாக, அட்லான்ட்டிக் கடலின் பேரலைகள் சுனாமிப் பேரலைகளாக வந்து ஒரு பகல் - ஒரு இரவில் இந்த நாட்டை தாக்கி கடலில் மூழ்கடித்தன என்றும் சொல்கின்றனர்.

அட்லான்ட்டியர்கள் சக்திவாய்ந்தவர்களாக வளர்ந்ததால், அவர்களின் ஒழுக்க நெறிமுறைகள் குறைந்தன. ஏதெனியன் தலைமையிலான கூட்டணியால் தோல்வியுறும் முன்னர், அவர்களின் படைகள் இறுதியில் ஆப்பிரிக்காவை எகிப்து மற்றும் ஐரோப்பா வரை கைப்பற்றின. பின்னர், கடவுளின் தண்டனை மூலம், அட்லான்ட்டிஸ் தீவு எரிமலை சீற்றத்தால் அழிக்கப்பட்டு, பூகம்பங்கள் மற்றும் வெள்ளத்தால் சூழப்பட்டு, இறுதியில் சேற்று கடலில் மூழ்கியது என்றும் கூட ஒரு கதை சொல்லப்படுகிறது.

கடல் மட்டத்திலிருந்து 131 அடிக்கு கீழே மூழ்கிப்போன கிருஷ்ணர் பிறந்த துவாரகா நகர் பற்றி புராணங்களில் படித்திருக்கிறோம். ஜமைக்கவின் போர்ட் ரோயல், சீனாவின் லியோன் நகர், அர்ஜென்டினாவின் Villa Epecuen என நீருக்குள் மூழ்கிப்போன நகரங்களைப் பற்றி வரலாற்றில் படித்திருக்கிறோம். மாலை தீவுகள் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக கடலுக்கு அடியில் மூழ்கிக் கொண்டிருக்கிறது என செய்திகளில் படிக்கிறோம். இவை எது பற்றியுமே இல்லாத ஒரு சர்ச்சை, மர்மம் ஏன் புதைந்து போன அட்லான்ட்டிஸ் மீது மட்டும் எழுப்பப்பட்டு இன்று வரை தீர்க்கப்படாத புதிராகவே உள்ளது?

நைல் நதி நாகரீகம், மொசபதேமிய நாகரீகம், சிந்துவெளி நாகரீகம், சீன நாகரீகங்களுக்கு எல்லாம் முப்பாட்டன் என சொல்லப்படும் அட்லான்ட்டிஸ் பற்றிய அறியப்படாத உண்மைகள் தெரியவரும் போது, பல விடை தெரியா கேள்விகளுக்கு விளக்கம் கிடைக்கலாம். அப்போது உலகத்தின் பல வரலாறுகள் திருத்தப்படலாம், உலக வரலாற்று ஆவணங்கள் மாற்றி எழுதப்படலாம்.

அதுவரை அட்லான்ட்டிஸை நோக்கிய தேடல்களும், பயணங்களும், தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு