Published:Updated:

`பலவீனத்தைக் காட்டியதில் வெட்கமாக உணருகிறேன்!' - தொடர் பணியால் மனஅழுத்தத்தில் இத்தாலி செவிலியர்கள்

செவிலியர் எலெனா

``என் மகனின் புகைப்படங்களையும் சில வீடியோ அழைப்புகளையும் கண்ணீருடன் பார்த்து அமைதி கொள்கிறேன்"

`பலவீனத்தைக் காட்டியதில் வெட்கமாக உணருகிறேன்!' - தொடர் பணியால் மனஅழுத்தத்தில் இத்தாலி செவிலியர்கள்

``என் மகனின் புகைப்படங்களையும் சில வீடியோ அழைப்புகளையும் கண்ணீருடன் பார்த்து அமைதி கொள்கிறேன்"

Published:Updated:
செவிலியர் எலெனா

கொரோனா வைரஸால் இத்தாலி கடுமையான பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது. தொடர்ந்து பரவி வரும் இந்த வைரஸால் இத்தாலியில் இதுவரை 20,000-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 1,400-க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், மருத்துவமனைகளில் தொடர்ந்து பணியாற்றி வைரஸுக்கு எதிராகப் போராடி வரும் மருத்துவர்களும் செவிலியர்களும் தீவிரமான சோர்வையும் மன அழுத்தத்தையும் எதிர்கொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பான புகைப்படம் ஒன்றும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

இத்தாலியின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள லோம்பார்டி எனும் நகரத்தில் இருக்கும் மருத்துவமனை ஒன்றில் பணிபுரியும் எலெனா பக்லியாரினி என்ற செவிலியரின் புகைப்படம்தான் அது. அவரைப்போலவே மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட பலரும் மன அழுத்தத்துக்கு உள்ளாகியுள்ளனர். சோர்வுடன் கீ - போர்டில் படுத்திருக்கும் எலெனாவின் புகைப்படம் பலரையும் கவலைக்கு உள்ளாக்கியுள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

புகைப்படங்கள் குறித்து எலெனா செய்தியாளர்களிடம் பேசும்போது, ``என்னுடைய புகைப்படத்தை எல்லா இடங்களிலும் பார்க்க கோபமாக இருக்கிறது. எனது பலவீனத்தைக் காட்டியதில் நான் வெட்கமாக உணருகிறேன். ஆனால், நான் மகிழ்ச்சியாக இருந்தேன். என் கதைகளை உணர்ந்தவர்களிடம் இருந்து நான் அழகான செய்திகளைப் பெற்றேன். உண்மையிலேயே உடலளவில் சோர்வாக நான் உணரவில்லை. தேவைப்பட்டால் என்னால் 24 மணிநேரமும் வேலை செய்ய முடியும். இப்போது நான் மிகவும் கவலையுடன் உள்ளேன் என்ற உண்மையை மறைக்க விரும்பவில்லை. ஏனெனில், நான் எனக்குத் தெரியாத எதிரியுடன் சண்டையிடுகிறேன். இவ்வளவு ஊழியர்கள் வேலை செய்தும் தொடர்ந்து மரணங்கள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. இதனால், சுகாதாரத் துறையைச் சேர்ந்த அனைவரும் கவலையில் உள்ளனர்" என்றார்.

அலேசியா பொனாரி
அலேசியா பொனாரி

வடக்குப் பகுதியில் உள்ள மற்றொரு நகரமான பெர்க்மோவில் உள்ள மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் டேனியல் மெச்சினி என்பவர், ``என் மகனையோ அல்லது குடும்பத்தினரையோ பார்த்து இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகின்றன. ஏனெனில் அவர்களுக்கு தொற்று ஏற்பட்டுவிடுமோ என்று கவலைகொள்கிறேன். என் மகனின் புகைப்படங்களையும் சில வீடியோ அழைப்புகளையும் கண்ணீருடன் பார்த்து அமைதி கொள்கிறேன்" என்று வேதனையுடன் முகநூலில் பதிவிட்டுள்ளார்.

டஸ்கேனி நகரத்தைச் சேர்ந்த செவிலியர் அலேசியா பொனாரி, அறுவை சிகிச்சை முடிந்த பின்னர் முகமூடி அணிந்ததால் ஏற்பட்ட அடையாளங்களுடன் கூடிய தன்னுடைய புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். ``இந்த முகமூடி என்னுடைய முகத்தில் சரியாக பொருந்தாததால் மிகவும் கவலையாக உணர்கிறேன். என்னை அறியாமல் அழுக்கு கையுறைகளால் என்னையே நான் தொடக்கூடும். நான் அணிந்துள்ள கண்ணாடிகள் என் கண்களை முழுமையாக மறைக்காது. பாதுகாப்பு உடைகள் அணிந்திருக்கும் ஊழியர்கள் ஆறு மணி நேரங்களுக்கு தண்ணீர் குடிக்கவோ கழிப்பறைக்குச் செல்லவோ முடியாது" என்று வருத்தத்துடன் அந்தப் புகைப்படத்தின் கேப்ஷனில் தெரிவித்துள்ளார்.

பணிச்சுமையால் சக ஊழியர்கள் உட்பட பலரும் உளவியல் ரீதியாக சோர்வடைந்துள்ளதாகவும் இந்த மனச்சோர்வு உடல் சோர்வை அதிகரிப்பதாகவும் அலேசியா தெரிவித்துள்ளார். டுரினில் உள்ள சான் ஜியோவானி போஸ்கோ மருத்துவமனையைச் சேர்ந்த மனநல குழுவானது மன அழுத்தத்தில் உள்ள செவிலியர்களுக்கு அதை எதிர்கொள்ள உதவி செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவசர சிகிச்சை பிரிவுகளில் மற்றும் தீவிர சிகிச்சையில் பணியாற்றும் மருத்துவர்கள் அதிகமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் குழுவைச் சேர்ந்த மோனிகா என்பவர், ``ஆலோசனைகள் தேவைப்படுபவர்கள் அனைவரும் முன் வரலாம். நாங்கள் அனைவருக்காகவும் இருக்கிறோம். தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுவிடுவோமோ அல்லது தவறுகளை செய்து விடுவோமோ என்கிற பயத்தால் சரியாக வேலை செய்யமுடியாமல் போகலாம்" என்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

கொரோனா
கொரோனா

இந்த நிலையில், இத்தாலியில் மருத்துவமனைகளில் பணியாற்றி வந்த 50 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையில் இருக்கின்றனர். சிலருக்கு தீவிரமாக சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது. மன அழுத்தத்தை சமாளிப்பதற்கான ஆலோசனைகள் அடுத்த வாரங்களில் அதிக அளவில் தேவைப்படலாம் என மோனிகா தெரிவித்துள்ளார். மன அழுத்தங்களால் உங்களது ஆற்றலை இழக்க நேரிடும் என்று எச்சரிக்கும் அவர், ``கவனத்தைத் திசை திருப்புதல், சுவாசப் பயிற்சிகளை மேற்கொள்ளுதல்" போன்ற விஷயங்களைச் செய்வதன் மூலம் அழுத்தத்திலிருந்து விடுபட முடியும் என அறிவுரை கூறியுள்ளார்.