Published:Updated:

`இசையால் இணைந்த இத்தாலி மக்கள்' - நெட்டிசன்களை நெகிழ வைத்த வீடியோக்கள் #Corona

இத்தாலி மக்கள்
இத்தாலி மக்கள் ( AP )

இரவின் இருள் அடர்ந்திருக்கும் சாலையில் தெருவிளக்கின் வெளிச்சங்களில் வெறிச்சோடிய சாலைகள் தெரிய, பின்னனியில் நாட்டுப்புற பாடல் ஒன்று ஒலித்துக் கொண்டிருப்பதை காட்சியாக பதிவு செய்து வீடியோவாக பகிர்ந்துள்ளனர்.

சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலியில் கொரோனா வைரஸ் அதிகபடியான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸால் இத்தாலியில் சுமார் 17,000-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 1000-க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அங்கு அதிகமாகும் சூழலில் அந்நாட்டின் பிரதமர் கியூசெப் கான்டே முக்கிய நகரங்களை பூட்டுவதாக அறிவித்தார். இதனால், சாலைகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன.

இத்தாலியில் அன்றாட மக்களின் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வைரஸ் தொற்றிலிருந்து தங்களை பாதுகாக்க வீடுகளில் ஒவ்வொரும் தனிமைபடுத்தப்பட்ட நிலையில் தற்போது வசித்து வருகின்றன. இந்த நிலையில், கொரோனா அச்சத்தால் பேரமைதி நிலவும் சாலைகளின் ஓரங்களில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனிப் பகுதிகளில் இருந்தபடி இத்தாலியர்கள் தங்களது மன அழுத்தத்தைப் போக்க பாடல் பாடுவது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ட்விட்டரில் இத்தாலியைச் சேர்ந்த நபர் ஒருவர் இந்த வீடியோவைப் பகிர்ந்து, ``எனது சொந்த ஊரான சியானாவில் வசிக்கும் மக்கள், தங்களது இதயங்களை இதமாக உணரச் செய்ய வெறிச்சோடிய தெருக்களில் இருக்கு தங்களது வீடுகளில் அமர்ந்தபடி பிரபலமான பாடல்களைப் பாடுகின்றனர்" என பதிவு செய்திருந்தார். மில்லியன் கணக்கான பார்வையாளர்களையும் ஆயிரக்கணக்கான விருப்பங்களையும் இந்த வீடியோ பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து இன்னும் சில வீடியோக்களும் ட்விட்டரில் வெளியானது.

`என்ன செய்வதென்று தெரியவில்லை!' - இத்தாலியில் இறந்த சகோதரியின் உடலுடன் தவித்த தம்பி #Corona

இரவின் இருள் அடர்ந்திருக்கும் சாலையில் தெருவிளக்கின் வெளிச்சங்களில் வெறிச்சோடிய சாலைகள் தெரிய, பின்னனியில் நாட்டுப்புற பாடல்களை மக்கள் கோரசாக பாடும் சத்தம் ஒலித்துக் கொண்டிருப்பதை பதிவு செய்து வீடியோவாக பகிர்ந்துள்ளனர். மற்றொரு வீடியோவில், அருகருகே இருக்கும் குடியிருப்பின் பால்கனியில் மக்கள் வந்தமர்ந்தபடி கைகளின் மூலம் ஓசை எழுப்பி பாடுகின்றனர். மற்ற சிலர் இசைக்கருவிகளின் மூலம் இசை எழுப்பியும் பின்னனியில் லேசாக ஒலிக்கும் இசையுடனும் மகிழ்வுடன் அருகிலிருப்பவர்களுடன் இணைந்து கோரசாக பாடுகின்றனர். இன்னும் சில வீடியோக்களில், வீட்டில் பாடல்களை ஒலிக்க வைத்து தங்களது குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் நடனமாடுகின்றனர். தொடர்ந்து இரண்டு, மூன்று நாள்கள் இதேபோல பாடல்களை பாடியுள்ளனர்.

சீனாவில் அதிக அளவு பாதிப்பிற்குள்ளான வுகான் நகரம் பூட்டப்பட்டபோதும் அங்கிருந்த மக்கள் இதேபோல பாடல்களை பாடி மன அழுத்தத்தைப் போக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. கவலைக்குரிய வகையில் இருக்கும் இத்தாலியிலிருந்து வெளியாகியுள்ள இந்தக் காட்சிகள் மக்கள் பலரையும் நெகிழ வைத்துள்ளது.

``உலகம் முழுவதும் தங்கள் வீடுகளில் இருந்து மக்கள் இப்படி பாடுவதை நினைத்துப் பாருங்கள். வெறுப்பு எதுவுமே இல்லை. ஒருமுறை அனைவரும் இணைந்து இருக்கிறோம். இந்த வீடியோவை மிகவும் நேசிக்கிறேன்; அவர்கள் வசிக்கும் இடங்களால் பிரிக்கபட்டாலும் ஒன்றாக இருக்கிறார்கள். எவ்வளவு அழகான மற்றும் உண்மையுள்ள காட்சிகள்; மனித நேயம் இன்னும் மிச்சமிருக்கிறது. எனக்கு அழுகை வருகிறது" போன்ற கமெண்டுகளால் தங்களது உணர்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். தங்களது குரல்களால் இணைந்து நிற்கும் இத்தாலி மக்களுக்கு உலகின் பல நாடுகளில் உள்ள மக்களும் தங்களது ஆதரவையும் அன்பையும் தெரிவித்து வருகின்றனர்.

கொரோனாவின் பாதிப்பால் உலகின் பல இடங்கள் வெறிச்சோடி காணப்படும் நிலையில் சவுதி அரேபியாவின் மெக்கா நகரின் புனித காபா பக்தர்களின்றி காணப்படுகிறது. ஜும்மா தொழுகையின் போது வெறிச்சோடி காணப்படும் அந்த காபாவை கண்டு இமாம்-இ-கபாப் அழுவது போல வீடியோவும் சமூகவலைதலங்களில் வேகமாக பரவி வருகிறது.

#coronaupdates `மருத்துவமனையிலிருந்து தப்பிய ஐவர்; திகாரில் தனி அறை’ -`இந்தியாவில் கொரோனா' அப்டேட்ஸ்
அடுத்த கட்டுரைக்கு