Published:Updated:

கைவிடப்பட்ட நகரின் குடிமகன்!

Ivo Zdarsky
பிரீமியம் ஸ்டோரி
Ivo Zdarsky

வாழ்க்கை

கைவிடப்பட்ட நகரின் குடிமகன்!

வாழ்க்கை

Published:Updated:
Ivo Zdarsky
பிரீமியம் ஸ்டோரி
Ivo Zdarsky
அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் கைவிடப்பட்ட நகரமொன்றின் விமான நிலையத்தில் கடந்த 13 ஆண்டுகளாகத் தனியாகவே வசித்துவருகிறார் ஒருவர். `சமூக இடைவெளி’ என்ற புதிய வார்த்தைப் பதம் பரவலாகப் பின்பற்றப்படுவதற்கு முன்பாகவே, சமூகத்திலிருந்து தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார் 51 வயதான இவோ ஸ்டார்ஸ்கை (Ivo Zdarsky) என்ற ஆச்சர்ய மனிதர்.

`தனியாக எப்படி இத்தனை காலம் வாழ முடியும்?’ என்ற கேள்வி நமக்கு எழலாம். ஆனால், தனிமையில் வாழ முடியும் என்று வாழும் உதாரணமாக இருக்கிறார் இவோ. இவரது கதையில் ஹாலிவுட் படங்களை விஞ்சும் சுவாரஸ்யம்..!

கைவிடப்பட்ட நகரின் குடிமகன்!

சோவியத் யூனியன் கட்டுப்பாட்டிலிருந்த செக்கோஸ்லோவாகியாவின் ஹ்ரடெக் க்ராலவ் (Hradec Kralove) நகரின் புறநகர்ப் பகுதியில் சிறுவனாக இவோ வசித்து வந்தபோது, அந்நாட்டை ஆண்ட கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. அலெக்ஸாண்டர் டுப்ஸெக் என்பவர் தலைமை யேற்ற பிறகு, அதற்கு முன்பாக விதிக்கப்பட்டிருந்த கடுமையான கட்டுப்பாடுகளை நீக்கி உத்தர விட்டிருக்கிறார். இது செக்கோஸ்லோவாகியா இளைஞர்களைப் பெரிய அளவில் கவரவே, சோவியத் யூனியனின் கம்யூனிஸ்ட் தலைமை இதை ரசிக்கவில்லை. இதனால், செகோஸ்லோவாகியாவுக்குள் 1969 ஆகஸ்ட்டில் புகுந்த சோவியத் படை, அலெக்ஸாண்டரை தலைமைப் பொறுப்பிலிருந்து தூக்கியடித்தது. இதனால், அங்கு மீண்டும் பழைய கட்டுப்பாடுகள் புதிய பெயரில் விதிக்கப்பட்டிருக்கின்றன.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இளம் வயதிலேயே விமானத் தயாரிப்பில் ஆர்வமாக இருந்த இவோ, தனது 17-வது வயதில் சிறியரக கிளைடர் ஒன்றை வடிவமைத்திருக்கிறார். மேலும், செக்கோஸ்லோவாகியாவிலிருந்து வெளியேறத் திட்டமிட்ட அவர், சொந்தமாக வடிவமைத்த கிளைடர் ஒன்றில் மூலம் 1984-ல் அங்கிருந்து வெளியேறியிருக்கிறார். அவர் செக்கோஸ்லோவாகியாவைவிட்டு வெளியேறியபோது சகோதரர், தந்தை உள்ளிட்ட குடும்பத்தினர் அங்கு வசித்துவந்திருக்கிறார்கள். நாட்டைவிட்டே வெளியேறப்போகும் தகவலை அவர்களிடம் கூறவில்லை என்று சொல்லும் இவோ, `அவர்களிடம் சொல்ல வேண்டும் என்ற எண்ணமே எனக்கு எழவில்லை’ என்கிறார். சோவியத் யூனியனுக்குப் பிறகான கால கட்டத்தில் செக்கோஸ்லோவாகியா, `செக் குடியரசு’, `ஸ்லோவாகியா’ என இரண்டு நாடு களாகப் பிரிந்தது.

கைவிடப்பட்ட நகரின் குடிமகன்!

செக்கோஸ்லோவாகியாவைவிட்டு, சொந்தமாக உருவாக்கிய கிளைடரில் பறந்த இவோ, இரண்டு மணி நேரப் பயணத்தில் ஆஸ்திரியாவின் வியன்னாவை அடைந்திருக் கிறார். வியன்னாவில் தரையிறங்கிய அவர், அந்நாட்டில் அரசியல் தஞ்சம் கோரியிருக்கிறார். அடுத்த ஆறே வாரங்களில் அமெரிக்கா வந்தடைந்த இவோ, `ஒரு மனிதன், தான் நினைத்ததை எங்கு செய்ய முடிகிறதோ அங்கு சென்றுவிட வேண்டும்’ என்கிறார்.

கலிஃபோர்னியாவில் விமான உதிரி பாகமான புரொபெல்லர் தயாரிக்கும் இவோ புரோப் (IvoProp) என்ற நிறுவனத்தைத் தொடங்கி யிருக்கிறார். நிறுவனம் தொடங்கியதைப் பற்றிக் குறிப்பிடும் இவோ, ``எடை குறைவான கிளைடர்களை வடிவமைக்க விரும்பினேன். அப்போது நான் விரும்பிய புரொபெல்லர்கள் கிடைக்கவில்லை. அதனால், சொந்தமாக நானே ஒன்றை உருவாக்கிவிட்டேன். அது மக்களுக்குப் பிடித்திருந்தது. அதை நான் விற்றுவிட்டேன். அதற்குப் பிறகு இரண்டு புரொபெல்லர்களை உருவாக்கும் அளவுக்கு என்னிடம் பணம் வந்தது. அந்த இரண்டையும் விற்று மூன்றுக்கும் மேற்பட்டவற்றைத் தயாரித்தேன்...’’ என்று நினைவுகூர்கிறார்.

குறைந்த செலவில் உருவாகும் இவரது தயாரிப்புகளுக்கு விமான உதிரி பாக உற்பத்தி யாளர்கள் சந்தையில் இன்றளவும் பெரிய வரவேற்பு இருக்கிறது. கலிஃபோர்னியா வாழ்க்கை போரடித்தநிலையில், கடந்த 2007-ம் ஆண்டு உட்டாவின் லூசின் விமான நிலையம் பற்றிய தகவல் இவோவுக்குத் தெரியவந்திருக்கிறது. 24 ஆண்டுகள் கலிஃபோர்னியா வாழ்க்கையை விட்டு லூசினுக்கு இடம்பெயரும் முடிவுக்கு அவர் வந்துவிட்டார்.

லூசின்: அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் அமைந்திருக்கும் லூசின் நகரத்தின் மொத்த மக்கள்தொகை எப்போதுமே 200-ஐ தாண்டியதில்லை. லூசின் - ஓக்டன் இடையிலான அமெரிக்காவின் சதர்ன் பசிபிக் ரயில் பாதை (Southern Pacific Railroad) பணிகளுக்காக அந்தப் பகுதியில் தொழிலாளர்கள் குடியேறினர். 1903-ல் அந்தப் பணிகள் முடிவடைந்தபோது, தொழிலாளர்கள் மொத்தமாக அந்தப் பகுதியைவிட்டு வெளியேறினர். இரண்டாம் உலகப்போர், அமெரிக்க பொருளாதாரச் சரிவு உள்ளிட்ட பல சம்பவங்களால் கடுமையாக பாதிக்கப்பட்ட லூசின், பெரிதாக வளராமலேயே இருந்தது. லூசின் - ஓக்டன் இடையிலான ரயில் பாதை அகற்றப்பட்ட பின்னர், 1972-ம் ஆண்டு அந்த நகர் முழுமையாகக் கைவிடப்பட்டது.

கைவிடப்பட்ட நகரின் குடிமகன்!

`கைவிடப்பட்ட பேய் நகரம்’ என்றழைக்கப் படும் லூசினில் இன்றைய சூழலில் குடியிருக்கும் ஒரே ஒரு நபர் இவோ மட்டும்தான். அந்தப் பகுதியிலிருந்த சுமார் 400 ஏக்கர் பரப்பளவிலான கைவிடப்பட்ட விமான நிலையத்தை சுமார் 99,000 அமெரிக்க டாலர்கள் கொடுத்து அரசிடமிருந்து வாங்கிய இவோ, 2007-க்குப் பிறகு அங்கேயே நிரந்தரமாகக் குடியேறியிருக் கிறார். அவர் அந்த இடத்தை வாங்கியபோது அந்த விமான நிலையத்தில் ஓடுதளத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை. அதன் பிறகு 100 x 50 அடி என்ற அளவில் விமானங்களை நிறுத்தும் கேரேஜ் போன்ற ஹேங்கரைக் கட்டமைத்திருக் கிறார் இவோ. `ஹேங்கர்’ (Hanger) எனப்படும் அந்தப் பெரிய கேரேஜ்தான் இவோ-வின் வொர்க்‌ஷாப், வீடு, அலுவலகம் எல்லாமே.

லூசினுக்குக் குடிபெயர்ந்ததைக் குறிப்பிட்ட அவர், `செக்கோஸ்லோவாகியாவிலிருந்து தப்பி கலிஃபோர்னியாவுக்கு வந்தேன். அதேபோலத் தான் கலிபோர்னியாவிலிருந்து தப்பி இங்கு வந்து சேர்திருக்கிறேன்’’ என்றார்.

கலிஃபோர்னியாவின் லாங்பீச் பகுதியில் வசித்த இவோ, அந்தப் பகுதியின் அதிகமான மக்கள் அடர்த்தி, போக்குவரத்து நெரிசல் போன்றவற்றை வெறுத்ததாகச் சொல்கிறார்கள். மக்களால் கைவிடப்பட்ட பகுதிகள் தனது கவனத்தை எப்போதுமே ஈர்ப்பவை என்று சிலாகிக்கும் இவோ, லூசினிலிருந்து 163 மைல்கள் தொலைவிலிருக்கும் ஓக்டன் நகருக்கு மாதமொரு முறை தனது சிறிய ரக விமானத்தில் சென்று வருகிறார். 45 நிமிட விமானப் பயண தூரத்திலிருக்கும் அந்த நகரிலிருந்து மாதம் முழுவதுக்கும் தேவையான மளிகை உள்ளிட்ட அத்திவாசியப் பொருள்களை வாங்கிக்கொண்டு, தனது ஹேங்கருக்குத் திரும்புகிறார்.

தனது விருப்பமான புராஜெக்டை உருவாக்கி வருவதாகக் குறிப்பிடும் இவோ, ஹெலிகாப்டர், விமானம் இரண்டும் சேர்ந்த ஒரு கலவையான பறக்கும் இயந்திரத்தை வடிவமைத்துவருகிறார். இவோ வசித்துவரும் ஹேங்கரைச் சுற்றிலும் ஏறக்குறைய 100 மைல் தூரத்துக்கு மக்கள் யாரும் வசிக்கவில்லை. அது தன்னை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை என்று குறிப்பிடுகிறார் இவோ. `மக்களுடன் பேசுவதோ, அது குறித்து எண்ணுவதோ உண்டா?’ என்று கேட்டால், `என் நண்பர்கள் எப்போதாவது வந்து செல்வார்கள். காரில் செல்லும் மக்களை எப்போதாவது பார்ப்பதுண்டு. அதேபோல் செல்போன் நிறுவன ஊழியர்களும், அமெரிக்க அரசு நிறுவனமான எஃப்.ஏ.ஏ ஊழியர்களும் வந்து செல்வார்கள்’ என்று சிரிக்கிறார் இவோ.

`எனது ஹேங்கரிலிருக்கும் 90 இன்ச் டி.வி மூலமாக உலக நடப்புகளை அறிந்துகொள்வேன்’ என்கிறார் இவோ. காட்டுத்தீயும் நிலநடுக்கங்களும் பழக்கமாகிப்போன பகுதி இது என்று சொல்லும் இவோவுக்கு, மிகப்பெரிய தொல்லையாக இருப்பது `பேட்ஜர்' (Badger) எனப்படும் அணில் போன்ற உயிரினம்தான். ஹேங்கரில் பல இடங் களில் தரையில் பேட்ஜர்கள் குழிதோண்டி இவோவுக்குத் தொல்லை கொடுக்கின்றன. அவற்றிடமிருந்து பாதுகாத்துக்கொள்வதற்காக துப்பாக்கிகள் சிலவற்றையும் இவோ வைத்திருக்கிறார்.

`இந்த வாழ்க்கைமுறை பிடித்திருக்கிறதா?' என்ற கேள்விக்கு, `பிடித்திருப்பதால்தானே இத்தனை நாள் இருக்கிறேன். இல்லாவிட்டால் இங்கிருந்தும் தப்பியிருப்பேன்’ என்று வறட்டுச் சிரிப்பு சிரித்திருக்கிறார் இவோ. கடுமையான கட்டுப்பாடுகள் அமலிலிருந்த செக்கோஸ்லோ வாகியாவிலிருந்து உட்டாவின் பாலைவனப் பகுதிக்கு வந்து சேர்ந்திருக்கிறார் இவோ. `நினைத்தையெல்லாம் சுதந்திரமாகச் செய்ய வேண்டும்’ என்ற பெரும்பாலானோரின் கனவு, இவோவுக்கு நனவாயிருக்கிறது என்றே சொல்லலாம்.