Published:Updated:

அமெரிக்கா: `நாட்டையே அழித்து விடுவார் ஜோ பிடன்!’ - கொதிக்கும் ட்ரம்ப்

ட்ரம்ப்
ட்ரம்ப் ( AP )

``இதேபோன்ற நேர்காணல் ஒன்றில் பிடன் உட்காரட்டும் பார்க்கலாம். பிறகு அவர் `மம்மி’ என்று அழுதுகொண்டே இருப்பார். `மம்மி, மம்மி என்னை வீட்டுக்கு அழைத்துச் செல்லுங்கள்’ என்று கூறுவார்” - ட்ரம்ப்

கொரோனா வைரஸால் மிகவும் கடுமையாகப் பாதிப்படைந்த நாடுகளில் அமெரிக்கா முதன்மையானது. ஒவ்வொரு நாளும் அங்கு பாதிப்படைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் ஒருபக்கம் அதிகாரிகள் திணறிக்கொண்டிருக்க, மறுபக்கம் நவம்பர் மாதம் நடைபெற உள்ள அதிபர் தேர்தலுக்கான பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்தத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும் ஜோ பிடனுக்கும் குடியரசுக் கட்சி சார்பில் மீண்டும் போட்டியிடும் அதிபர் ட்ரம்ப்புக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இதனால், பிரசாரங்கள் மற்றும் செய்தியாளர்கள் சந்திப்பில் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து பேசி வருகின்றனர். அவ்வகையில் தற்போது அதிபர் ட்ரம்ப், `அமெரிக்காவை வழிநடத்தும் அளவுக்கு திறமையானவர் அல்ல’ என ஜோ பிடனை கடுமையாக விமர்சித்துள்ளது அமெரிக்க அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜோ பிடன்
ஜோ பிடன்
AP

அமெரிக்காவில் தேர்தல் தொடர்பாக நடக்கும் கருத்துக் கணிப்புகள் ஜோ பிடனுக்கு அதிக ஆதரவு இருப்பதாகத் தெரிவிக்கின்றன. கொரோனா வைரஸ் தொடர்பான நடவடிக்கைகள், இனரீதியிலான ஒடுக்குமுறைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களும் அதிபர் ட்ரம்ப்புக்கு பின்னடைவை ஏற்படுத்துயுள்ளன. எனினும், அதிபர் ட்ரம்ப், `நம்ப முடியாத அளவு வாக்கு எண்ணிக்கையுடன் வெற்றி பெறுவேன்’ என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், ``அமெரிக்காவை வழிநடத்துவதற்கு ஜோ பிடன் திறமனையானவர் அல்ல. அவர் மனநல குறைவு உடையவர். நவம்பர் மாதம் நடைபெற உள்ள தேர்தலில் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டால் இந்த நாட்டையே அழிப்பார்” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

ட்ரம்ப்: உலகின் மிகவும் ஆபத்தான மனிதன் உருவானது எப்படி?  - சர்ச்சையைக் கிளப்பும் புத்தகம்

ஜோ பிடன் குறித்து தொடர்ந்து பேசிய ட்ரம்ப் பல்வேறு குற்றச்சாட்டுகளையும் முன்வைத்துப் பேசினார். ``ஜோ பிடன் உங்கள்து வரிகளை மூன்று மடங்காக உயர்த்துவார்” என்றார். அமெரிக்காவில் வைரஸ் பரவுவதைத் தடுக்க தேவாலயங்களில் மக்கள் நுழைவதைத் தடுத்த ஜனநாயக அதிகாரிகளைக் குறிப்பிட்ட அவர் ஜோ பிடனைத் தேர்ந்தெடுத்தால், மதம் தொடர்பான நடவடிக்கைகள் பாதிப்படையும் என்றும் கூறினார்.

நவம்பர் மாத தேர்தலில் தோல்வி அடைந்தால் அதை ஏற்றுக்கொள்வீர்களா என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த ட்ரம்ப், ``நான் ஆம் என்று சொல்லப்போவதில்லை. பார்க்கலாம்” என்று கூறினார். கொரோனா நெருக்கடியைக் கையாள்வது, இனரீதியிலான பிரச்னையைக் கையாள்வது என அனைத்திலும் ட்ரம்ப்பைவிட ஜோ பிடன் சிறப்பாகச் செயல்படுவார் எனக் கருத்துக்கணிப்புகள் முடிவுகள் தெரிவிப்பதாகச் செய்தியாளர்கள் கூறியதற்கு, `அத்தகைய கருத்துக்கணிப்புகள் போலி’ என்று குறிப்பிட்டார்.

ஜோ பிடன் - ட்ரம்ப்
ஜோ பிடன் - ட்ரம்ப்

அதிபர் ட்ரம்ப் தனது போட்டியாளரான ஜோ பிடனின் மனநிலை குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பியதால் செய்தியாளர்கள் அவரை வயாதனவர் என ட்ரம்ப் நினைக்கிறாரா என்ற தொனியில் கேள்வியை முன் வைத்தனர். இதற்கு ட்ரம்ப், ``நான் இதைப் பற்றி சொல்ல விரும்பவில்லை. ஆனால், அவர் அதிபராக இருக்க தகுதியற்றவர் என்பதை நான் சொல்கிறேன். இதேபோன்ற நேர்காணல் ஒன்றில் பிடன் உட்காரட்டும் பார்க்கலாம். பிறகு அவர் `மம்மி’ என்று அழுதுகொண்டே இருப்பார். `மம்மி, மம்மி என்னை வீட்டுக்கு அழைத்துச் செல்லுங்கள்’ என்று கூறுவார்” என்று கடுமையாக விமர்சித்தார்.

வைரஸ் நடவடிக்கைகள் தொடர்பாக ட்ரம்ப்,``உலகிலேயே அதிகளவில் வைரஸ் பரிசோதனைகளை மேற்கொள்கிறோம். வைரஸ் ஒருநாள் மறைந்துவிடும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். முகக்கவசம் அணிவது தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்க விரும்பவில்லை. மக்கள் சுதந்திரமாக இருக்க விரும்பிகிறேன்” என்று கூறினார்.

ட்ரம்ப்
ட்ரம்ப்

நாட்டில் நிலவும் அமைதியின்மை மற்றும் சில நகரங்களில் சமீபத்தில் நடந்த குற்றங்கள் குறித்த கேள்விக்கு, ``இந்தச் சம்பவங்கள் நடந்த பகுதிகளில் ஜனநாயகக் கட்சியினர் ஆட்சி செய்கின்றனர்” என்றார். ஆப்பிரிக்க அமெரிக்க மக்கள் காவலர்களால் கொல்லப்படுவது தொடர்பான கேள்விக்கு ட்ரம்ப், ``பல அமெரிக்கர்களும் கொல்லப்படுகிறார்கள். நீங்கள் அதையும் குறிப்பிட வேண்டும்” எனப் பதிலளித்தார். சில மாகாணங்களில் தொடரும் ஊரடங்கு மற்றும் மில்லியன் கணக்கான நபர்கள் வேலை இழப்பு ஆகியவற்றின் நடுவிலும் பொருளாதாரம் சிறப்பாகச் செயல்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார் ட்ரம்ப்.

அமெரிக்கா:`நம்ப முடியாத வாக்கு எண்ணிக்கையுடன் வெற்றி!’ - அதிபர் ட்ரம்ப் நம்பிக்கை
அடுத்த கட்டுரைக்கு