Published:Updated:

`200 ஆண்டுக்கால பிரச்னை, ட்ரம்புடன் முடியாது!' -ஜார்ஜின் மரணம் குறித்து அதிபர் வேட்பாளர் ஜோ பிடன்

ஜோ பிடன்
ஜோ பிடன் ( AP )

வெறுப்புணர்வுகள் ட்ரம்புடன் தொடங்கவில்லை என்றும் இது அவருடன் முடிவடையாது என்றும் ஜோ பிடன் குறிப்பிட்டார்.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள், சீனாவின் மீதான குற்றச்சாட்டுகள் மற்றும் ஜார்ஜ் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக நாடு தழுவிய அளவில் நடைபெறும் போராட்டங்கள் என அனைத்துப் பிரச்னைகள் தொடர்பாகவும் அதிபர் ட்ரம்பை ஒபாமா, ஜோ பிடன் மற்றும் அமெரிக்க மாகாண ஆளுநர்கள் உட்பட பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இதைத் தவிர ட்விட்டர் மற்றும் உலக சுகாதார அமைப்பு ஆகியவற்றுடனும் ட்ரம்ப் வார்த்தைப் போர் நடத்தி வருகிறார். அந்நாட்டின் அதிபர் தேர்தல் விரைவில் நடைபெற இருப்பதும், இந்த விமர்சனங்கள் அதிக அளவில் கவனிக்கப்பட்டு வருவதற்கு முக்கியமான ஒரு காரணமாக கருதலாம். எனினும், அதிபர் ட்ரம்ப் விமர்சனங்களைக் கடுமையாக கையாள்வதும் தொடர்ந்து நடவடிக்கைகளில் அலட்சியம் காட்டுவதும் பலரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ட்ரம்ப்
ட்ரம்ப்
AP

இந்த நிலையில், நடைபெற இருக்கும் அமெரிக்க தேர்தலில் போட்டியிடும் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன், ஆப்ரிக்க-அமெரிக்க மக்களின் ஆதரவாளர்களுடன் ஆன்லைன் வழியாக உரையாடல் ஒன்றை மேற்கொண்டார். அதில் அவர் பேசும்போது, ``ஜனாதிபதியின் வார்த்தைகள் மிகவும் முக்கியமானவை. மக்களை எப்போதுமே அவர் பிளவுபடுத்திப் பார்க்கும்போது, மக்களில் மிகவும் மோசமான மனநிலை உடையவர்கள் வெளியே வருவார்கள்” என்றார்.

அப்போது, உரையாடலில் ஈடுபட்ட ரியால் வில்சன் என்பவர் ஜோ பிடனிடம், `நீங்கள் எவ்வாறு நாட்டை வித்தியாசமான வழியில் வழிநடத்தப்போகிறீர்கள்? என்றும் `ஆப்பிரிக்க அமெரிக்க மக்களுக்கு என்ன செய்வீர்கள்?' என்றும் கேட்டார். அதற்கு பதிலளித்த ஜோ பிடன், ``நீங்கள் மக்களை நேசிக்காவிட்டால் மக்களை வழிநடத்த முடியாது என்பது உண்மை. நான் மக்களை நேசிக்கிறேன்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ``நாம் ஒரு நல்ல தேசமாக ஒன்றிணைந்து இருக்க முடியும் என்று நினைக்கிறோமா? மக்களில் சிலர் அதை நினைப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. இங்குள்ள 10 முதல் 15 சதவிகிதத்தினர் நல்ல மனிதர்கள் அல்ல. ஆனால், பெரும்பான்மையான மக்கள் மிகவும் கண்ணியமானவர்களாக இருக்கிறார்கள். அவர்களை அனைவரும் ஒன்றிணைக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

2016-ம் ஆண்டு தேர்தலின்போது ஹிலாரி கிளிண்டன், `ட்ரம்பின் ஆதரவாளர்கள் பாதிப் பேர் பேஸ்கட் ஆஃப் டெப்லோரபிள்ஸ்’ என விமர்சித்தது உடன் ஜோ பிடன் பேசியதையும் ஒப்பிட்டு விவாதித்து வருகின்றனர்.

`ஜோ பிடன் வெற்றி பெறுவதே சீனாவின் பெரும் ஆசை!’ - எதிர்க்கட்சிகளையும் சேர்த்து விமர்சிக்கும் ட்ரம்ப்

ஜோ பிடன், தான் வெள்ளையினத்தைச் சார்ந்த ஒருவராக இருப்பதால் அனுபவிக்கும் சலுகைகள் குறித்தும் விவாதங்களில் பேசினார். அதில், ``நான் வெள்ளையினத்தைச் சேர்ந்தவன். நான் அதைப் புரிந்துகொண்டேன். ஆனால், என்னால் அதை உணர முடியவில்லை. வீதிகளில் நடந்து செல்லும் ஆப்பிரிக்க- அமெரிக்க மனிதராக இருப்பது பற்றி எனக்குத் தெரியாது. வீதிகளில் நடந்து செல்லும் ஆப்பிரிக்க- அமெரிக்க மனிதர்கள் கைது செய்யப்படுகிறார்கள். அந்த மோசமான நிகழ்வு எனக்கு நடைபெறுவதை கடவுள் தடுத்துள்ளார்.

ஆப்பிரிக்க-அமெரிக்க மக்களை மனிதராக இல்லாமல் பாரபட்சமற்ற முறையில் நடத்துவது குறித்து எனக்குத் தெரியவில்லை. ஆனால், அவமானப்படுத்துவது என்ன என்பது பற்றி எனக்குத் தெரியும். குழந்தையாக இருந்தபோது இதுபோன்ற விஷயங்களில் நான் தடுமாறினேன். சொந்த ஈகோ காரணங்களுக்காக மற்றவர்கள் மீது அதிகாரத்தைச் செலுத்தும் மனிதர்களுடன் பழகி இருக்கிறேன்” என்று கூறினார்.

அமெரிக்கா போராட்டம்
அமெரிக்கா போராட்டம்
AP

வெறுப்புணர்வுகள் ட்ரம்புடன் தொடங்கவில்லை என்றும் இது அவருடன் முடிவடையாது என்றும் ஜோ பிடன் குறிப்பிட்டார். ``நம் நாட்டினுடைய வரலாறு கற்பனையான கதை அல்ல. 200 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் பிரச்னைகள் நிலவி வருகிறது. இந்தத் தேசத்தின் நன்மைக்காக நாங்களும் போரில் இருக்கிறோம். ஓர் ஆப்பிரிக்க அமெரிக்க ஜனாதிபதியை தேர்ந்தெடுத்தபோது மகத்தான் முன்னேற்றத்தை நாடு சந்தித்ததாக கருதினேன். வேற்றுமைகள் மாறிவிட்டதாக நினைத்தேன். வெறுப்புணர்வை தோற்கடிக்கலாம் என நினைத்தேன். ஆனால், அது முடியவில்லை. வெறுப்பு எல்லாவற்றையும் மறைக்கிறது” என்று பேசியுள்ளார்.

`ட்ரம்ப், மக்களை ஒன்றிணைப்பதாக நடிக்கக்கூட இல்லை!’ - கொதித்த முன்னாள் ராணுவச் செயலர்
அடுத்த கட்டுரைக்கு