Published:Updated:

`குருத்துவாரா தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான்?’ -ஐ.எஸ் பொறுப்பேற்பில் கேள்வியெழுப்பும் இந்தியா

குருத்துவாரா
குருத்துவாரா ( AP )

சீக்கிய மக்கள்மீது நடத்தப்பட்டுள்ள இந்தத் தாக்குதலின் பின்னால் பாகிஸ்தான் இருப்பதாக இந்தியா சந்தேகம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் மையப்பகுதியில் உள்ள சீக்கிய வழிபாட்டுத் தலமான குருத்துவாராமீது தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைபடை தாக்குதலில் 27 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குருத்துவாரா
குருத்துவாரா
AP

உலகமே கொரோனாவுக்கு எதிராகப் போராடிக்கொண்டிருக்கும் இந்தச் சூழலில், மக்களால் நிம்மதியாக பிராத்தனைகூட செய்ய முடியவில்லை என வருத்தம் தெரிவித்துள்ளன உலக நாடுகள். ஆப்கானிஸ்தானில் உள்ள சிறுபான்மைச் சமூகமான சீக்கிய மக்கள்மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது. இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

சீக்கிய மக்கள்மீது நடத்தப்பட்டுள்ள இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் பாகிஸ்தான் இருப்பதாக இந்தியா சந்தேகம் தெரிவித்துள்ளது. இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் பேசுகையில், ``உலகமே ஒரு தொற்றுநோய்க்கு எதிராகக் கடுமையாகப் போராடிக்கொண்டிருக்கும்போது, கோயில்களில், பிரார்த்தனைக் கூடங்களில் இதுபோன்ற தாக்குதல் நடத்த முடிகிறது என்றால், அவர்கள் எத்தகைய கொடூர மனநிலையைக் கொண்டவர்களாக இருப்பார்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.

குருத்துவாரா
குருத்துவாரா
AP

இந்தத் தாக்குதல் தொடர்பாகப் பேசிய இந்திய பாதுகாப்புத்துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர், ``ஐ.எஸ் அமைப்பு, தங்களின் முதலாவது அறிக்கையில் தாக்குதலுக்குப் பொறுப்பேற்பதாக மட்டுமே குறிப்பிட்டிருந்தது. இரண்டாவது அறிக்கையில், காஷ்மீரில் இந்தியா மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு எதிராக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் காரணம் கூறியுள்ளனர். இரண்டாவது அறிக்கை, இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் யார் இருக்கிறர்கள் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.

மேலும் சில ஆராய்ச்சியாளர்கள், ஹக்கானி மற்றும் லஷ்கர்-ஐ-இ தொய்பா அமைப்புகள் டெல்லியில் நடைபெற்ற கலவரத்துக்கு எதிராக ஆப்கானிஸ்தான் சீக்கியர்களைத் தேர்ந்தெடுத்ததாகக் கூறுகிறார்கள். அதனால் இவ்விரண்டு அமைப்பும் இணைந்துதான் இந்தத் தாக்குதலை சாத்தியமக்கியிருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கின்றனர். மேலும், இந்த அமைப்புகளுக்கும் பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ அமைப்பின் ஆதரவு இருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்" என்கிறார்.

குருத்துவாரா
குருத்துவாரா
AP

இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட தகவல் என்பது ஐ.எஸ் அமைப்பு இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது என்பது மட்டும்தான். எனினும் இது ஒரு நிழல் ஆட்டம் என நினைக்கிறது இந்தியா. இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் பாகிஸ்தான் இல்லை எனச் சொல்வதற்காக ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றதாகவும் சொல்கிறார்கள்.

இந்தத் தாக்குதலை ஹக்கானி அமைப்பும் லஷ்கர்-ஐ-இ தொய்பாவும் இணைந்துதான் செய்திருக்கக்கூடும் என இந்தியா நம்புகிறது. மேலும், இந்தத் தொடர்பை நிரூபித்துவிட்டால், இதற்குப் பின்னால் பாகிஸ்தான் இருப்பதை உறுதி செய்துவிடலாம் என்கிறது பாதுகாப்புத்துறை வட்டாரங்கள். இந்திய பாதுகாப்பு அமைப்புகள் இந்தக் கோணத்தில் விசாரணையைத் தொடங்கியுள்ளன.

அடுத்த கட்டுரைக்கு