Published:Updated:

`பாடங்களை மனப்பாடம் செய்யத் தெரியாதா?’ - பாகிஸ்தானில் ஆசிரியர் அடித்ததில் மாணவன் உயிரிழப்பு

ராம் பிரசாத்

ஆசிரியர் அடித்ததில் 10-ம் வகுப்பு மாணவர் உயிரிழந்த சம்பவம், லாகூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Representation image
Representation image

பாகிஸ்தானின் லாகூரில் இயங்கிவரும் தனியார் பள்ளியில் பிலால் பத்தாம் வகுப்பு படித்துவந்தார். `பாடங்களைச் சரியாக மனப்பாடம்செய்து ஒப்புவிக்கவில்லை; வகுப்புக்கு புத்தகம் கொண்டு வரவில்லை’ என்று கூறி வகுப்பாசிரியர், பிலாலை கடுமையாகத் தாக்கியுள்ளார். இந்தத் தாக்குதலில் நிலைகுலைந்த பிலால் மயங்கிவிழுந்தார். இதையடுத்து, அவரைத் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி மாணவர் உயிரிழந்தார். இதுகுறித்து அவரது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்தனர். மாணவனின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், ஆசிரியர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Representation image
Representation image

இதுகுறித்துப் பேசிய மாணவனின் தந்தை, ``பள்ளிக் கட்டணம் கட்டவில்லை என்பதற்காக எனது மகனை மனத்தளவில் சித்ரவதை செய்துவந்தனர். அன்னைக்கு காலையிலதான் ஸ்கூல் ஃபீஸ் கட்டினேன். மதியம் 1 மணிக்கு ஸ்கூல்ல இருந்து போன் வந்தது. என் பையன் இறந்த செய்தியைச் சொன்னார்கள். பக்கத்துல இருக்கிற தனியார் மருத்துவமனையில் அனுமதித்ததாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது'' என்றார்.

பள்ளி மாணவர்கள் சிலர் பேசுகையில், ``மாணவர்களிடம் அந்த ஆசிரியர் கடுமையாக நடந்துகொள்வது இது முதல் முறையல்ல. மாணவர்களிடம் கடுமையாக நடந்துகொண்டதற்காக இவரை பள்ளியை விட்டு நீக்கினார்கள். கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான் இவர் பள்ளியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். மாணவர்கள் பாடங்களை மனப்பாடம் செய்யவில்லை என்றால் கடுமையாக அடிப்பார். சம்பவத்தன்று, பிலால் புக் எடுத்து வரல. ஆசிரியர் கேட்ட கேள்விக்கும் சரியா பதில் சொல்லவில்லை. அதனால அவர் அடிக்கத் தொடங்கிவிட்டார். தலை மற்றும் வயிற்றில் கடுமையாகத் தாக்கினார். மூச்சு விட முடியவில்லை என பிலால் சத்தம் போட்டான். நடிக்கிறியான்னு சொல்லிட்டு வகுப்புச் சுவற்றில் தலையை மோதினார். பிலால் மயக்கம் போட்டு விழுந்துட்டான்” என்று தெரிவித்தனர்.

Representation image
Representation image

மாணவனின் உறவினர் ஃபைசல் கூறுகையில், ``ஸ்கூல்ல இப்படிக் கடுமையான தண்டனைகள் வழங்கக்கூடாது. பையன் மயக்கம் போட்டு விழுந்து 10 நிமிடங்களுக்குப் பிறகுதான் தலைமை ஆசிரியர் வந்துள்ளார். அதுவரை தரையிலேயே கிடத்தி வைத்துள்ளனர். எங்க குழந்தைகளை இவங்க கொலை செய்றதுக்காகவா மாசம் 6,000 கட்டி படிக்கவைக்கிறோம்?'' என்றார் கண்ணீரோடு. பள்ளித் தரப்பில் இதுகுறித்து எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை.