Published:Updated:

`விமானப்படை தளபதி டு எகிப்தின் அதிபர்’ - மறைந்த ஹொஸ்னி முபாரகின் சறுக்கலும் சாதனைகளும்!

ஹொஸ்னி முபாரக்
ஹொஸ்னி முபாரக்

தனது நட்புறவு நாடுகளுக்கும் தீவிரவாதம் தொடர்பான எச்சரிக்கைகளை விடுத்தார். இந்த நிலையில், 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ல் அல்கொய்தா அமெரிக்காவின் மீது தாக்குதல் நடத்தியதும் கவனிக்கத்தக்கது.

எகிப்தில் நீண்ட காலமாக ஆட்சி செய்தவர் என்ற வரலாற்றைப் பதிவு செய்தவர், ஹொஸ்னி முபாரக். சுமார் 30 வருடங்கள் தனது ஆட்சியை நிலைநிறுத்தியுள்ளார். 2011-ம் ஆண்டு மத்திய கிழக்கு நாடுகளில் சர்வாதிகார அரசுகளுக்கு எதிராக எழுந்த `அரபு வசந்தம்’ என்ற மிகப்பெரிய போராட்டத்தைத் தொடர்ந்து ஆட்சியிலிருந்து இறக்கப்பட்டார். ஆட்சியிலிருந்தபோது அவரின் நடவடிக்கைகள் தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டார். விடுதலையான பின்னர், மருத்துவமனைகளில் நாள்களைக் கழித்து வந்த முபாரக் இன்று இறந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் அறிவித்துள்ளது.

ஹொஸ்னி முபாரக்
ஹொஸ்னி முபாரக்

முகமது ஹொஸ்னி சையது முபாரக், நைல் டெல்டா பகுதியிலுள்ள காஃபர் அல் மெசஹல்லாவில் 1928-ம் ஆண்டு மே மாதம் 4-ம் தேதி பிறந்தார். 1950-ம் ஆண்டு விமானப்படையில் சேர்ந்தார். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அப்போது ஆட்சியிலிருந்த மன்னர் ஃபாருக்கை சதித்திட்டம் தீட்டி கமல் அப்துல் நாசர் வீழ்த்தினார். சோவியத் யூனியனுக்கான எகிப்திய ராணுவத்தின் தலைவராக அப்துலின் அரசாங்கத்தில் 1964-ம் ஆண்டு முபாரக் நியமிக்கப்பட்டார். 1967 முதல் 1972 வரை விமானப்படைத் தளபதியாகப் பணியாற்றினார்.

அதைத் தொடர்ந்து ராணுவ விவகாரங்களுக்கான துணை அமைச்சராகப் பணியாற்றி வந்த முபாரக், 1973-ல் நடந்த அரபு மற்றும் இஸ்ரேல் போருக்குப் பின்னர் விமானப்படையின் மார்ஷலாக நியமிக்கப்பட்டார். இந்தப் போரில் முபாரக் முக்கியப் பங்காற்றியதும் கவனிக்கத்தக்கது. அப்துல் நாசரின் மரணத்துக்குப் பின் அன்வர் சதாத் ஆட்சி செய்து வந்தார். இவர்தான் முபாரக்கை துணை அதிபராக 1975-ல் நியமித்தார். 1973-ல் நடந்த போரை நினைவுகொள்ளும் விதமாக 1981-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 6-ம் தேதி நடந்த அணிவகுப்பில் சதாத் அடிப்படைவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். கைகளில் குண்டு காயங்களுடன் முபாரக் தப்பித்தார். ஆட்சியாளருக்கு எதிரான குழுக்களை முறியடித்து ஆட்சியைக் கைப்பற்றினார்.

மறைந்த ஓமன் மன்னர் சுல்தான் கபூஸின் சாதனைகளும்... ரகசியக் கடிதமும்! #sultanqaboos

1980 முதல் எகிப்து மிகப்பெரிய பொருளாதார சிக்கல்களை சந்தித்து வந்தது. அந்நிய நாடுகளிடம் இருந்து பெற்ற கடன்களை செலுத்துவதையும் நிறுத்தியது. முபாரக் பதிவியேற்ற பின் 1990-ம் ஆண்டு குவைத்தில் இருந்த இராக் படைகளை வெளியேற்ற அமெரிக்காவுக்கு எகிப்து உதவி செய்ய முன்வந்தது. இதைத் தொடர்ந்து கடன் கொடுத்தவர்கள் கடன்களைத் தள்ளுபடி செய்தனர். மேலும், 2004-ம் ஆண்டு மாநிலத்தின் பொதுச் சொத்துகளை விற்க முடிவு செய்தார். பல நிறுவனங்கள் அரசின் எண்ணெய், கேஸ் மற்றும் தகவல்தொழில்நுட்பத் துறைகளில் முதலீடு செய்தது. இதனால் பொருளாதார நெருக்கடிகளில் இருந்து ஓரளவு தப்பித்ததாகக் கூறப்படுகிறது.

ஹொஸ்னி முபாரக்
ஹொஸ்னி முபாரக்

சோவியத்துடனான உறவை முறித்துக்கொண்டு அமெரிக்காவுடனான நட்புறவை மேம்படுத்தினார் முபாரக். அமெரிக்க ராணுவத்துடன் உதவி செய்வதால் வருடத்துக்கு சுமார் 1.3 பில்லியன் டாலர்களை எகிப்து பெற்றது. முபாரக் ஆட்சியாளராக இருந்தபோது எகிப்தில் உள்நாட்டு தீவிரவாதம் கடுமையாக இருந்தது. 1997-ம் ஆண்டில் 58 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டபோது வன்முறை உச்சத்தை அடைந்தது. இதனால், எகிப்தின் சுற்றுலாத்துறை அதிக பாதிப்பை சந்தித்தது. இந்தச் சம்பவங்கள் எகிப்தியர்களை மத வன்முறைக்கு எதிராகப் போராடத் தூண்டியது.

Vikatan

இதையடுத்து தனது நட்புறவு நாடுகளுக்கும் தீவிரவாதம் தொடர்பான எச்சரிக்கைகளை விடுத்தார். அவர்கள் இதை சீரியஸாக எடுத்துக்கொள்ளாததால் விமர்சித்தார். இந்த நிலையில், 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ல் அல்கொய்தா அமெரிக்காவின் மீது தாக்குதல் நடத்தியதும் கவனிக்கத்தக்கது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று தொடர்ந்து கூறினார். அதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டார்.

இவரது ஆட்சிக்காலத்தில் எகிப்தில் வறுமையும் வேலைவாய்ப்பின்மையும் தொடர்ந்து நிலவி வந்தது. ஊழல் புகார்களும் அதிகமாக எழுப்பப்பட்டன. இதனால், அதிருப்தியில் இருந்த மக்கள் இவருக்கு எதிராகப் போராட்டங்களை நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. சுமார் 18 நாள்கள் நடைபெற்ற கடுமையான போராட்டத்துக்குப் பின் பதவி விலகினார். இதைத் தொடர்ந்து அவர்மீதான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு ராணுவ தடுப்பில் இருந்தார்.

ஹொஸ்னி முபாரக்
ஹொஸ்னி முபாரக்

விசாரணையில் அவர் மீதான ஊழல் மற்றும் படுகொலை தொடர்பான குற்றங்களுக்காக ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. குற்றச்சாட்டுகள் பின்னர் ரத்து செய்யப்பட்டு 2017-ம் ஆண்டு விடுவிக்கப்பட்டார். தொடர்ந்து உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி தன்னுடைய 91-வது வயதில் இறந்துள்ளார்.

இவருடைய ஆட்சி முடிந்த பின்னர்தான் எகிப்தில் முதல்முறையாக ஜனநாயக முறையில் தேர்தல் நடைபெற்றது. அதில், முகது மொர்சி என்பவர் வெற்றி பெற்றார். குறைந்த ஆண்டுகளே இவர் ஆட்சி செய்தார். இவரையும் வீழ்த்தி ஜென் சிசி என்பவர் ஆட்சி செய்தார். மொர்சி 2019-ம் ஆண்டு சிறையிலேயே இறந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு