Published:Updated:

'சிங்கிளா இருங்க; லைஃப் ஸ்மூத்தா இருக்கும்!' - 107 வயது லூயிஸ் சொல்லும் சீக்ரெட்

சிங்கிளா இருப்பதுதான் எனது மகிழ்ச்சிக்குக் காரணம் என்கிறார் அமெரிக்காவை சேர்ந்த லூயிஸ்.

லூயிஸ்
லூயிஸ் ( twitter/@jamaaltbailey )

வயசுல சென்சுரி அடிச்சாலும் நான் இன்னும் சிங்கிள்தான் பாஸ் என்கிறார் அமெரிக்காவைச் சேர்ந்த லூயிஸ் சிக்னோர். லூயிஸ் தனது 107-வது பிறந்த நாளை 100-க்கும் மேற்பட்ட நண்பர்களுடன் நேற்று கொண்டாடியுள்ளார். 107 வயசானாலும் பாட்டிக்கு இன்னும் சேட்டை குறையவில்லை. நண்பர்களுடன் ஜாலியாகத்தான் வலம் வந்துகொண்டிருக்கிறார் இந்தப் பாட்டி. யாருடைய துணையும் இல்லாமல் ஷாப்பிங், ட்ரிப் என உலா வருகிறார். இப்போதும் தனியாகத்தான் இருக்கிறார். பெரிய நண்பர்கள் பட்டாளமே இவருக்கு இருக்கிறது. கல்யாணம் செய்துகொள்ளாததால்தான் 107 வயசுலயும் சந்தோஷமா இருக்கேன். இதுதான் எனது ரகசியம் என்கிறார்.

லூயிஸ் சிக்னோர்
லூயிஸ் சிக்னோர்
twitter/@jamaaltbailey

நியூயார்க்கில் உள்ள ஹெர்லாமில் 1912 வருடம் லூயிஸ் பிறந்தார். 14 வயதில் அங்கிருந்து Bronx நகரத்துக்குக் குடியெர்ந்துள்ளார். இளம் வயதில் தினமும் நடனமாடும் பழக்கம் இருந்துள்ளது. இந்த வயதிலும் அதைத் தொடருகிறார். மதிய உணவுக்குப் பின் சிறிது நேரம் நடனமாடுவார். வயதானவர்களுக்கு வரும் பிரச்னைகள் லூயிஸுக்கும் உள்ளன. அவரது பார்வைத் திறன் குறைந்துள்ளது. சமீபத்தில் நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டு வந்துள்ளார். 103 வயதில் அவர் குடியிருக்கும் அப்பார்ட்மென்டில் திருட்டு நடத்தது. திருடர்களால் தாக்குதலுக்கு உள்ளானதாக நண்பர்கள் கூறுகின்றனர்.

லூயிஸுக்கு ஒரு சகோதரி இருக்கிறார். அவரும் சென்சுரி அடித்துவிட்டார். 102 வயதான அவருக்குத் திருமணம் ஆகிவிட்டது. குடும்பத்துடன் வசித்து வருகிறார். லூயிஸின் 107-வது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் அவரால் கலந்துகொள்ள முடியவில்லை.

தன் வாழ்நாள் ரகசியம் குறித்து பேசிய லூயிஸ், ``என் நண்பர்கள் உடற்பயிற்சி செய்கிறார்கள். நானும் உடற்பயிற்சி செய்கிறேன். என்னாலும் நடனமாட முடியும். மதிய உணவு எடுத்துக்கொண்ட பிறகு சிறிது நேரம் நடனமாடுவேன். ரத்த அழுத்தத்துக்காக மட்டும் மாத்திரைகள் சாப்பிடுகிறேன் அவ்வளவுதான். 107 வயசுக்கான சீக்ரெட் சொல்லட்டுமா. நான் திருமணம் செய்துகொள்ளாததுதான் அந்த சீக்ரெட். என் சகோதரி அதைத்தான் கூறுவார். இத்தாலிய உணவு வகைகள் உடலுக்கு நல்லது. நான் வளரும் பருவத்தில் நல்ல உணவுப் பழக்கத்தைக் கொண்டிருந்தேன். அப்போது எல்லாம் சோடா, கேக் எல்லாம் கிடையாது. இப்போது இந்தக் கொண்டாட்டத்தில் கேக்குள் இடம்பிடித்துள்ளன” என்றார்.