Published:Updated:

`5 வயது முதல் மாடலிங்; அமெரிக்காவின் ஃபேஷன் ஐகான்!’ - `மெலானியா ட்ரம்ப்’... சில சுவாரஸ்ய தகவல்கள்

மெலானியா ட்ரம்ப்
மெலானியா ட்ரம்ப்

டெல்லியில் உள்ள அரசுப் பள்ளிக்கு வருகை தந்த அமெரிக்க அதிபரின் மனைவி மெலானியா ட்ரம்ப்புக்கு மாணவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அவரின் மனைவி மெலானியா ட்ரம்ப் ஆகிய இருவரும் இரண்டாவது நாளான இன்று காலை ராஷ்ட்ரபதி பவனுக்குச் சென்று குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்தனர். பின்னர் அங்கு வழங்கப்பட்ட முப்படைகளின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார் அமெரிக்க அதிபர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மகாத்மா காந்தியின் நினைவிடத்துக்குச் சென்று இருவரும் அஞ்சலி செலுத்தினர்.

மெலானியா ட்ரம்ப்
மெலானியா ட்ரம்ப்

இதையடுத்து இரு நாட்டுத் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொள்ளும் பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அதிபரின் மனைவி மெலானியா, டெல்லி நானக்புரா பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு வருகை புரிந்துள்ளார். இந்திய கலாசாரப்படி உடையணிந்திருந்த மாணவர்கள் இரு நாட்டுக் கொடிகளுடனும் ஆரத்தி எடுத்தும் மெலானிவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் பள்ளியைச் சுற்றிப் பார்த்த மெலானியா அங்கிருந்து சிறுவர்களுடன் உரையாடி மகிழ்ந்தார், இதையடுத்து கெஜ்ரிவால் அரசு அறிமுகப்படுத்தியுள்ள மகிழ்ச்சி பாடத்திட்ட வகுப்பைப் பார்வையிட்டார். தொடர்ந்து பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலை நிகழ்ச்சிகளை மாணவர்களுடன் இணைந்து பார்வையிட்டார். அப்போது மாணவர்கள் மத்தில் பேசிய அவர், ``நமஸ்தே! இந்தப் பள்ளி மிகவும் அழகாக உள்ளது. இந்திய கலாசாரப்படி நடனமாடி என்னை வரவேற்றதற்கு மிகவும் நன்றி, நான் இந்தியாவுக்கு வருவது இதுவே முதல்முறை இங்குள்ள மக்கள் அனைவரும் கனிவாக உள்ளனர்.

மெலானியா ட்ரம்ப்
மெலானியா ட்ரம்ப்

இங்குள்ள மாணவர்கள் ஒவ்வொரு நாளும் நினைவாற்றல், கதைசொல்லல் மற்றும் இயற்கையுடன் இணைந்து தங்கள் நாளை தொடங்குவது மிகவும் ஊக்கமளிக்கிறது. மகிழ்ச்சி வகுப்பு மிகவும் அருமையாக உள்ளது. மாணவர்கள் மனதில் நேர்மறையான எண்ணங்களை விதைக்கும் அனைத்துக் கல்வியாளர்களுக்கும் என் நன்றிகள்” என்று பேசியுள்ளார். பின்னர் மாணவர்கள் அளித்த நினைவுப் பரிசை பெற்றுக்கொண்டு பள்ளியிலிருந்து புறப்பட்டுச் சென்றார் மெலானியா ட்ரம்ப்.

ட்ரம்ப் விசிட்டால் இந்தியாவுக்கு என்ன ஆதாயம்? - ஓர் அலசல்

மெலானியா ட்ரம்ப் பற்றிய சில தகவல்கள்!

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் மூன்றாவது மனைவியான மெலானியா ட்ரம்ப், அமெரிக்காவின் மூத்த குடிமகளாக உள்ளார். மெலானியா, அதிபர் ட்ரம்பைவிட 24 வயது இளையவர். மேலும், அமெரிக்காவின் ஆறாவது அதிபரான ஜான் குயின்சி ஆடம்ஸின் மனைவி லூசியா ஆடம்ஸுக்கு அடுத்தபடியாக அமெரிக்கர் அல்லாத முதல் குடிமகளாக அறியப்படுகிறார்.

மெலானியா ட்ரம்ப்
மெலானியா ட்ரம்ப்

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்லோவெனியாவில் பிறந்தவர், முதல் மொழி ஆங்கிலம் இல்லாமல் அமெரிக்காவின் முதல் குடிமகளாக உள்ளவரும் இவர் மட்டுமே. தன் 5 வயது முதல் மாடலிங் துறையில் வலம் வரும் மெலானியா 1996-ம் ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு வந்து மாடலிங் துறையில் சிறந்து விளங்கினார். 2001-ம் ஆண்டு முதல் நிரந்தரமாக அமெரிக்காவிலேயே தங்கிவிட்டார். தற்போதும் அமெரிக்காவின் சிறந்த மாடலிங் மற்றும் ஃபேஷன் ஐகானாக வலம் வருகிறார் மெலானியா.

28-வது வயதில் ட்ரம்ப்பை சந்தித்துக் காதலிக்கத் தொடங்கி 2005-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர், பின்னர் 2006-ம் ஆண்டு அமெரிக்கக் குடியுரிமை பெற்றார். விளையாட்டுகளில் அதிக ஆர்வம் உள்ள மெலானியா, மாடலிங் இல்லாமல் தொழில்துறையிலும் சாதனை பெற்றுத் திகழ்கிறார். ஃபேஷன் நகைகள் மற்றும் அழகுசாதன பொருள்களின் நிறுவனம் தொடங்கி நடத்தி வருகிறார்.

மெலானியா ட்ரம்ப்
மெலானியா ட்ரம்ப்

உடலைக் கட்டுக்கோப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருப்பதில் அதிக கவனம் செலுத்தக்கூடியவர். ஜூஸ், பழங்கள், ஓட்ஸ் போன்றவற்றையே அதிகம் உண்பார். 2018-ம் ஆண்டு இளைஞர்களுக்காக இவர் தொடங்கிய பி பெஸ்ட் (BE BEST) பிரசாரம் அமெரிக்க முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு