Published:Updated:

ஓயாத கிண்டல், கேலி...`அம்மா நான் இறக்கப்போகிறேனா?’- சிறுவனின் கடைசி வார்த்தைகளும் தாயின் போராட்டமும்

சைமன் தன் தாய் ஜூலியுடன்
சைமன் தன் தாய் ஜூலியுடன் ( wales online )

``வாழ்க்கையை சைமன் மிகவும் நேசித்தான். ஆனால், இந்தக் கேலி கிண்டல்களிலிருந்து அவனால் தப்பிக்க முடியவில்லை. தொடர்ந்து அவன் சங்கடமான சூழ்நிலைகளுக்கு ஆளானான். ஒருநாள் இவற்றிலிருந்து தப்பிக்க தன்னுடைய வாழ்க்கையைத் தானே முடித்துக்கொண்டான்."

சவுத் வேல்ஸிலுள்ள டோனிரிஃபைல் எனும் பகுதியைச் சேர்ந்தவர் ஜூலி ஸ்டியூவர்ட். இவருடைய சைமன் ப்ரூக்ஸ் என்ற மகன் 15 வயதில் தொடர்ச்சியான கேலி, கிண்டல்கள் மற்றும் துன்புறுத்தல்களுக்கு உள்ளானதால் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றார். தீவிரமாக சிகிச்சை அளித்த பின்னரும்கூட 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ம் தேதி அவர் இறந்துவிட்டார். இதனால், ஜூலி நீண்ட காலம் மனஉளைச்சலில் இருந்துள்ளார். மகனை இழந்த வலியிலிருந்து மீண்டு வரமுடியவில்லை என்றாலும், தற்போது குழந்தைகள் செயற்பாட்டாளராகப் பணியாற்றுகிறார். இந்த நிலையில், சுமார், ஆறு வருடங்களுக்குப் பின்னர் தற்போது தன் மகன் தன்னிடம் பேசிய கடைசி வார்த்தைகளை மீண்டும் வருத்தத்துடன் நினைவுகூர்ந்துள்ளார். துன்புறுத்தல்களுக்கு எதிராகக் கருத்தரங்கு ஒன்றையும் நடத்தி அக்சுக்கு இதுதொடர்பாகச் சில கோரிக்கைகளையும் முன்வைக்க உள்ளார்.

ஜூலி
ஜூலி
wales online

சைமன் தன்னுடைய சிறுவதிலிருந்தே தொடர்ந்து துன்புறுத்தல்களை அனுபவித்து வந்துள்ளார் என்று வேதனையுடன் பேசத்தொடங்கும் ஜூலி, ``சைமன் அழகான, மிகவும் சுறுசுறுப்பான பையன். உணர்வுபூர்வமான ஒருவனும்கூட. சமூக சூழ்நிலையை அவன் ஒருபோதும் புரிந்துகொள்ளவில்லை. தன் வயதைவிட மூத்தவர்களுடன் எளிதாகப் பழகினான். மிகவும் நல்ல மனிதனாக இருந்தான். அவனுக்கு அழகான நண்பர்கள் வட்டம் இருந்தது. ஆனால், ஆரம்ப பள்ளியிலிருந்து கொடுமைகளை அனுபவித்தான். சில மாணவர்கள் அவனுடைய புத்தகப்பையைத் திருடுவது, பட்டப் பெயர்களை சொல்லி அழைப்பது என மன உளைச்சலுக்கு ஆளாக்கினர். உயர்நிலைப் பள்ளிக்கு வந்த பிறகு உடலளவில் அவனை சிலர் காயப்படுத்தினர்” என்றார்.

`கயிறு கொடுங்கள், சாக வேண்டும்!' -நண்பர்கள் கேலியால் மனமுடைந்த சிறுவன்; கரம் நீட்டிய நெட்டிசன்கள்

``வாழ்க்கையை சைமன் மிகவும் நேசித்தான். ஆனால், இந்தக் கேலி கிண்டல்களிலிருந்து அவனால் தப்பிக்க முடியவில்லை. தொடர்ந்து அவன் சங்கடமான சூழ்நிலைகளுக்கு ஆளானான். ஒருநாள் இவற்றிலிருந்து தப்பிக்க தன்னுடைய வாழ்க்கையைத் தானே முடித்துக்கொண்டான். அவனுக்கு படிப்பது ரொம்ப பிடிக்கும். வடிவமைப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளில் அவனுக்கு ஆர்வம் அதிகம். அவன் இறந்து போவதற்கு சில நாள்களுக்கு முன்புகூட வீட்டிலிருந்து படிக்க ஒப்புக்கொண்டான். ஆனால், அவனுக்கு பள்ளிக்குச் செல்ல விருப்பமே இல்லை” என்று கலங்கியுள்ளார்.

சைமன்
சைமன்
wales online

தொடர்ந்து பேசிய ஜூலி, ``ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை இரவும் பள்ளிக்கு நான் செல்ல மாட்டேன் என்று கெஞ்சுவான். பள்ளிக்கு செல்லும் நாள்களையும் வகுப்பறையில் இருக்கும் நேரங்களையும் எண்ணிக்கொண்டிருந்தான். இறப்பதற்கு முன்பு, `ஏன் எல்லாரும் இப்படியெல்லாம் பண்றாங்க? நான் சாகப்போறேனா?’ என்று கேட்டான். கடவுளிடம் செல்ல வேண்டும் என்று அதிக விருப்பம் அவனுக்கு,” என்றவர் அவன் இப்படியான செயலில் ஈடுபடுவான் என நினைக்கவே இல்லை என்றார். அவனுக்கு ஸ்கைடைவிங் மிகவும் பிடிக்கும், பள்ளியில் கூட்டத்திலிருந்து யாரையாவது மேடைக்கு பேச அழைத்தால் முதல் ஆளாக வருவான் என்றும் நெகிழ்ந்தார்.

வாழ்க்கையில் மகிழ்ச்சியான சிறுவனாக இருந்த சைமன் இறப்பதற்கு சில நாள்களுக்கு முன்னர் இயல்பு நிலைக்கு மாறாக இருந்துள்ளார். இரவு நேரங்களில் தூங்காமல் இருந்துள்ளார். மிகவும் மன உளைச்சலுக்கு ஆளான நபராகவே சுற்றியுள்ளார். 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் 28-ம் தேதி சைமன் பள்ளியிலிருந்து சீக்கிரமாகத் திரும்பி வந்துள்ளார். தன்னுடைய நண்பர் ஒருவருக்கு, ``என்னால் இனிமேலும் சமாளிக்க முடியாது. நான் கடவுளிடம் செல்கிறேன்” என்று குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். இதையறிந்த ஜூலி வீட்டுக்கு வருவதற்குள் மாத்திரைகளை எடுத்துக்கொண்டுள்ளான். டைனிங் டேபிளில் இருந்து சைமனைச் சுற்றி பலரும் நின்றுகொண்டிருந்தனர். ஆனால், யாருமே இந்த விஷயத்தை சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை என்கிறார் ஜூலி.

இந்தச் சம்பவத்தை அவர் கூறும்போது, ``நான் அவனை வாந்தி எடுக்க வைத்திருக்க வேண்டும். பின்னர், மருத்துவமனையில் சில நாள்கள் அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது, நான் செய்தது முட்டாள்தனம் என்றும் இறக்க விரும்பவில்லை என்றும் கூறினான். அப்போதும் என்னுடைய மகன் குணமடைந்துவிடுவான் என நம்பினேன். ஆனால், மருத்துவர்கள் அவனது ஹீமொகுளோபின் அளவு குறைவதைக் கண்காணித்தனர். தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டான். இரண்டு நாள்களில் இறந்துவிட்டான். என்னுடைய உடம்பில் ஒரு பகுதியைக் கிழித்து எறிந்ததுபோல இருந்தது அந்தத் தருணம்” என்று குறிப்பிட்டார்.

சைமன் தன் தாய் ஜூலியுடன்
சைமன் தன் தாய் ஜூலியுடன்
wales online

முதல் 18 மாதங்கள் சோம்பியைப்போல இருந்ததாகக்கூறும் ஜூலி, தற்போது சைமனுக்கு ஏற்பட்ட நிலை வேறு யாருக்கும் ஏற்படக் கூடாது என்பதற்காக வெளியில் வந்து குழந்தைகள் மீது நடக்கும் கேலி கிண்டல்கள், துன்புறுத்தல்களுக்கு எதிராக விழிப்புணர்வு வழங்கி வருகிறார். தற்கொலை, துன்புறுத்தல்களுக்கு ஆளான பிள்ளைகளின் பெற்றொர்களை ஒருங்கிணைத்து அந்நாட்டில் வருகிற பிப்ரவரி 25-ம் தேதி கருத்தரங்கு ஒன்றை நடத்தவுள்ளார். இதைத் தொடர்ந்து, இதுமாதிரியான சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறாமல் இருக்க கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டுமென்றும் பல்வேறு மாறுதல்கள் செய்ய வேண்டுமென்றும் அரசுக்கு கோரிக்கை விடுக்க உள்ளார். கேலி மற்றும் துன்புறுத்தல்களுக்கு ஆளாகி மனஉளைச்சலுக்கு உட்பட்டு `அம்மா, நான் இறக்கப்போகிறேனா?’ போன்ற வார்த்தைகளை இன்னொரு சிறுவன் கூறிவிடக் கூடாது என்பதற்காக ஜூலி, கடுமையாகத் தொடர்ந்து போராடி வருகிறார். அவருக்கு ஆதரவுகளும் குவிந்து வருகின்றன.

டிஸ்னிலேண்டு செல்லும் கேலி கிண்டலுக்கு ஆளான சிறுவன்... உலக மக்கள் காட்டிய பாசம்! #Viral
அடுத்த கட்டுரைக்கு