Published:Updated:

`கொரோனா பயமில்லை.. மக்களின் அச்சம்தான் எனது பயம்!' -மில்லியன் மக்களைச் கவர்ந்த மருத்துவரின் பதிவு

மருத்துவர்
மருத்துவர்

``உண்மைகள் பயப்படாது. உங்கள் கைகளைக் கழுவுங்கள். திறந்த மனதுடன் இருங்கள். நம்முடைய குழந்தைகள் பிற்காலத்தில் நமக்கு நன்றி தெரிவிப்பார்கள்" என்றும் பதிவிட்டுள்ளார்.

உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸால் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். மக்களிடையே பரவி வரும் இந்த அச்சத்தைக் கட்டுப்படுத்தவும் கொரோனா வைரஸ் பரவுதலைத் தடுக்கவும் பல நாடுகளும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில், கனடாவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் மக்கள் மத்தியில் நிலவும் கொரோனா அச்சம் தொடர்பாகத் தனது கருத்தினை முகநூல் பதிவாகப் பகிர்ந்துள்ளார். அவரது கருத்துகளை ஒப்புக்கொண்ட மக்கள் பலரும் அவரது பதிவிற்குத் தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர். இந்தப் பதிவு இதுவரை மில்லியன் கணக்கான ஷேர்களையும் லட்சக்கணக்கான விருப்பங்களையும் பெற்றுள்ளது.

I'm a doctor and an Infectious Diseases Specialist. I've been at this for more than 20 years seeing sick patients on a...

Posted by Abdu Sharkawy on Thursday, March 5, 2020

அப்து ஷர்கவி என்ற மருத்துவர் அந்தப் பதிவில் ``நான் ஒரு மருத்துவர். தொற்றுநோய்களுக்குச் சிகிச்சையளிக்கும் நிபுணர். 20 ஆண்டுகளாக நோய்வாய்ப்பட்டவர்களை தினமும் சந்தித்து வருகிறேன். ஆப்பிரிக்காவின் உள்நகரங்களில் இருக்கும் குடிசைப்பகுதிகள் உட்பட பல பகுதிகளிலும் பணியாற்றியுள்ளேன்" எனத் தன்னை அறிமுகம் செய்து கொள்கிறார். எய்ட்ஸ், காசநோய், சார்ஸ், தட்டம்மை உள்ளிட்ட உலகை அச்சுறுத்திய பல கொடிய தொற்றுநோய்களுக்கு சிகிச்சை அளித்துள்ளதாகவும் ஆனால், சார்ஸ் நோயைத் தவிர மற்ற நோய்கள் அதிகமான பயத்தை ஏற்படுத்தவில்லை என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

``கொரோனா வைரஸைப் பார்த்து நான் பயப்படவில்லை" எனத் தொடரும் அந்தப் பதிவில், ``உலகெங்கிலும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை நினைத்துக் கவலைப்படுகிறேன். குறிப்பாக வைரஸால் பாதிக்கப்பட்ட வயதானவர்கள், பலவீனமான ஆரோக்கியம் உடையவர்கள், உரிமையிழந்து நிற்பவர்களை நினைத்துக் கவலை கொள்கிறேன். ஆனால், நான் கொரோனாவைப் பார்த்து பயப்படவில்லை. சமூகத்தில் பொது மக்களிடையே அச்சத்தின் அலை அதிகமாக எழுந்துள்ளதை நினைத்துப் பயப்படுகிறேன்" என்று எழுதியுள்ளார்.

துபாயிலிருந்து திரும்பிய தென்காசி இளைஞருக்கு கொரோனா அறிகுறி? 
-நெல்லை சிறப்பு வார்டில் சிகிச்சை

``என் 95' முகக் கவசங்கள் அதிகமாக மருத்துவமனைகளிலிருந்து திருடப்படுவதை நினைத்துக் கவலைப்படுகிறேன்" என மக்களின் பயத்தைக் குறிப்பிட்டு, ``உண்மையிலேயே முகக்கவசங்கள் சுகாதாரத்துறையினருக்குத் தேவைப்படுகின்றன. ஆனால், அவற்றை மக்கள் விமான நிலையங்கள், மால்கள் ஆகியவற்றில் அணிந்துகொள்கிறார்கள். பயம், மற்றவர்கள் மீது ஏற்படும் சந்தேகத்தை நிலைநிறுத்துகின்றன" எனத் தனது வருத்தத்தைப் பதிவு செய்கிறார்.

தொடர்ந்து அந்தப் பதிவில், ``வைரஸ் பயத்தால் அறிவிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகள் பலரின் திருமண நிகழ்ச்சிகளைப் பாதிக்கும், பலரது பட்டப்படிப்பைத் தடுக்கும், குடும்பங்கள் மீண்டும் சந்திப்பதற்குத் தடையாக இருக்கும் என அச்சப்படுகிறேன். மிகப்பெரிய ஒலிம்பிக் போட்டிகள் கூட நடப்பதற்குத் தடை செய்யப்படும் நிலை அச்சத்தால் ஏற்பட்டுள்ளது. உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? வணிக அளவில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால், அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் நமது பிள்ளைகளிடம் என்ன சொல்லப்போகிறோம் என்பது குறித்து மிகவும் பயப்படுகிறேன். பகுத்தறிவு, திறந்த மனப்பான்மை, நற்பண்புகள் ஆகியவற்றிற்குப் பதிலாகப் பயப்படவும் சந்தேகிக்கவும் சுயநலமாகச் சிந்திக்கவும் கற்றுத்தரப்போகிறோமா" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா
கொரோனா

கொரோனா எங்குமில்லை என்பதைக் குறிப்பிடும் அவர், ``உங்களது நகரத்திற்கோ, நண்பருக்கோ, உங்களுக்கு அருகிலுள்ள ஒரு குடும்பத்தினருக்கோ வைரஸ் தொற்று ஏற்படலாம். வைரஸ் தொற்று ஏற்படும்போது அதிகளவில் தீங்கு ஏற்படாது. ஆனால், நம்முடைய செயல்கள், நமக்காக மட்டுமே போராடும் அணுகுமுறைகள் அழிவை ஏற்படுத்தும். சமூகத்தில் பரவும் எண்ணற்ற நோய்கள் பரவுவதைக் கட்டுப்படுத்துவது குறித்தும் சுகாதாரம் குறித்தும் கற்றுக்கொள்ள நமக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பு இது. மற்றவர்கள் மீதான இரக்கம், அமைதி ஆகியவற்றுடன் அனுமானம், யூகம் மற்றும் பேரழிவுகளுக்கு மாறாக ஒற்றுமையுடன் இந்தச் சவாலைச் சந்திப்போம்" எனப் பதிவிட்டுள்ளார்.

பின்னர், ``உண்மைகள் பயப்படாது. உங்கள் கைகளைக் கழுவுங்கள். திறந்த மனதுடன் இருங்கள். நம்முடைய குழந்தைகள் பிற்காலத்தில் நமக்கு நன்றி தெரிவிப்பார்கள்" என்றும் பதிவிட்டுள்ளார். ``மிகவும் சரியான விஷயத்தைச் சொல்லியுள்ளீர்கள். மக்கள் பலரும் அச்சத்தில் இருக்கும் சூழலில் இந்த மாதிரியான பதிவுகள் ஆறுதல் அளிக்கின்றன" போன்ற கமென்டுகளால் அவருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர் மக்கள். தற்போது வரை சுமார் 1.6 மில்லியன் மக்கள் அவரது பதிவை ஷேர் செய்துள்ளனர்.

அறை எண் 215ல் கொரோனா... ராஜீவ் காந்தி மருத்துவமனை நிலவரம் என்ன? #spotvisit
அடுத்த கட்டுரைக்கு