Published:Updated:

`2400 டன் எடை; 77 மீட்டர் நீளம்; ஓராண்டாக மாயம்!' - அயர்லாந்தில் கரையொதுங்கிய மர்மக் கப்பல்

மர்மக் கப்பல்
மர்மக் கப்பல்

ஒருவருடம் இந்தக் கப்பல் குறித்த எந்தத் தகவலும் இல்லாமல் போனது. இந்த நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரிட்டன் கடற்படையைச் சேர்ந்த வீரர்கள் `நடுக்கடலில் மர்மக் கப்பலைக் கடந்து வந்ததாகத் தெரிவித்தனர்.

அயர்லாந்தின் தெற்குக் கடற்பகுதியில் கார்க் நகரின் அருகே மர்மமான கப்பல் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. கடற்கரையின் அருகில் இருந்த நபர் ஒருவர் இந்தக் கப்பலை அடையாளம் கண்டு அயர்லாந்தின் கடற்படை அதிகாரிகளிடம் கூறியுள்ளார். கடற்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்றை, கப்பலில் யாரேனும் இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் அனுப்பியுள்ளது. கப்பலுக்குச் சென்று திரும்பி வந்த அதிகாரிகள் அது `மர்மக் கப்பல்' என்று தெரிவித்துள்ளனர்.

எம்.வி ஆல்டா என்று பெயரிடப்பட்ட 2400 டன் எடையும் 77 மீட்டர் நீளமும் கொண்ட இந்தக் கப்பலானது 1976-ம் ஆண்டு கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள தான்சானியா எனும் நாட்டிற்குச் சொந்தமாக இருந்துள்ளது. பல வருடங்கள் கடலில் பயணம் செய்துவந்த இந்தக் கப்பலானது 2017-ம் ஆண்டு கிரீஸ் நாட்டிற்குக் கைமாறியது. பின்னர், 2018-ம் ஆண்டு கிரீஸிடமிருந்து ஹைதி வாங்கியது. அட்லாண்டிக் கடலில் 10 கடற்படை வீரர்களுடன் பயணம் செய்துகொண்டிருந்த இந்தக் கப்பல் பெர்முடாவிலிருந்து சுமார் 1,380 மைல்கள் தொலைவில் பழுதாகி நின்றது.

`டைட்டானிக் கப்பல் மொத்தமாக மறைந்துவிடும்'… ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!

அமெரிக்கக் கடற்படை வீரர்கள் இவர்களை மீட்டனர். மேலும், அவர்கள் கப்பலின் உரிமையாளரைத் தொடர்புகொண்டு கப்பலை கரைக்கு மீட்டுக் கொண்டுவர ஏற்பாடு செய்தனர். ஆனால், அதற்கு முன் இந்தக் கப்பல் தென் அமெரிக்காவிலுள்ள கயானா எனும் நாட்டிற்குக் கடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர், ஒருவருடம் இந்தக் கப்பல் குறித்த எந்தத் தகவலும் இல்லாமல் போனது. இந்த நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரிட்டன் கடற்படையைச் சேர்ந்த வீரர்கள் `நடுக்கடலில் இந்தக் கப்பலைக் கடந்து வந்தோம். அதில் யாராவது இருக்கிறார்களா எனத் தொடர்புகொள்ள முயன்றோம். ஆனால் யாரையும் காணவில்லை' என்று தெரிவித்தனர்.

பிரிட்டன் வீரர்களின் தகவலுக்குப் பிறகு இந்தக் கப்பல் மர்மமான ஒன்றாகவே இருந்துள்ளது. ஆல்டா கப்பலானது ஆப்பிரிக்கக் கடலைக் கடந்துவிட்டது, பிரிட்டிஷ் தீவுகளுக்கு அருகிலுள்ள செல்டிக் கடலில் சென்றுகொண்டிருக்கிறது போன்ற உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் அவ்வபோது வெளியாவது உண்டு. கடந்த வாரம் பிரிட்டிஷ் பகுதியில் ஏற்பட்ட கடுமையான சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கின் காரணமாக இந்த ஆல்டா அயர்லாந்தின் கடல்பகுதிக்கு வந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

மர்ம கப்பல்
மர்ம கப்பல்

மர்மக் கப்பல் கரை ஒதுங்கியது தொடர்பாக கார்க் நகர மக்களுக்கு அதிகாரிகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், ``சிதைந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ள கப்பலிடமிருந்து விலகி இருங்கள். ஏனெனில், ஆபத்தான மற்றும் நெருங்க முடியாத சூழலில் நிலையற்ற தன்மையில் உள்ளது அந்தக் கப்பல். சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் கப்பல் குறித்து ஆய்வு செய்ய வருகை தந்துள்ளனர். இந்தக் கப்பலால் எந்தவித மாசுபாடும் இப்போது ஏற்படாது" என்று தெரிவித்துள்ளனர்.

மேலும், ``குறைந்த அலைகள் எழும்போது கப்பலின் அருகே சென்று ஆய்வு செய்ய ஒப்பந்தக்காரர் ஒருவரை அணுகியுள்ளோம். எண்ணெய் மற்றும் பிற ஆபத்தான பொருள்கள் ஏதேனும் உள்ளதா என்றும் கப்பலால் சுற்றுப்புறத்தில் மாசு ஏற்படுமா என்றும் ஆய்வு செய்ய உள்ளோம்" என்று அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

உருக்குலைந்த நிலையில் அயர்லாந்தில் மர்மமான முறையில் ஒதுங்கியுள்ள கப்பல் அப்பகுதியில் உள்ள மக்கள் பலரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

2 தலைகள்... 5 உடல்கள்.. கொரிய எழுத்துகள்.. ஜப்பான் தீவில் கரை ஒதுங்கிய `பேய்ப் படகு'!
அடுத்த கட்டுரைக்கு