Published:Updated:

`5 முறை சாம்பியன்; அடுக்கடுக்கான சாதனைகள்!' - கோப் பிரயன்ட் மரணத்தால் கலங்கும் அமெரிக்கா #KobeBraynt

மகளுடன் கோப் பிரயன்ட்
மகளுடன் கோப் பிரயன்ட்

கோப் பிரயன்ட், பள்ளிப்படிப்பை முடித்த பின்னர் நேரடியாக 1996-ம் ஆண்டு தேசிய கூடைப்பந்து போட்டியில் பங்கேற்றார். மிகவும் இளம் வயதில் என்.பி.ஏ-வில் பங்கேற்றவர் என்ற பெயரையும் பெற்றார்.

அமெரிக்காவின் பிரபல கூடைப்பந்து வீரரான கோப் பிரயன்ட் கலிபோர்னியாவில் நேற்று நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் தன் 13 வயது மகளுடன் பலியானார். உலகின் மிகச்சிறந்த கூடைப்பந்து விளையாட்டு வீரராக அறியப்படும் பிரயன்ட் ஐந்து முறை தேசிய கூடைப்பந்து போட்டியில் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளார்.

கோப் பீன் பிரயன்ட், அமெரிக்காவிலுள்ள பிலடெல்பியா பகுதியில் 1978-ம் ஆண்டு பிறந்தார். பிரயன்டின் அப்பாவான ஜோ பிரயன்டும் மிகச்சிறந்த கூடைப்பந்து வீரர். பிரயன்டின் அப்பாவுக்கு இத்தாலியில் கூடைப்பந்து அணியில் வேலை கிடைத்ததும், குடும்பத்துடன் இத்தாலிக்கு குடிபெயர்ந்தனர். சிறுவயது முதலே பிரயன்டும் கூடைப்பந்து விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். 1991-ம் ஆண்டு அமெரிக்காவுக்கு மீண்டும் வந்த அவர், அங்கு பள்ளிப்படிப்பை முடித்தார். பள்ளிகளில் நடந்த போட்டிகளில் பங்கேற்ற அவர் பல புதிய சாதனைகளையும் செய்தார்.

கோப் பிரயன்ட்
கோப் பிரயன்ட்

பிரயன்டின் பயிற்சியாளர் பைரோன் ஸ்காட் அவரைப் பற்றி கூறும்போது, ``ஒரு நாள் கூடைப்பந்து மைதானத்துக்குச் சென்று பார்க்கும்போது, இருட்டில் கோப் பிரய்ன்ட் பந்தை ஷூட் செய்து கொண்டிருந்தார். சில நிமிடங்கள் அப்படியே உறைந்து நின்றுவிட்டேன். இந்தச் சிறுவன் மிகப்பெரிய ஆளாக வரப்போகிறான் என்று அப்போதே கணித்தேன்" என 2017-ம் ஆண்டு அவர் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில் நெகிழ்ந்து கூறினார்.

பள்ளிப்படிப்பை முடித்த பின்னர் நேரடியாக 1996-ம் ஆண்டு தேசிய கூடைப்பந்து போட்டியில் பங்கேற்றார். மிகவும் இளம் வயதில் என்.பி.ஏ-வில் பங்கேற்றவர் என்ற பெயரையும் பெற்றார். என்.பி.ஏ போட்டிகளில் எண்ணற்ற சாதனைகளை அவர் படைத்தார். 2005-ல் டல்லாஸ் மாவெரிக்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 62-61 என்ற கணக்கில் வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தார். தொடர்ந்து டொரொன்டோ ரேப்டர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 81 புள்ளிகளைப் பெற்றார். கூடைப்பந்து விளையாட்டின் வரலாற்றில் மிக முக்கிய வீரராக இருந்த சேம்பர்லைன், 100 புள்ளிகள் பெற்று யாராலும் நெருங்க முடியாத சாதனையைப் படைத்திருந்தார். என்.பி.ஏ வரலாற்றில் இந்தச் சாதனைக்கு மிக அருகில் நெருங்கிய ஒரே வீரர் பிரயன்ட் மட்டும்தான்.

Vikatan

கோல்டன் ஸ்டேட் வாரியர்ஸ் அணிக்கு எதிராக 2013-ல் நடைபெற்ற போட்டியில் பலத்த காயமடைந்து தசைகள் கிழிந்தபோதும் வெளியேறுவதற்கு முன்னர் இரண்டு த்ரோவை வீசினார். தன்னுடைய காயங்களுக்கு எதிராக பிரயன்ட் போராடியதற்கு மிகச்சிறிய எடுத்துக்காட்டுதான் இந்தப் போட்டி. அமெரிக்க அணி அதிகமான போட்டிகளில் வெற்றிபெற பிரயன்டின் பங்களிப்பு மிக முக்கியமானது.

தன்னுடைய அணியின் மற்றொரு வீரர் ஓ'நீல் உடன் சேர்ந்து விளையாடும்போது 2000-ம் ஆண்டில் தன்னுடைய முதல் சாம்பியன் பட்டத்தை வென்றார். பின்னர், 2009, 2010-ம் ஆண்டுகளில் என்.பி.ஏ சாம்பியன் பட்டத்தைத் தொடர்ந்து பெற்றார். என்.பி.ஏ இறுதிப் போட்டிகளில் அதிக மதிப்புள்ள வீரர் என்ற பெயரை இரண்டு முறையும் சாதாரண சீஸன் போட்டியில் ஒரு முறையும் பெற்றார். ஒலிம்பிக் போட்டியிலும் 2 தங்கப் பதக்கங்களைப் பெற்றுள்ளார். லீக் போட்டிகளில் 33,643 புள்ளிகள் பெற்றிருக்கும்போது, 2016-ம் ஆண்டு போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார்.

கோப் பிரயன்ட்
கோப் பிரயன்ட்

`லவ் லெட்டர் டு ஸ்போர்ட்' என்ற வரிசையில் டியர் பேஸ்கட்பால் என்ற தலைப்பில் கடந்த 2015-ம் ஆண்டு அவர் கவிதை ஒன்றை எழுதினார். இது 5 நிமிடங்கள் ஓடும் அனிமேஷன் குறும்படமாக எடுக்கப்பட்டது. இந்தக் குறும்படத்துக்காக பிரையன்ட் கடந்த 2018-ம் ஆண்டு ஆஸ்கர் விருதும் பெற்றார். சர்வதேச அளவில் புகழ்பெற்ற வீரராக விளங்கிய பிரயன்ட், அதிக சம்பளம் வாங்கும் வீரர்களில் பட்டியலிலும் இடம்பிடித்தார். ஓய்வுக்குப் பின், என்.பி.ஏ போட்டிகளுக்குத் தூதராகவும் செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில், லாஸ் ஏஞல்ஸ் நகரில் நடைபெற இருந்த கூடைப்பந்து போட்டிக்காகத் தன்னுடைய மகள் கெயின்னாவுடன் ஹெலிகாப்டரில் சென்றுள்ளார். அப்போது ஏற்பட்ட விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 9 பேரும் உயிரிழந்தனர். அவரது மரணம் கூடைப்பந்து ரசிகர்களிடம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் நடைபெற்ற கூடைப்பந்து விளையாட்டுகளில் அவருக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, கால்பந்து நட்சத்திரம் நெய்மர் என உலக நாடுகளின் தலைவர்கள் உட்பட அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு