Published:Updated:

‘ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய உறவு’- பிரெக்சிட் ஒப்பந்தம் குறித்து பிரிட்டன் பிரதமர்!

பிரெக்சிட் செயல்திட்டத்துக்கான புதிய உடன்பாடு எட்டப்பட்டிருப்பதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

boris johnson
boris johnson

பொருளாதார காரணங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் (இங்கிலாந்து) விலகுவதாக முடிவெடுத்தது. ஐரோப்பிய யூனியனில் இங்கிலாந்து, ஜெர்மன், இத்தாலி உள்ளிட்ட நாடுகள் உறுப்பு நாடுகளாக உள்ளன. இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளைத் தவிர பிற நாடுகளில் பொருளாதார வளர்ச்சி என்பது பெரிய அளவில் இல்லை. ஐரோப்பிய யூனியனில் உள்ள மக்கள் தங்கள் உறுப்பு நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம். பிரிட்டனில் தொழில் வளம் சிறப்பாக இருப்பதால், பிற நாடுகளைச் சேர்ந்த மக்கள் பிரிட்டனுக்குக் குடியேற ஆரம்பித்தனர். இதனால் பிரிட்டன் மக்களுக்கு வேலைவாய்ப்பு பெறுவதில் சிக்கல் எழுந்தது. மேலும், பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தல் ஏற்பட்டது. இதன் விளைவாக ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.

David cameron
David cameron

அப்போதைய இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனுக்கு இதில் உடன்பாடு இல்லை. அரசியல் அழுத்தங்கள் காரணமாக ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகுவதற்கான பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 51.8 சதவிகிதம் பிரிட்டன் மக்கள் வெளியேறலாம் என்றும், 48.2 சதவிகிதத்தினர் வெளியேற வேண்டாம் என்றும் வாக்களித்தனர். இதையடுத்து, பிரிட்டன் ஐரோப்பிய யூனியனிலிருந்து வெற்றிகரமாக வெளியேறியது. வாக்கெடுப்பில் தோல்வி கண்டால் பதவி விலகுவதாகவும் கேமரூன் அறிவித்திருந்தார். அதன்படி, வாக்கெடுப்பில் தோல்வி கண்டதையடுத்து அவர் பதவியும் விலகினார்.

இதையடுத்து, இங்கிலாந்து பிரதமராக தெரசா மே பதவியேற்றார். ஐரோப்பா யூனியனில் இருந்து பிரிட்டன் சுமுகமாக விலகுவது தொடர்பாக பிரெக்ஸிட் ஒப்பந்தம் கொண்டுவருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. பாதுகாப்பு, எல்லைப் பிரச்னை, வர்த்தகம், போக்குவரத்து,பொருளாதார சிக்கல்கள் போன்றவை இந்த ஒப்பந்தம்மூலம் தீர்க்கப்படும் எனக் கூறப்பட்டது. பிரெக்ஸிட் ஒப்பந்தம் கையெழுத்தாவதில் இழுபறி நீடித்துவந்த நிலையில், தெரசா மே பதவி விலகினார். இதையடுத்து, போரிஸ் ஜான்சன் பிரதமரானார்.

theresa may
theresa may

2015-ம் ஆண்டே பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது. எதிர்ப்பு தெரிவித்த கேமரூனும் பிரதமர் பதவி விலகினார். அதன்பின் பதவியேற்ற தெரசா மே, பதவி விலகிவிட்டார். ஆனால், ஒப்பந்தம் கையெழுத்தானபாடில்லை. பிரெக்ஸிட் ஒப்பந்தத்தில், பிரிட்டனுக்குச் சாதகமான முடிவு எட்டப்படவில்லை என்றால், ஒப்பந்தமின்றியே பிரிட்டன் வெளியேறும் எனத் திட்டவட்டமாக அறிவித்திருந்தார், போரிஸ். ஒப்பந்தமின்றி வெளியேறினால் பிரிட்டன் பல்வேறு சிக்கல்களைச் சந்திக்க நேரிடும் என்பதால், பிரதமரின் இந்த அறிவிப்புக்கு நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்நிலையில்தான் பிரெக்சிட் செயல்திட்டத்துக்கான புதிய உடன்பாடு எட்டப்பட்டிருப்பதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “பிரிட்டன் வசம் முழுக் கட்டுப்பாடும் வரும் வகையில் சிறந்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. வரும் சனிக்கிழமை, பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நடக்கும் கூட்டத்தில் பிரெக்சிட் முடிக்கப்பட வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார். மேலும், இந்தப் புதிய ஒப்பந்தமானது சட்டம், எல்லைகள், வர்த்தகம் போன்றவற்றுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் பிரிட்டன் வசம் முழுக் கட்டுப்பாடு இருப்பதை உறுதிசெய்கிறது. சுதந்திரமான வர்த்தகம் மற்றும் நட்பின் அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு புதிய உறவை ஏற்படுத்துகிறது”என ட்வீட் செய்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் அதிபரான ஜீன் கிளாட் ஜங்கர், “எங்கு விருப்பம் இருக்கிறதோ அங்கு ஒரு ஒப்பந்தம் இருக்கிறது. எங்களுக்கும் ஒரு ஒப்பந்தம் இருக்கிறது. ஐரோப்பா மற்றும் பிரிட்டன் இடையே பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான நியாயமான சுமுகமான ஒப்பந்தமாகும். இதற்கு ஒப்புதல் அளிக்க ஐரோப்பிய ஒன்றியத்தைப் பரிந்துரைக்கிறேன்” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.