Published:Updated:

`கயிறு கொடுங்கள், சாக வேண்டும்!' -நண்பர்கள் கேலியால் மனமுடைந்த சிறுவன்; கரம் நீட்டிய நெட்டிசன்கள்

மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு குறித்து உங்கள் பிள்ளைகள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு கற்றுக்கொடுங்கள். இல்லையென்றால் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்கும்.

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரத்தைச் சேர்ந்தவர், யாராகா பெய்ல்ஸ். இவருக்கு குவாடன் என்ற 9 வயது மகன் உள்ளார். குவாடன், `Achondroplasia' என்ற வளர்ச்சி குறைவு ஏற்படும் நோயால் பாதிக்கப்பட்டவர். இவர், அப்பகுதியிலுள்ள பள்ளி ஒன்றில் படித்து வருகிறார். இவரின் உயரத்தை வகுப்பிலுள்ள சக மாணவர்கள் கேலி செய்து வந்துள்ளனர். இதனால், மனமுடைந்த குவாடன் காரில் கதறி அழும் வீடியோவை அவருடைய தாய் சமூக வலைதளத்தில் வருத்தத்துடன் பகிர்ந்துள்ளார்.

பெய்ல்ஸ் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள வீடியோவில் குவாடன் அழுதுகொண்டே, ``எனக்கு கயிறு கொடுங்கள். நான் சாக வேண்டும். என்னுடைய இதயத்தில் கத்தியால் குத்த வேண்டும்போல் இருக்கிறது. யாராவது என்னைக் கொல்ல வேண்டும் என விரும்புகிறேன்" என்று கூறுகிறார். தொடர்ந்து அழும் குவாடன் மீண்டும், தன்னுடைய கழுத்தைக் கீறுவதுபோல செய்கை செய்து, ``நான் சாக வேண்டும். என்னை நானே கீறிக்கொள்ள வேண்டும்" என்கிறார்.

வீடியோவில் குவாடனின் தாயான பெய்ல்ஸும் பேசுகிறார். அதில், ``என் மகனை பள்ளியிலிருந்து அழைத்துச் செல்வதற்கு முன்பாக அவனைக் கேலி செய்யும் காட்சி ஒன்றைக் கண்டேன். இதனால், ஏற்பட்ட விளைவை மக்களுக்குத் தெரியப்படுத்த விரும்பினேன். மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு குறித்து உங்கள் பிள்ளைகள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு கற்றுக்கொடுங்கள். இல்லையென்றால் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்கும். பிறகு, குழந்தைகள் தற்கொலை பற்றி ஏன் பேசுகிறார்கள் என்று நினைப்பீர்கள்" என்றார்.

நாங்கள் முடிந்தவரை நேர்மறையான எண்ணங்களுடன் வாழ முயல்கிறோம் என தொடர்ந்த பெய்ல்ஸ், ``கேலி என்பது 9 வயது சிறுவனை கல்வி பெறுவது, மகிழ்ச்சியாக இருப்பது என எல்லாவற்றிலிருந்தும் விலக்கி வைக்கிறது. ஒவ்வொரு நாளும் மோசமாக எதாவது நடக்கிறது. ஒவ்வொரு நாளும் தற்கொலை எண்ணத்தோடு வாழும் மகனை நான் பெற்றுள்ளேன்" என்றார். தொடர்ந்து குவாடன் தற்கொலை முயற்சிகள் செய்யும் எண்ணத்தோடு இருப்பதால் அவன்மீது கவனமாக இருந்து பாதுகாத்தும் வருகிறார்.

`கடுமையான எதிர்ப்பிலும் என்னை மணந்தார்!' -உயரம் குறைவான கரூர் இளைஞரைக் கரம்பிடித்த சிவகங்கை பெண்

குவாடன் 6 வயதில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதைக் குறிப்பிட்ட அவரின் தாய், ``எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. தற்கொலை குறித்து அவனுக்கு 6 வயதில் எப்படித் தெரியும்? பின்னர் அதைப் பற்றி அவனுக்கு விளக்கமாகக் கூறினேன். எனினும் அவன் தொடர்ந்து தற்கொலை முயற்சிகள் செய்கிறான். இப்படியான சூழலில் இருந்து மீள தகுந்த ஆலோசனைகளை இந்த வீடியோவைப் பார்த்துக்கொண்டிருப்பவர்கள் வழங்க வேண்டும். நிறைய ஆலோசனைகளைப் பெற்றுவிட்டேன். இன்னும் வேண்டும். இந்த மாதிரியான சம்பவங்களால் ஒரு குடும்பம் எவ்வாறு மன உளைச்சலுக்கு ஆளாகிறது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.

இந்த வீடியோவை நெட்டிசன்கள் பலரும் பகிர்ந்து தங்கள் ஆறுதல்களையும் அன்பையும் தெரிவித்து வருகின்றனர். மேலும், மாற்றுத்திறனாளிகள் குறித்த விழிப்புணர்வு தொடர்பாகவும் பேசி வந்தனர். இந்தச் செய்தி ஆஸ்திரேலியாவின் ரக்பி வீரர்களின் கவனத்துக்குச் சென்றுள்ளது. குவாடனை இந்த வீரர்கள் தங்களுடைய மைதானத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். முன்னதாக, குவாடனுக்கு தங்களுடைய ஆதரவைத் தெரிவித்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தனர்.

குவாடன்
குவாடன்

அந்த வீடியோவில், ``ஹே குவாடன்... நீ மிகவும் கஷ்டமான நாள்களை அனுபவித்து வருவது எங்களுக்குத் தெரியும். ஆனால், நாங்கள் உனக்காக இருக்கிறோம். இந்த வாரம் எங்கள் அணியை நீதான் வழிநடத்த வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். இதனால், உன்னைவிட நாங்கள்தான் அதிகமாகப் பயன்பெறப் போகிறோம். உன்னைக் கவனித்துக்கொள். இரண்டு நாள்களில் நாம் சந்திப்போம்" என்று கூறி குவாடனை உற்சாகப்படுத்தினர்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜெராட் உர்க்ஹார்ட் என்பவர் டெய்லி மெயில் ஊடகத்தின் வழியாக குவாடனுக்கு உதவி செய்ய விரும்புவதாக விருப்பம் தெரிவித்து, இதுதொடர்பாக பேசுகையில், ``சிறுவன் மனம் உடைந்திருப்பதை பார்க்கும்போது என்னுடைய இதயம் உடைகிறது. நான் எப்படி உங்களுக்கு உதவ வேண்டும்? நான் என்னுடைய குழந்தைகளிடம் குவாடனுடன் நண்பராக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளேன். எப்படியாவது இந்தக் குழந்தைக்கு உதவி செய்தால், தனிமையை உணரமாட்டான். தன்னை கஷ்டப்படுத்திக்கொள்ள மாட்டான்" என்று தெரிவித்துள்ளார்.

நெட்டிசன்களின் இதயங்களை வென்ற சிறுவன்.. மீண்டும் கவனம் ஈர்த்த `பேபி மப்ளர்மேன்'!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``உலகில் நன்மைகள் இருக்கிறது. அனைவரும் அதற்கு தகுதியானவர்கள்தான் என்பதை குவாடனுக்கும் மற்றவர்களுக்கும் காட்டுவோம். குவாடனும் அவரின் தாயும் அமெரிக்கா வர வேண்டும். நல்ல ஹோட்டலில் அவர்கள் தங்க வேண்டும். டிஸ்னி லேண்டுக்குச் செல்ல வேண்டும்" என்றுகூறி அமெரிக்காவைச் சேர்ந்த வில்லியம்ஸ் என்ற நகைச்சுவையாளர் பணம் சேகரித்து அனுப்பியுள்ளார். வில்லியம்ஸும் இத்தகைய நோயால் பாதிக்கப்பட்டவர்தான்.

குவாடன் தன் தாயுடன்
குவாடன் தன் தாயுடன்

`ஸ்காட்லாந்திலிருந்து உனக்காக எனது அன்பை அனுப்பி வைக்கிறேன்', `ஸ்வீட் பாய்.. உனக்குக் கலிபோர்னியாவில் நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள்', `ஹே குவாடன்.. உன்னைப் பற்றித்தான் நினைத்துக்கொண்டிருக்கிறேன். உனக்காக லண்டலிருந்து எனது அன்பை அனுப்புகிறேன்' என உலகம் முழுவதிலும் இருந்து குவாடனுக்கு மில்லியன் கணக்கில் அன்புகள் குவிந்து வருகின்றன. #iStandWithQuaden என்ற ஹேஷ்டேக்கும் ட்விட்டரில் வைரலாகி வருகிறது.

`அம்மாவுக்கு ஏதாவது ஒண்ணுன்னா சும்மா இருக்க மாட்டேன்!' -வைரலாகும் சீனா சிறுவன்! #ViralVideo
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு