Published:Updated:

`9 நாள் சிறைவாசம் வாழ்வின் திருப்புமுனை!’ -வடகொரிய அனுபவங்கள் பகிர்ந்த ஆஸ்திரேலிய மாணவர்

அலெக் சிக்லே
அலெக் சிக்லே

கைது செய்யப்பட்டு ஒன்பது நாள்களுக்குப் பிறகு அலெக் சிக்லே விடுவிக்கப்பட்டார். கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்களில் மிகக் குறுகிய காலத்தில் விடுதலை செய்யப்பட்டவர் இவர்தான்.

அலெக் சிக்லே எனும் ஆஸ்திரேலியா மாணவர் வடகொரியாவின், பியோங்கியாங் கிம் இல் சங் பல்கலைக்கழகத்தில் இவர் நவீன கொரிய இலக்கியம் பயின்று வந்தார். கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் திடீரென காணாமல் போனார். இந்த செய்தி சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பின்னர், அலெக் வடகொரியா அரசின் பிடியில் இருப்பதாக தகவல்கள் வெளியானது.

ஆஸ்திரேலியா நாட்டுக்கு வடகொரியாவில் வெளியுறவு பிரதிநிதித்துவம் இல்லை. எனவே, ஸ்வீடனிடம் உதவியை நாடியது. ஸ்வீடன், தூதரை அனுப்பி பேச்சுவார்த்தை நடத்தியது. கைது செய்யப்பட்டு ஒன்பது நாள்களுக்குப் பிறகு அலெக் சிக்லே விடுவிக்கப்பட்டார். அந்நாட்டில் கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்களில் மிகக் குறுகிய காலத்தில் விடுதலை செய்யப்பட்டவர் இவர்தான்.

அலெக் சிக்லே
அலெக் சிக்லே

விடுதலையான அலெக், எதற்காக கைது செய்யப்பட்டார் என்கிற குழப்பம் அனைவருக்கும் இருந்தது. இதுதொடர்பாக வடகொரிய ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில், ``அலெக் என்ற மாணவர் வடகொரிய அரசை உளவு பார்த்தார். இதனை அவர் ஒப்புக்கொண்டார். மேலும், வடகொரிய இறையாண்மையையும் மீறி உள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளனர். வடகொரிய அதிகாரிகள் அவரை மனிதாபிமானத்தின் அடிப்படையில் விடுவித்ததாகவும் கூறியுள்ளனர்.

விடுதலைக்குப்பின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ``என் இதயத்தில் சிறப்பான இடத்தைப் பிடித்திருக்கும் பியோங்கியாங்கின் தெருக்களில் இனி ஒருபோதும் நான் நடக்கப்போவதில்லை. எனது நெருங்கிய நண்பர்களையும் ஆசிரியர்களையும் ஒருபோதும் சந்திக்கப்போவதில்லை. ஆனால், இதுதானே வாழ்க்கை” என்று வருத்தத்துடன் பதிவிட்டார். வடகொரியாவுக்குள் அவர் நுழையத் தடை விதிக்கப்பட்டது.

Vikatan

இந்நிலையில், அலெக் சிக்லே சில நாள்களுக்கு முன்பு வெளியான தென்கொரியாவின் மாதாந்திர கல்வி இதழுக்கு கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில், ``ஒன்பது நாள் விசாரணையின்போது அவர்கள் கூறும் குற்றத்தை ஒப்புக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன். வெளி உலகத்திலிருந்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டிருந்தேன். என்னைப் பொறுத்தவரையில் நான் குற்றவாளி அல்ல. அதிகாரிகள் என் மீது பொய்யாக குற்றம்சாட்டினர். அவர்கள் எனக்கு பாடம் கற்பிக்க எண்ணியிருப்பார்கள் என்று நினைக்கிறேன். ஏனெனில், தொடர்ந்து என்னை மன்னிப்புக் கடிதங்களை எழுதும்படி வற்புறுத்தினர். ஆனால், உடல்ரீதியாக என்னைத் துன்புறுத்தவில்லை. நான் கைது செய்யப்பட்டது, என் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது” என்று எழுதியுள்ளார்.

அலெக் சிக்லே
அலெக் சிக்லே

அலெக்கின் இந்த கட்டுரை வடகொரியாவை சர்ச்சைக்கு உள்ளாக்கியுள்ளது. வடகொரியாவின் மீது விமர்சனங்களும் தொடர்ந்து எழுந்து வருகின்றன.

சிக்லி சரளமாக கொரிய மொழி பேசக்கூடியவர். தனிமையான நாடுகளுக்கு சுற்றுப்பயணங்களை மேற்கொள்வதில் ஆர்வம் உடையவர். பியோங்கியாங்கில் அவர் வசித்துவந்தபோது, உலகின் மிக ரகசியமான நாடுகளில் ஒன்றான வடகொரியாவின் வாழ்க்கை முறைகளைப் பற்றி சமூக வலைதளங்களில் அரசியல் சார்பற்ற பதிவுகளை பதிவு செய்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

`ஹிரோஷிமாவில் வீசப்பட்டதைவிட 17 மடங்கு அதிகம்!' -இஸ்ரோவை அதிரவைத்த வடகொரியா அணுஆயுத சோதனை ஆய்வு
அடுத்த கட்டுரைக்கு