`துண்டுப் பிரசுரம், பலூன்; தகர்க்கப்பட்ட தகவல் தொடர்பு அலுவலகம்!’ -வட-தென் கொரிய எல்லை பதற்றம்

``பல திருப்பங்கள் இருந்தாலும் இறுதியில் கடலை அடையும் நதியைப் போல, வட மற்றும் தென் கொரியா நம்பிக்கையை நிலைநிறுத்தி அமைதி மற்றும் நல்லிணக்கத்தை நோக்கி ஒவ்வொரு அடியையும் எடுத்துவைக்க வேண்டும்”
வட கொரியா மற்றும் தென் கொரியாவுக்கு இடையே கடந்த சில வாரங்களாக அதிகளவில் பதற்றம் நிலவிவந்தது. இதையடுத்து, வடகொரிய அதிபரான கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ ஜாங், ஆளும் தொழிலாளர் கட்சியின் மத்தியக் குழுவின் துணைத்தலைவர் கிம் யோங் சோல் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகளும் தென்கொரியாவுடனான தொடர்புகள் அனைத்தையும் முடித்துக்கொள்ள வேண்டும் என்று தீர்மானம் ஒன்றை எழுப்பியதாகவும் தென்கொரியாவுக்கு எதிரி நாட்டு அந்தஸ்தைக் கொடுக்க வேண்டும் என்று கூறியதாகவும் தகவல்கள் வெளியாகின.
இரு நாடுகளுக்கும் இடையிலான தகவல் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டன. இதையடுத்து, ராணுவத் தாக்குதல் நடத்தப்படும் என்றும் தென்கொரியாவுக்கு வடகொரியா கடுமையான எச்சரிக்கையை விடுத்தது. இந்தநிலையில், தற்போது இரு நாடுகளுக்கும் எல்லையில் உள்ள தகவல் தொடர்பு அலுவலகத்தை வடகொரியா தகர்த்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரு நாடுகளுக்கும் எல்லையில் உள்ள கேசாங் எனும் பகுதியில் இந்தத் தகவல் தொடர்பு அலுவலகம் அமைந்துள்ளது. இருநாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்த இந்த அலுவலகத்தைப் பயன்படுத்தி வந்துள்ளனர். நான்கு மாடியில் அமைந்துள்ள இந்தக் கட்டடமானது அந்நாட்டின் நேரப்படி பிற்பகல் 2:50 மணியளவில் தகர்க்கப்பட்டுள்ளது. கறுப்புப் புகை அதிகமாக அப்பகுதியில் எழுந்துள்ளதைப் பார்த்த தென்கொரிய அதிகாரிகள் இந்தச் சம்பவத்தை உறுதி செய்துள்ளனர்.
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த ஜனவரி 30-ம் தேதி முதல் இந்த அலுவலகம் மூடப்பட்டுள்ளது. இதனால், தென்கொரிய ஊழியர்கள் தங்களுடைய பணிக்கு வரவில்லை எனத் தென்கொரிய அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால், பேச்சுவார்த்தை நடத்தும் கட்டடம் தகர்க்கப்பட்டிருப்பது கடுமையான எச்சரிக்கைக்கான அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது. மேலும், வடகொரியாவில் தற்போது ராணுவமும் தயார் நிலையில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இருநாடுகளும் சமாதான உடன்படிக்கைகளைச் செய்துகொண்டன. தொடர்ந்து பல்வேறு ஒப்பந்தங்களையும் இந்த நாடுகள் மேற்கொண்டன. இந்த நிலையில், தற்போது நடந்துள்ள சம்பவம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் ஏற்பட்டுள்ள திருப்புமுனையைக் குறிப்பிடுவதாக உள்ளது. வடகொரியாவிலிருந்து தப்பித்து தென்கொரியாவுக்கு வந்தவர்கள், வடகொரியாவின் ஆட்சிக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்ட துண்டு பிரசுரங்கள் மற்றும் பலூன்களை வடகொரியா எல்லைக்குள் அனுப்பும் செயல்களைக் கண்டிக்கும்விதமாக கட்டடத்தைத் தகர்த்து வடகொரியா தனது எச்சரிக்கையைப் பதிவு செய்துள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடகொரிய அரசின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான கே.சி.என்.ஏ, சில நாள்களுக்கு முன்பு வெளியிட்ட அறிக்கையில், `தென்கொரியாவின் முட்டாள்தனமான செயல்கள் வடகொரியாவின் தலைமை அதிகாரிகளின் கௌரவத்தைப் புண்படுத்தும்விதமாக உள்ளது. அவர்களுக்கு உரிய தண்டனையை மக்கள் வழங்குவார்கள். அவர்களின் மோசமான நடவடிக்கைகள் பூமியிலிருந்து துடைத்து எறியப்படும். இதனை உலகம் தெளிவாகப் பார்க்கும்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இருநாடுகளும் தங்களுக்கு எதிரான அனைத்துவிதமான நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்றும் துண்டுப் பிரசுரங்கள், ஒலி பெருக்கிகள் ஆகியவற்றின் மூலம் எதிர்ப்புகளைப் பதிவு செய்வதையும் நிறுத்த வேண்டும் என்று 2018-ம் ஆண்டில் ஒப்புக்கொண்டது.
இதனையடுத்து தற்போது தகர்க்கப்பட்ட அலுவலகம் அப்போது புதுப்பிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தை தென்கொரியா மீறிவிட்டதாக வடகொரியா குற்றம் சாட்டியது. இதனைத் தொடர்ந்து ``நீண்ட காலத்துக்கு முன்னர் பயனில்லாமல் இருந்த தகவல் தொடர்பு அலுவலகம் இடிந்துவிழும் சோகமான காட்சியைக் காணக்கூடும்” என்று கிம் ஜாங் உன்னின் சகோதரி எச்சரிக்கையும் விடுத்தார்.
துண்டுப் பிரசுரங்களை எல்லைக்குள் அனுப்புவது வடகொரிய ஆட்சியாளர்களுக்குக் கடுமையான கோபத்தை ஏற்படுத்தும் எனச் சில நிபுணர்கள் கூறுகின்றனர். இந்தப் பிரச்னையைப் பயன்படுத்தி நெருக்கடியான ஒரு நிலையை ஏற்படுத்தவோ அல்லது அமெரிக்கா மற்றும் தென்கொரியாவுக்கு இடையே முரண்பாடுகளை ஏற்படுத்தவோ வடகொரியா முயற்சி செய்வதாக நிபுணர்கள் தங்களது கருத்தை வெளிப்படுத்தியுள்ளனர். எனினும், துண்டுப் பிரசுரங்களை அனுப்பியவர்கள் குறித்த விசாரணைகளையும் தென்கொரிய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், அவர்கள் மீது வழக்குகளைப் பதிவு செய்வது ஜனநாயக ரீதியில் விமர்சனங்களை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.

முன்னதாக தென்கொரிய அதிபர் மூன் ஜே இன், ``இரு கொரிய நாடுகளும் நடந்து செல்ல வேண்டிய பாதை தெளிவாக உள்ளது. பல திருப்பங்கள் இருந்தாலும் இறுதியில் கடலை அடையும் நதியைப் போல, வட மற்றும் தென் கொரியா நம்பிக்கையை நிலைநிறுத்தி அமைதி மற்றும் நல்லிணக்கத்தை நோக்கி ஒவ்வொரு அடியையும் எடுத்துவைக்க வேண்டும். அது மெதுவாகவும் இருக்கலாம்.
கொரிய நாடுகளில் அமைதி தொடர்பான வாக்குறுதியை நானும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் 80 மில்லியன் மக்களுக்கு முன்பாக அளித்தோம்” என்று கூறினார்.
எனினும், இன்று தகவல் தொடர்பு அலுவலகம் தகர்க்கப்பட்டது. பிரச்னையை இன்னும் கடுமையாக்கலாம் என்று தங்களது அச்சத்தையும் பதிவு செய்து வருகின்றனர்.